வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

வழிமறிக்கப் போவது யார்?

நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பங்களை இம் முறை வழங்காது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இவற்றில் கணிசமான உண்மைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான் பாரிய அச்சுறுத்தல் நிலை எதிர்வரும் தேர்தல் ஊடாக எதிர்நோக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தேசியப் பற்றாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பின் கொள்கைகள் தமக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பிரதான கட்சி ஒன்றின் பொதுச்செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம் முறை தான் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கொள்கை தனி நாட்டை வலியுறுத்துவதாக அமைவதாகவும் அவர் தனது கொள்கையில் இருந்து இம்மியேனும் பிசகாது உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் ஏனைய பிரதான தலைமைகள் இலங்கை ஒரு நாடு அதற்குள் தான் தீர்வு அமையவேண்டும் என வலியுறுத்தி இதற்கு அவரை உடன்படுமாறு வலியுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் ஏற்படவுள்ள ஆபத்து நிலை குறித்து சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம். குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர் எடுத்திருக்கின்ற முடிவு அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அவர் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும் அவருடன் கூட்டுச் சேர ஏற்கனவே விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டு கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பலர் இவருடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் குதிக்கவுள்ளதாக அறியவருகின்றது. உண்மையில் குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களுடைய விசுவாசிகள் என்ற காரணங்களைக் காட்டியே மகிந்த அரசு அவர்களை தமது அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உடன்பட்டுச் செயற்பட வைத்தது. இந்த நிலையில்த் தான் நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று விதமான நகர்வுகளை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது என்பது அரசியல் அவதானிகளுக்கு நன்கு புலப்பட்ட விடயமாகும். இவற்றின் காரணமாகவே திசைமாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் இருந்து ஓரங்கப்பட்டதாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிகின்றது. இந்த நிலையில் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து போட்டியிட எத்தனிக்கும் கட்சித் தலைவருக்கு முண்டு கொடுத்து போட்டியில் தீவிரமாக ஈடுபடுவர் என்பது வெளிப்படை. இந்த இடத்தில் கூட்டமைப்பினைத் தீர்மானிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலைகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது தமிழ் மக்களின் அனைத்து விதமான பின்னடைவுகள் அல்லது அழிவுகள் தேசிய விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டமை அனைத்துக்கும் பிரதான காரணியாகச் செயற்பட்ட இந்தியாவின் அட்டவணைக்கு அமையவே அவர்களின் செயற்பாடுகள் அமைவதாகவும் ஒவ்வொரு முக்கிய நகர்வுகளையும் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகளுக்கு அமையவே முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாத விடத்து தமிழ்மக்களுக்கு இருக்கின்ற வாக்குப் பலம் என்பது சிதைவடைவதற்கான அதிக சந்தர்ப்பங்களே ஏற்பட்டுள்ளன. இதனை உணர்ந்து உடனடியான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய அல்லது மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகத் தலைமைகள் உட்பட்டுள்ளன. இரண்டு பிரதான தரப்புக்களாக பிரிந்து கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால் யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் பிரமாண்டமான பூதாகாரமாக வெளிப்படும். இந்த இடத்தில் மக்கள் முடிவெடுப்பதில் குழப்பம் அடைந்து கணிசமான வாக்களிப்பு வீதம் குறைவடையக் கூடிய அதேவேளை மக்களின் வாக்குகள் சிதைவடையும். அதன் போது அணில் ஏறவிட்ட நாய் போலக் காத்திருக்கும் ஏனைய சக்திகள் குறைந்த வாக்குகளிலேயே தொகுதிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன. தேசியம் என்பது ஒற்றைச் சொல்லால் ஆனது என்று மட்டும் கருதியதாகவே தற்போதைய அரசியல்த் தலைமைகளின் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் அமைகின்றன. யாரும் தூர நோக்கம் கொண்டவர்களாகவோ, ஏற்கனவே இறைக்கப்பட்ட தியாகங்களுக்கான பெறுமதி அறியாதவர்களாகவோ செயற்படுவதனைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மிக மூத்த தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை கூட்டமைப்பிற்கான போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் ஆலோசனைகளில் இன்னொரு அசிங்கமும் நிகழ்ந்து வருகின்றமையை சுட்டிக்காட்டுகின்றோம். தற்போது ஒரு கல்விச் சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் முன்மொழியப்பட்டுள்ளார். அவர் யார் என்றார் நீண்டகால அரச விசுவாசியாக விளங்கி வருகின்ற அமைச்சர் ஒருவரின் பிரதான புதிய ஆலோசகர் ஒருவரால் தேசியத்திற்கெதிரான எழுத்தளார்களில் ஒருவராக வளர்க்கப்பட்டு வருகின்ற ஒருவராவார். இவரையும் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கான முனைப்பினை கூட்டமைப்பின் பிரதான கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் முனைந்து செயற்படுவதாக அறிய முடிகின்றது. தமிழ் மக்களின் தற்போதைய கையறு நிலையில் மக்களின் தவிர்க்க முடியாத தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விளங்கிவருகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பின்னடைவுகளுக்கு பிரதான காரணங்களாக காட்டிக்கொடுப்புக்களும், விட்டுக்கொடுப்புக்கள் அற்ற தன்மையும் தான் என்ற கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இவ்வாறான இக்கட்டான சூழலில் கூட்டமைப்பின் வழிப்படுத்த யாராவது முன்வருவார்களா? இல்லையேல் தமிழ் மக்களின் அபிலாசைகள் ஒரு கோடி 38 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுடனும், வருடாந்த ஐம்பது இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியுடனும் போய்விடுமா? என்ற கேள்விகளை தமிழ் மக்கள் கேட்கத் தலைப்பட்டுவிடுவர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மக்களை நோக்கியோ தேசியத்தை நோக்கியோ நகரவில்லை என்பது மட்டும் புலனாகின்றது. இந்த இடத்தில் மற்றொரு விடயம் பற்றிய தெளிவான பார்வையை ஏனைய கட்சிகளுக்கும் முன்வைக்கின்றோம். கொழும்பில் அலரிமாளிகைக்கு நிகரான மாளிகை ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் கொழும்பின் நட்சத்திரவிடுதிகளின் ஊழியர்களின் உபசரிப்புக்களுடனும் வாழ்ந்து வருகின்ற உலகம் அறிந்த உலகம் சுற்றிய முன்னாள் முக்கியஸ்தர் தற்போது தமிழ்த்தேசியத்தை இலங்கையில் சிதைக்கும் நடவடிக்கையினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் அரசகுடும்பத்தின் சகோதரர்களை தோள்களில் கைபோட்டு அணைத்து மகிழ்கின்ற அளவிற்கான அதிகாரங்களைப் பெற்றுள்ளமை குறித்து அவரைத் தரிசிக்கச் சென்று தரிசனம் பெற்றவர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நபர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளையும் பூரணமாக ஒழிக்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறுவதாகவும், புதிதாக ஏதாவது செய்து புதிய தமிழ்த் தலைமைகளை முன்வைக்குமாறும் தொடர்ந்தும் கோரி வருகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கமைய கிளிநொச்சியில் முன்னாள் அரச முக்கிய அதிகாரி ஒருவர் வெற்றிலைச் சின்னத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதேபோல ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலில் நிற்குமாறு வற்புறுத்தல் விடுப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தச் செயற்பாட்டின் தொடர் நடவடிக்கை தான் தேர்தல்த் தொகுதிகளில் சுதந்திரக்கட்சியினை எதிர்கொள்ளும் நிலைக்கு அரசில் அங்கம் பெற்ற முன்னணி தமிழ் அமைச்சர்கள் இருவர் தள்ளப்பட்டுள்ளனர் என கருதமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் மட்டும் இம் முறை பத்திற்கு மேற்பட்ட கட்சிகள் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் இறுதியாக இருக்கின்ற ஒரே ஒரு தெரிவான வாக்கின் ஊடான ஒருமைப்பாடும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியங்களே தென்படுகின்றன. இன்னமும் பொறுமை காக்க வேண்டிய தேவை உரியவர்களுக்கு இருக்கின்றதா? காலம் கடந்த ஞானம் யாருக்கும் உதவாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக