வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கட்டடத்தில் விமானத்தை மோதி தாக்குதல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் ஒருவர் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 2 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமுற்றனர். டெக்சாஸ் மாகாண தலைநகரான ஆஸ்டின் நகரில், உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தையொட்டி, 7 மாடி கட்டடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், அந்த கட்டடத்தின் மீது நேற்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கட்டடத்தின் மீது குட்டிவிமானத்தை மோதச் செய்தவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் என்பது தெரிய வந்தது. ஜோசப் ஆண்ட்ருஸ்டேக் (வயது 53) என்ற அந்த நபர் ஆஸ்டின்நகரை சேர்ந்தவர்.விமானத்தை ஓட்டி வந்த இவர் கட்டடத்தின் மீது மோதிய போது இறந்து விட்டார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, அவரது `இணையதளத்தில்' ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், தனக்கும், வரிவசூல் செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை பழிவாங்க இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அமெரிக்க விமான நிலையங்கள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக