வெள்ளி, 30 ஜூலை, 2010

இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் -ஜப்பான்

அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று
ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பத்திரிகை சங்கத்தில் நேற்று உரையாற்றியபோது, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு என்றுமில்லாத அளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


பெரும் தொகையானோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை, கடந்த வருடத்தில் புனர் நிர்மாண பணிகள் தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றம் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகியன பற்றி இரு அமைச்சர்களும் விளக்கி கூறினார்கள்.


ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு அதிபர் சுமிதக பூஜித தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரண்டு இலங்கை அமைச்சர்களும் வர்ததகம், முதலீடு தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் சாதகமான நிலைமைகளை ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு எடுத்து விளக்கினார்கள்.


இலங்கையின் புவியியல் அமைப்பு, இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனுமான பரஸ்பர வர்த்தக உடன்படிக்கைகள், இலங்கையின் சட்ட, அரசியல் யாப்பு பிரமாணங்களின் கீழ் ஏற்பட்டுள்ள வலுவான பாதுகாப்பு முதலீட்டு சபையினால் வழங்கப்படும் ஊக்குவிப்புக்கள், கிடைக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த உயர்தர மனித வளங்கள் ஆகிய அம்சங்களை இரு அமைச்சர்களும் எடுத்துக் கூறினர்.


இலங்கையில் பணியாற்றிவரும் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய அரங்கில் இரு அமைச்சர்களும் உரையாற்றினர். மிகவும் கஷ்டமான கால கட்டங்களில் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உதவி குறித்து அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக