புதன், 10 பிப்ரவரி, 2010

கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும்!

சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர் கண்டி மாநகரில் ஆற்றியிருந்த உரை குறித்த விபரங்களும்,அதுபற்றிய ஆசிரியத் தலையங்கங்களும் வெளியாகியிருந்தன. இலங்கையில் எந்தக் கட்சி அரசு அமைத்தாலும், அந்த அரசுக்குச் சாதகமான செய்திகளையும், அதன் திட்டங்களை ஆதரித்து தலையங்கங்களைத் தீட்டுவதிலும் ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான தமிழ்-ஆங்கில-சிங்கள ஏடுகள் என்றும் பின்னிற்பதில்லை. ஒருவகையில் அரசின் ‘ஊதுகுழல்’களாகச் செயல்படும் இப்பத்திரிகைகள் இந்த முறையும் தங்கள் கடமையினைச்(?) செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றன. இக் குழுமத்தில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான ‘தினகரனு’ம் தன் பங்குக்கு ஆசிரியத் தலையங்கமும், செய்திகளும் வெளியிடத் தவறவில்லை. தமிழ் நாட்டின் தினகரன் எவ்வாறு தி.மு.க வின் ‘புகழ் பாடுவதில்’ அதிக சிரத்தையுடன் செயல்படுகிறதோ அந்தளவு சிரத்தையுடன் இலங்கை அரசு செய்யும் அத்தனை செயல்களையும் ‘கண்ணை மூடிக் கொண்டு’ ஆதரிப்பது இந்தத் ‘தினகர’னின் கடமைகளில் ஒன்று! இலங்கையின் பொருளாதாரம், சமூகச் சட்டங்கள், வெளியுலகத் தொடர்புகள் அல்லது நிர்வாக அலகுகள் தொடர்பான பிரச்சனைகளை எழுதும்போது, அவை அங்கு வாழும் இரு தேசிய இனங்களான தமிழ்-சிங்கள மக்களது பொதுவான எண்ணங்களைப் பிரதிபலிப்பனவாக அமைந்திருப்பதில் தப்பேதும் கிடையாது. அவை அவ்வாறு அமைவது தேவையானதுங்கூட. ஆனால், ஓர் இனம் சம்பந்தப்பட்ட- அதுவும், ‘சிறுபான்மை’ இனம் எனச்சொல்லப்படும் ‘தமிழ்த் தேசிய இனம்’ பற்றிய சர்ச்சைகள் உருவாகும் சமயங்களில், ஒரு தமிழ் நாளிதழ் தனது தலையங்கத்தில், அரசினைத் துதிபாடுவதும், பாதிப்புற்றுக் கிடப்பவர்களுக்கு மட்டும் ஒற்றுமை குறித்து ஆலோசனைகளை வழங்குவதும் வேடிக்கையாக இருக்கிறது பெப் 5 தேதியிட்ட தினகரனின் தலையங்கம்- மகிந்த ராஜபக்‌ஷவின் ‘சுதந்திர தின’ உரையினை… ஆஹா…ஓஹோ.. எனப் புகழ்ந்திருக்கிறது! நாட்டின் அதிபரது பேச்சினைப் புகழ்ந்து எழுதும் கடமை ஓர் இதழுக்குக் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம் …….. தாராளமாக எழுதலாம்… அவரது உரையில் உள்ள நியாயமான கருத்துகளை வலியுறுத்தி எழுதுவது தவறல்ல. ஆனால், அவர் தமது உரையின்போது தெரிவித்த தமிழ்த்தேசிய இனம் குறித்த தகவல்களை, ஓர் தமிழ்ப்பத்திரிகை- அதுவும் தமிழர்களால் வாசிக்கப்படுவதற்காக அச்சிடப்படும் ‘தமிழ்ப் பத்திரிகை’ – அவரது உரையினை நேரடியாகக் கண்டித்து எழுதாவிடினும், அதனை மறைமுகமாகவேனும், சம்பந்தப்பட்டவருக்கும் அவரது இனத்தினருக்கும் உணர்த்தும் வகையில் எழுதுவதை யாரும் ஜனநாயக விரோதம் என்று கூறிவிடப் போவதில்லை. இலங்கையின் பௌத்தமத பீடம் என வர்ணிக்கப்படும், தலதா மாளிகை இடம்பெற்றிருக்கும், கண்டியில் இலங்கையின் 62 வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய அதிபர் தமது உரையின்போது… இடையே தமிழிலும் உரையாற்றியதன் மூலம், தாம் தமிழருக்கு விரோதியல்ல(!) என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் எனக் குதூகலிக்கும் சிலர்.. அவர் சொன்னவற்றில் பொதிந்துள்ள உட்பொருளை ஆராயவோ அல்லது அது பற்றிக் கருத்துரைக்கவோ முன்வரவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ இதற்கு விதிவிலக்காகத் தனது தலையங்கத்தில், அதிபரது பேச்சு குறித்த வேதனையைத் தெரிவித்திருக்கிறது. தனக்கெனத் தனி நாடு கேட்டுப் போராடிய ஓர் தேசிய இனத்துக்கு,’கிராம’ அபிவிருத்திமூலம் உரிமைகளை அளிக்கப்போவதாகக் கூறும் ஓர் நாட்டின் அதிபரால், அங்கு நிலவும் இனப்பிரச்னக்குத் தீர்வுகாண இயலுமா என்னும் சந்தேகத்தை அவ்வேடு வெளியிட்டிருக்கிறது! இலங்கை அதிபர் தமது உரையில் – அந்நாட்டில் பல வருடங்களாக தமிழ் மற்றும் சிங்கள தேசிய இனங்களுக்கிடையில் நிலவிவரும் இன-அரசியல் முரண்பாடுகள் குறித்தோ அதனைத் தாம் எவ்வாறு தீர்த்துவைக்கப் போகிறார் என்பது பற்றியோ எந்தக் கருத்தினையும் கூறவில்லை. மாறாக- அங்கு ‘சிறுபான்மை இனம்’ என்று ஓரினம் இல்லை என்றும் , அனைவரும் ‘இலங்கையரே’ என்றும்; முப்பது வருட காலமாக அந்நாட்டில் நிலவிவந்த ‘பயங்கரவாதத்தை’ ஒழித்து ( இதில் சரத் பொன்சேகாவுக்கும் கணிசமான பங்கிருக்கிறது என்பதை ஏனோ சொல்லாமல் விட்டுவிட்டார்) நாட்டை ஒற்றுமைப் படுத்திவிட்டதாகவும் கூறியவர், இனிமேல் கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் பிரகடனஞ் செய்திருக்கிறார். இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என அடித்துக் கூறும் ராஜபக்‌ஷே, அங்கு சிங்களமும் பௌத்தமும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள மொழியும், மதமும் என்பதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துக் கொண்டு, இலங்கை ஒரேநாடு எனபதன் அர்த்தம்தான் புரியவில்லை. அங்கு மூவாயிரம் வருடங்களாக – சிங்கள வம்சம் அந்நாட்டில் துளிர்விடுவதற்கு முன்பாகவே – அங்கு தனக்கெனப் பிரதேசத்தையும், மொழியினையும், பண்பாட்டினையும் கொண்டிருக்கும் ஓர் தேசிய இனம்; ஒன்றுபட்ட இலங்கை என்னும் பேரால்— சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் ஏற்றுக்கொண்டு சிங்கள – பௌத்தர்களாக மாறிவிடுவதே இனப்பிரச்னைக்குத் தாம் வைத்திருக்கும் தீர்வு என்கிறாரா அதிபர்? இவற்றையெல்லாம்….. வெளிப்படையாக உரத்துக் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மை இனம் தமிழர்கள்மீது சீற்றம் கொண்டுவிடும், எனவே ‘அடக்கி வாசியுங்கள்’ என்று ஆலோசனை வழங்குகிறது அரசின் ‘ஊதுகுழ’லான தமிழ்ப் பத்திரிகை ஒன்று. கடந்த முப்பது வருடங்களாகப் பயங்கரவாதம் இருந்தது என்று ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும் அதற்கு முன்னர், சுதந்திரம் பெற்றதிலிருந்து முப்பத்திரண்டு வருடங்களாக அங்கு ஜனநாயக வழிகளில்தானே தமிழர்கள் போராடிவந்தார்கள். அப்போதும், இன்று போலவே வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் யாவரும் ஓரணியில் நின்று, எமது அரசியல் உரிமைகள் சிங்கள அரசால் மறுக்கப்படுகின்றன. அவற்றுக்கு உரிய தீர்வினை ஆளும் பெரும்பான்மை அரசு வழங்கவேண்டும் என அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில், இன்று சிங்களத்தை ஆள்வதற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கும், யூ.என்.பி யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறிமாறி ஆட்சியில் இருந்தன. அவை ஆட்சிபீடம் ஏறிய சமயங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும், பின்னர் அவற்றைக் கிழித்து வீசுவதும் என்றுதானே காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்? அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அளித்த வேதனையாலும், மறுபக்கம் தமிழர்களது வாழ்வாதார உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு, காலத்துக்குக் காலம் நிகழ்ந்த இனக்கலவரங்களால் தமிழன் என்றாலே அஞ்சிவாழும் நிலையத் தவிர வேறு வழியேகிடையாது என்னும் நிலை உருவாகிய போது பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டதே ஆயுதப் போராட்டம். உண்மையில், தமிழ்த்தேசிய இனத்தினை ஆயுதப் போராட்டத்தில் உந்தித்தள்ளியதில் பெரும்பான்மைச் சிங்கள அரசுகளுக்குச் சம்பந்தம் கிடையாதா? தமிழ்ப் பயங்கரவாதம் இருந்த சமயத்திலா… 1956ல் உருவான ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிங்கள-தமிழ் இனக்கலவரம் வெடித்தது ? 1977 ல் மலையகத்தமிழர்கள் பல நூற்றுவர் கொல்லப்படக் காரணமாக விளங்கிய இனக்கலவரம், தமிழ்ப் பயங்கரவாதத்தினாலா நிகழ்ந்தது ? 1981ல் தமிழர்களது அரிய பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதற்குத் தமிழ்ப் பயங்கரவாதந்தான் காரணமா? அதிகம் ஏன், 1983 ல் உலகமே அதிர்ச்சியடையும் இனக்கலவரத்தின் சூத்திரதாரிகள் தமிழ்ப்பயங்கரவாதிகளா? இவற்றையெல்லாம் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மையினம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்க முன்வரமாட்டாதாம். எனவே கடுங்கோட்பாட்டாளர்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டுமாம்! ”சிறுபானமை இனங்களின் உரிமைக் கோரிக்கைகள் யதார்த்தத்துக்கு அமைவாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவை பலனளிப்பது சாத்தியமில்லை. கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இதனை உணர்த்தி நிற்கின்றன” என்னும் பொருள்பட எழுதப்படும் தலையங்கங்கள் தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் தன்மானத்துக்கு விடும் சவாலாகவே தோன்றுகின்றன. இலங்கையில் இப்போது அரங்கேறிவரும் அரசியல் காட்சிகளைப் பார்க்கும் போது, சில வருடங்களுக்கு முன்னால், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் அவர் மருத்துவ ரீதியாகக் கூறும் “கட்டிப்புடி” வைத்தியம் போன்று….. இலங்கை அரசியலிலும் இனப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு, அங்குள்ள சில அரசுசார்புத் தமிழ் அரசியல்வாதிகள் சொல்ல ஆரம்பித்திருப்பது போன்று “கால் பிடி” மருத்துவம் ஒருவேளை சரிப்பட்டு வருமோ தெரியவில்லை! படத்தில் கமலஹாசனுக்கு ‘கட்டிப்புடி’ காட்சிகள் நடிப்பதற்குச் சுலபமாயும் அவருக்கு விருப்பமானதாயும்(?) இருந்திருக்கும். ஆனால், ஈழத்தமிஒழர்களுக்கு ‘கால் பிடி’ப்பதென்பது இலகுவில் சாத்தியமாகுமா? அதற்கு அவர்களது தன்மானம் இடந்தருமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக