புதன், 10 பிப்ரவரி, 2010

அவ்வை சொன்னதை டேனிசில் சொல்லும் எஸ்.எப் கட்சி

பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக சென்ற்றை தேகத்தில் ஊற்றிக் கொண்டு வருவதைத் தடை செய்ய வேண்டுமென டென்மார்க் எஸ்.எப் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை சோசல்டெமக்கிரட்டி, என்கில்ஸ்லிஸ்ற் போன்றவையும் ஆதரித்துள்ளன. கார்கள் விடும் புகை, சுவர்மைகளில் இருந்து வரும் நாற்றம் போன்றவைகளால் தினசரி 17.000 பேர் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்குள் சிக்குண்டு போகிறார்கள். இவற்றோடு வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகளில் பணிபுரிவோர் வருவதால் மேலும் சிக்கலான ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆகவே வாசனைத் திரவியங்களை உடலில் ஊற்றி தீர்த்தமாடி வருவோர் அடக்கி வாசிக்க வேண்டுமென எஸ்.எப். கட்சியின் பியா ஊல்சன் டுக இன்று கேட்டுள்ளார். வாசனைத் திரவியங்களை அளவுக்கு அதிகமாக பூசுவதைவிட ஒழுங்காக குளித்து, பல்துலக்கி, காலைக்கடனை சரிவர முடித்து, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து வேலைத்தலம் வாருங்கள் என்று பழைய கால அவ்வையார் சொன்னதையே எஸ்.எப் சொல்லுவது கவனிக்கத்தக்கது. அரசியல் படிக்கும் அமெரிக்க அம்மையார் கடந்தமுறை நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் எதிரணியின் உப அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர் சாரா பெலின் எதிர்வரும் 2012 அதிபர் தேர்தலுக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார். தேர்தல் கூட்டங்களில் உலக அரசியல், வரலாறுபற்றி எதுவும் தெரியாத பெண்மணியாக இருக்கிறார் என்று இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஐந்து பிள்ளைகளின் தாயான இவர் அமெரிக்கத் தேர்தலில் ஒரு கவர்ச்சித் தோற்றமாகவே அறிமுகமானார். இப்போது தனது உதவியாளர் மூலம் உலக அரசியலை நன்கு கற்றுத் தேறிவருவதாகவும், அடுத்த அதிபர் தேர்தலுக்கு தான் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அதிபராக இருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஸ் இந்திய ஜனாதிபதியின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டபோது பேந்தப் பேந்த முழித்தமை குறிப்பிடத்தக்கது. இவரே பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு உலகைக் காப்பாற்றப் புறப்பட்டதும் உலகம் அவரின் பின்னால் அணிவகுத்ததும் அவதானிக்கத்தக்கது. மறுபடியும் அரிச்சுவடிக்கு போன இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுக்கள் நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்டு நாசமாகிப்போனது சிறீலங்காவின் அமைதித் தீர்வு. அது தற்போது கிராம மட்ட அதிகாரங்கள் என்று பழைய பிரேமதாசவின் கிராமோதய சபைகள் பற்றி பேசுமளிவிற்கு சிலிப்பார் சிரித்துக்கிடக்கிறது. இந்த இலட்சணத்தில் நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன பேச்சு வார்த்தையும் சிறீலங்கா போல மீண்டும் அரிச்சுவடிக்கு போயுள்ளது. பாலஸ்தீன தரப்பும், இஸ்ரேலிய தரப்பும் வெறும் அதிகாரிகள் மட்டத்தில் தமது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக இன்றைய இஸ்ரேலிய பத்திரிகையான கா சுரற்ஸ் தெரிவித்துள்ளது. கடும் போக்காளரான நெற்றன் யாகு பதவிக்கு வந்த பின் ஓர் ஆண்டு காலமாக முறிவடைந்துள்ள பேச்சுக்கள் சர்வதேச அழுத்தம் காரணமாக அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு அமெரிக்கரான ஜோர்ஜ் மிக்கேல் மத்தியஸ்த்தம் வகித்து நெறிப்படுத்தி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ஒப்பந்தங்களை எழுதும் கட்டத்திற்கு சென்று, பாலஸ்தீன சுயாட்சிவரை சென்ற பேச்சுக்கள் இப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய பின்னடைவாகவே கருதவேண்டுமென அது குறிப்பிட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் முதலாவது படியிலேயே ஏறுவதுதான் மிகப்பெரிய சோகமாகும் என்பது புகழ் மிக்க பழமொழியாகும். அதிகரிக்கும் ஆப்கான் போரின் செலவு ஆப்கானில் நடைபெறும் போர் டென்மார்க்கிற்கு மேலும் செலவை அதிகரித்து வருகிறது. 353 மில்லியன் குறோணரில் இருந்து ஒரு மில்லியாட் வரை இந்த செலவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர இந்த ஆண்டு மேலும் 500 மில்லியன் குறோணர் உதிரிச் செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதங்கள், வெடி மருந்துகள், வாகனங்கள், கடும் யுத்தப் பிரதேசத்தில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் பல மடங்கு அதிகமான சம்பளங்கள் இந்தச் சுமையைக் கூட்டியுள்ளன. இது இவ்விதமிருக்க வரும் செப்டெம்பர் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நாவின் ஏழ்மையையும், இயலாமையையும் செம்மைப்படுத்தும் மாநாட்டில் கடந்த 2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட எட்டு அடிப்படை விடயங்களையும் 2015ஐ நோக்கி விரிவு படுத்த இந்த அமைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போரும் வறுமையும் தோள்களின் இரு பகுதியையும் அழுத்துவதால் மேலை நாடுகள் திருதிருவென முழிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக