புதன், 10 பிப்ரவரி, 2010

கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது யார்?

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் குரலாக ஒலிக்கப் போகிறதா என்பது அதில் முதன்மையானது. இதற்குக் காரணம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணிசார்ந்து நின்றதும் பிரசாரத்தில் இறங்கியதுமே. சரத் பொன்சேகாவுக்கு சார்பாக- எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை தமிழ்மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல்வேறு சவால்கள் இப்போது காத்திருக்கின்றன. ஆதில் ஒன்று உட்கட்சிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. அடுத்தது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்குவது. நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைக் காலமாக பல்வேறு குரல்கள் முரண்பாடான கருத்துகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் -அவர்களால் வழிநடத்தப்பட்ட கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் போக்கிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அதுபோலவே அதன் பல எம்.பிக்களின் போக்கிலும் மாற்றங்கள் தென்பட்டன. பலர் தமது உண்மை முகத்தைக் காண்பித்ததே இந்தக் காலப்பகுதியில் தான். முதலில் வன்னி மாவட்ட எம்.பியான வினோ நோகராதலிங்கம் அரசாங்கத்துக்கு ஆதரவாக இயங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களைப் பற்றி சர்வதேசமே கவலையும் கண்டனமும் தெரிவித்துக் கொண்டிருந்த போது- அந்த முகாம்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் இவர் கருத்துகளை முன்வைத்திருந்தார். இதுவே அவர் பற்றிய செய்திகளுக்குக் காரணமாக அமைந்தது.பின்னர் அவர் ஒதுக்கிக் கொண்டார். அதற்குப் பிறகு மற்றொரு வன்னி எம்.பியான சிவநாதன் கிஷோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அத்துடன் அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசுக்குச் சார்பாகவே வாக்களித்தும் வருகிறார். இன்னொரு வன்னி மாவட்ட எம்.பியான கனகரட்ணம. எட்டு மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து அண்மையில் தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்குச் சார்பாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுயவிருப்பின் பேரிலோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ மகிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக சில மேடைகளில் அவர் தோன்றியது உண்மை. அதுபோலவே, வேறும் பல எம்.பிக்கள் அரசுக்கு சார்பாகச் செயற்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கத்தில் ஐதேகவுக்கு சார்பாக செயற்படும் அணியொன்றும் அண்மைய ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிப்பட்டது. அதுவே வலுவானதாக மாற்றம் பெற்றதால் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தது. இந்த அணிகள் இரண்டுக்கும் நடுவே எந்தத் தரப்பையும் சார்ந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் ஒரு அணியும் கூட்டமைப்புக்குள் இருக்கிறது. ஆக மொத்தத்தில் மூன்று முக்கிய அணிகளாக கூட்டமைப்பு பிரிந்து நிற்கிறது. இந்த மூன்று அணிகளும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் தான் அது வடக்கு,கிழக்கில் ஏனைய தரப்புகளுக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம்பெற முடியும். வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போதும் ஆதரவு குறைந்து போகவில்லை என்பது உண்மையே. என்றாலும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகள் மக்களிடதில் கேள்விகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தி வருவது என்பது மறுக்க முடியாத விடயம். தற்போது மூன்று கருத்துகளுடன் இருக்கும் கூட்டமைப்புக்குள் இருக்கும் குழப்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கு முயற்சிகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. அண்மையில் சிவாஜிலிங்கத்தையும் சிறிகாந்தாவையும் கூட்டமைப்பு ஒதுக்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் சிவாஜிலிங்கமும், அவருக்குத் துணை நின்றதால் சிறிகாந்தாவும் ஓரம் கட்டப்பட்டனர். அடுத்த பொதுத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும தகவல். தமது கட்சியின் முடிவுகளுக்கு முரணாக நடந்து கொண்ட இரு எம்.பிக்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பமாட்டாது என்று சம்பந்தன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் அவர்கள் யார் என்று அவர் கூறவில்லை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்த கூட்டமைப்பு கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிவநாதன் கிஷோர் குறித்து வாய் திறக்கவேயில்லை. இந்தக் கட்டத்தில் மூன்று பிரிவுகளாகச் செயற்படும் கூட்டமைப்பு அடுத்த பொதுத்தேர்தலில் சந்திக்கப் போகும் சவால்கள் ஏராளம் உள்ளன. அதைச் சமாளிப்பதற்கு முன்னர் கட்சியில் உள்ள பிரச்சினைகளை அது சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது அதன் முன் உள்ள மிகமுக்கியமான சிக்கல். அதாவது வேட்பாளர் தெரிவு என்று வரும் போது நான்கு கட்சிகளுமே திசைக்கு ஒன்றாக நின்று கொண்டு ஒன்றையொன்று விழுங்கித் தின்னத் தயாராக இருக்கின்றன. அதைவிட கட்சி சாராத வேட்பாளர்களும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்களே அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றனர். அதற்கு விடுதலைப் புலிகளின் செல்வாக்கே காரணம் என்ற குற்றச்சாட்டும இருக்கவே செய்கிறது. விடுதலைப் புலிகள் இல்லாது போயுள்ள நிலையில் கட்சிசாராத அரசியல்வாதிகளின் நிலை என்னவென்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்துக்கு கூட்டமைப்பு வந்திருக்கிறது. இந்த முடிவு எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏதாவதொரு பக்கத்தில் அதிருப்திகள் ஏற்படுமானால் அது கூட்டமைப்புக்குள் பெரும் குழப்ப நிலையை உருவாக்கும். கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதும் இதேபோன்ற சிக்கல்கள் வரவே செய்தன. பல வேட்பாளர்களை நிறுத்துவதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு புலிகள் தலையிட்டு தீர்வு காண நேரிட்டது. குறிப்பாக, தமிழ்க் காங்கிரசின் அப்பாத்துரை வினாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் செல்வாக்கு இருந்தது . ஏற்கனவே யாழ்.மாவட்ட எம்.பியான இருந்தபோதும், அவருக்கு அங்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபோன்று பல விடயங்களில் புலிகளின் தலையீடுகள் இருந்தன. இப்போது அப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பதற்கு வெளியே இருந்து யாரும் வரப் போவதில்லை. அது கூட்டமைப்புக்குள் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தச் சிக்கல்களை சமாளித்தால் தான் கூட்டமைப்பால் பொதுத்தேர்தலை சவால்களின்றிச் சந்திக்க முடியும். அதேவேளை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கும் சில கருத்துகள் தமிழ் மக்களிடத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. அவர் சிங்கள மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெறுவதற்காக வெளியிடும் சில கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன. இது முக்கியமானதொரு தருணம். தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றால் தான் அவர்களின் வாக்கு பலத்தில் மீளவும் நாடாளுமன்றம் செல்ல முடியும். சிங்களத் தலைமைகளுக்கு- சிங்கள மக்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய வகையில் பேசி அவர்களின் விசுவாசிகள் போன்று காண்பிக்க முனைந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இந்தக் கட்டத்தில் உட்கட்சிப் பிரச்சினையாயினும் சரி- தமிழ் மக்களின் பிரச்சினையாயினும் சரி கூட்டமைப்பு எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதில் தான் அதன் அரசியல் எதிர்காலம் அமையப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக