வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

வணங்காமண்ணில் வந்தவையா?

அரசதலைவர் தேர்தலை நோக்கியதான ஏ-9 வீதி 24மணிநேரமும் திறக்கப்பட்டதனை அடுத்து யாழ்.குடாநாட்டிற்கான தென்னிலங்கை மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை வியாபாரிகளின் யாழ்ப்பாணத்திற்கான படையெடுப்பும் அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. தென்னிலங்கை வியாபாரிகளால் விற்கப்படும் பொருட்கள் இலங்கையின் வர்த்தக மையமான தலைநகரான கொழும்பு விலைகளிலும் அரைவாசி வீதம் குறைந்தவையாகவே காணப்படுவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பொதுமகன் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிகள், நல்லூர் ஆலயச் சூழல் உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரதான பகுதிகளில் சிங்களவர்களால் மலிவு விலைக்கு விற்கப்படுகின்ற பொருட்களின் விலைகள் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கொழும்பு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அவர் யாழ்ப்பாணத்தின் நிரந்தர வர்த்தகர்கள் இந் நடவடிக்கையினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவதனை தாம் உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட பொருட்களை விலைகொடுத்துப் பெறுவதில் யாழ்ப்பாண மக்களைவிடவும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா நோக்கில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த இடத்தில்த் தான் புலம்பெயர் மக்களால் வன்னியில் நெருக்கடிக்கு உட்பட்ட மக்களுக்கு என அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்கவேண்டிய நிலை எழுந்துள்ளது. மக்களுக்கு வழங்கவென நிவாரணப் பொருட்களைச் சுமந்தபடி பயணித்த வணங்காமண் கப்பலை நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்துநிறுத்திய சிங்கள அரசு அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. இந்த இடத்தில் தமிழ் மக்களின் உயிர்நாடி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி வணங்காமண் கப்பலின் கொண்டுவரப்பட்டிருந்த பொருட்களை இந்தியாவில் வேறு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைப் பரப்புரையாக்கினாரே தவிர அந்தப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்ந்தனவா? என்பது பற்றிய எந்த ஒரு அக்கறையினையும் அவர் வெளிப்படுத்தவில்லை. சர்வதேச ரீதியாக வன்முறைச்சூழலில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பதற்காகவே தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டுச் செயற்படும் செஞ்சிலுவைச் சங்கங்கள் பொருட்களைப் பொறுப்பேற்பதாகவும், பொறுப்புக் கொடுப்பதாகவும் இரண்டொரு அறிக்கைகளை விட்டதுடன் அந்தப் பொருட்கள் தொடர்பான முழுமையான விபரங்களும் தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது? அந்தப் பொருட்கள் பழுதடைந்திருந்தால் அது பற்றிய தெளிவினை செஞ்சிலுவைச் சங்கங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் அது குறித்த விபரங்களை வெளியிடும் என்றோ மனிதாபிமான ரீதியில் அது நடைபெறும் என்றோ எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. செஞ்சிலுவைச் சங்கம் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த பகிரங்க அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தான தகவலையாவது வழங்கியிருக்க வேண்டும். புலம் பெயர் தேசங்களில் அங்கிருக்கும் காலநிலைகளை எதிர்கொண்டு மிகவும் கடினங்களுக்கு மத்தியில் உழைத்த உழைப்புக்களைக் கொண்டே வன்னி மக்களுக்கென பொருட்களை வழங்குவதற்கென அவர்களால் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் மக்களது உழைப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பான சரியான தகவல்களை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிடவேண்டும். வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்காப்படாமைக்கும் யாழ்ப்பாண தெருவோர தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுகின்றது. தமக்கான பொருட்களை தென்னிலங்கையின் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒருவரின் முக்கிய வலது கையாகச் செயற்படும் தொழில் அதிபர் ஒருவரே வழங்கிவருவதாக தென்னிலங்கை வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் மக்களின் உடனடியான உதவிகளை இழிவு படுத்தும் வகையிலான செயற்பாடாக இது இருக்கலாம் என்று கருதப்படுகின்ற அதேவேளை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் வரையான மக்களது வாழ்வியல் என்பது குறித்த அரசின் அக்கறையீனமும் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளமை புலப்படுகின்றது. தனியாக அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட்ட பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது. அங்கிருக்கும் மக்கள் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் போர் அனர்த்த காலங்களில் தமக்கான குடும்பத்தினரில் பல உழைப்பாளர்களை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதனை விடவும் உழைப்பாளர்கள் இருந்தாலும் சொந்த இடங்களில் இருந்து அவர்கள் பிடுங்கப்பட்டுள்ளமையால் அவர்களால் சுயமாக பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தமது பொருளாதாரத்தை ஈடு செய்வதற்காக சில பெண்கள் நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருவதாக முகாம் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் அந்த மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்த கட்ட ஆரோக்கியமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக