வெள்ளி, 30 ஜூலை, 2010

உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து
அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர்.


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறிய போது தனது மகன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இப்போது வெலிக்கந்த இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தாயார் ஒருவர் கண்ணீருடன் நிருபர் தினசேன ரதுகமகேயிடம் கூறியதாக பி.பி.சி.செய்திச்சேவை தெரிவித்துள்ளது.


தொலைந்து போன தனது மகனைக் கண்டுபிடிப்பது மிகவும் செலவுகூடிய விடயமாக இருப்பதாகவும் அரிசி விற்று சம்பாதித்த சிறியளவு பணத்தையும் மகனைத் தேடுவதற்காகச் செலவிட்டிருப்பதாகவும் மற்றொரு தாய் கூறியுள்ளார்.
“அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தயவு செய்து கூறுங்கள். அவர் உயிருடன் இல்லாவிடில் எமது மனதை திடப்படுத்திக் கொள்வோம்” என்று இந்தத் தாய் கூறியுள்ளார்.
முறைப்பாடுகளைத் தெரிவிக்க வந்திருந்த உறவினர்களில் அநேகமானவர்கள் மெனிக்பாம் அகதி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.


பொலிஸ் நிவாரண சேவை நிலையம் அமைந்திருக்கும் வவுனியா நகருக்குத் தாங்கள் வருவது கஷ்டமான விடயம் என்றும் மெனிக்பாம் முகாமிலேயே இச்சேவையை நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளிடம் செல்வதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக