புதன், 10 பிப்ரவரி, 2010

சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் வளர்த்தெடுத்த, சீருடை அணிந்த இன்னொரு இனவாதி.

இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல், இராணுவ வாதத்திற்குள் நேரடியாக பிரவேசித்துவிட்டது என்பதையே ஜெனரால் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை வெளிப்படுத்தி நிற்பதாக கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1930ஆம் ஆண்டுகளில் யப்பானில் இராணுவம் வேகமாகப் பெருத்து வளர்ச்சி அடைந்ததைப் போல, தமிழின எதிர்ப்பின் பெயரால் சிங்கள இராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் அதிதீவிர வளர்ச்சி அடைந்திருந்தது. அதிகம் அவமானகரமான, அபகீர்த்திமிக்க தமிழினப் படுகொலையின் மூலம் சிங்கள இராணுவம் ஊட்டி வளர்க்கப்பட்ட நிலையில், அதன் மிகப் பெரும் இராணுவத் தலைவராக சரத் பொன்சேகா காட்சியளித்தார். 'வீரயா', 'சூரயா' எனச் சிங்கள மக்களால் போற்றப்பட்ட ஒருவர் இராணுவ ஆளுமையின் நிமித்தம் அரசியல் தலைவராகி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராய் போட்டியிட்டார். இலங்கையின் சிங்கள, பௌத்த, இராணுவ மயமான அரசியலில் இராணுவத் தலைவர் ஒருவர் போட்டியிட்டது என்பது வியப்பல்ல. இனப்படுகொலை பற்றிய போர்க் குற்றங்களை தான் வெளிப்படையாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியம் அளிப்பேன் என கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய சில மணிநேரத்தில் அவர் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கு, அவர் சிவில் பொலிஸாரால் கைது செய்யப்படாது, இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை இதன் தீவிரத்தை அதிகம் உணர வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பானர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களுடன் கூடவே பல போராளிகளும் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துவிட்டு வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் 'சரணடைய' முற்பட்ட போது, அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் காலத்தில் கொழும்பின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்பு சிங்கள, பௌத்த தீவிர இனவாதத்தின் முன் இதனை ஒரு துரோகமாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சித்தரித்த போது இவ்விவகாரம் குறித்து அவர் பின்வாங்கியிருந்தார். அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் சபையின் ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளையிடம் சரத் பொன்சோகாவின் குற்றச்சாட்டுத் தொடர்பான மறுப்பைத் தெரிவிப்பதற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இலங்கை அரசு அனுப்பி வைத்த பின்னணியில் இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தனக்குத் தெரிந்த யுத்தமீறல் குற்றங்கள் அனைத்தையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன், மறைக்காது தெரிவிப்பேன் எனத் தெரிவித்த சில மணிநேரத்திற்குள் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை இதன் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி, பிரதம நீதிபதி, இராணுவத் தலைமைத் தளபதி என மூன்று அடுக்குகள் உண்டு. உத்தியோகபூர்வமாக தளபதி மூன்றாவது அடுக்கைச் சேர்ந்தவரானாலும், செயல்பூர்வ அர்த்தத்தில் இவர் இரண்டாம் அடுக்கைச் சேர்ந்தவர். எனவே ஜனாதிபதிக்கு அடுத்த இரண்டாவது பொறுப்பு வாய்ந்த பதவி நிலையைக் கொண்டிருக்கும் ஒரு தளபதியின் வார்த்தையும், சாட்சியமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் குறித்து தேர்தல் காலத்தில் கூறியதை பின்பு மறுத்திருந்தாலும், இப்படி பொறுப்பு வாய்ந்த பதவியைக் கொண்டிருந்த ஒருவரின் மறுப்புச் செய்தி ஏற்படையதாக இருக்காது. ஆயினும் அவர் நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் மீண்டும் தான் யுத்தக் குற்றம் பற்றிய உண்மைகளைச் சொல்வேன் என தெரிவித்ததும், அதிர்ச்சியடைந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவரைத் திடீரெனக் கைது செய்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் 'ஒப்புதல் வாக்கு மூலம்' என்ற ஒரு மோசமான சட்ட ஏற்பாடு உண்டு. இச்சட்டத்தை பிரயோகித்து நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதான இவரது இராணுவ உயர் அதிகாரிகளிடம் பெறக்கூடிய ஒப்புதல் வாக்கு மூலத்தின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா மீது கொலைக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும். இந்நிலையில், சரத் பொன்சேகாவின் விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதியைக் கொலை செய்ய முற்பட்ட இராஜ துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனைக்குரிய தீர்ப்பு வரை செல்ல இடமுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பின்னணியில் இலங்கையில் பெரும் அமைதியின்மை தோன்றும் எனவும் இவ்வாய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இவருக்கு ஆதரவளித்த கட்சிகள் இலங்கையில் அடிப்படை வாக்கு வங்கிகளைக் கொண்ட பலமான கட்சிகளாகும். இதில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜே.வி.பி.யும் ஒன்று. எனவே கொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அண்மித்து அமைதியின்மை பெரிதும் தலையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு ஜனநாயகவாதியோ அன்றி மனித நேயப் பண்பாளரோ அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் வளர்த்தெடுத்த, சீருடை அணிந்த இன்னொரு இனவாதி. செம்மணிப் படுகொலை முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை யாவரும் அறிவர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமாகவிருந்து இராணுவத்துக்குள் துரிதகதியில் வளர்ச்சி பெற்றவர். இறுதியில் சிங்களப் பௌத்த தேசியவாதியான அவரை அதே சிங்களப் பௌத்த தேசிய வாதம் விழுங்கிவிட்டது என்பதே உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக