வெள்ளி, 30 ஜூலை, 2010

இவ்வளவு இழந்தப்பின்னும் நாம் கேட்பது எமது அரை ஏக்கர் நிலத்தை மட்டுமே!


தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தமது சொந்த இடங்களில் குடியேற்றாமல் சாந்தபுரம் வித்தியா லயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரிதிநிதிகள் உட்பட்ட குழுவினர் நேற்றை தினம்(29-07-2010) சென்றிருந்தனர்.



ஏ-9 பாதைக்கு கிழக்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது சாந்தபுரம் கிராமம்.


இரணைமடுச் சந்தியிலிருந்து இணுவத்தின் படையணியின் பாரிய முகாமைக்கடந்து அக்கிரமத்துக்குச் செல்கையில் பிரதான பாதையில் இரு பக்கங்களிலும் அவ்வளவாக மக்கள் குடியிருப்புகள் காணப்படவில்லை.


இராணுவத்தின் சிறிய சிறிய முகாம்களுக்கிடையே ஆங்காங்கே சிதறியதாக மக்கள் வாழும் தற்காலிக கொட்டில்கள் காணப்பட்டன.


பிரதானப் பாதையைக் கடந்த நிலையில் ஒரு கிரவல் பாதையின் ஊடாக வாகனத் தொடரணி சென்றது. அப்பாதையின் இரு பக்கங்களிலும் புதர்மண்டிய காணிகள் வெற்றுக் காணிகள் தென்பட்டன. சில காணிகளில் இராணுவத்தினரின் பாரிய கனரக வாகனங்கள் சென்ற தடயங்கள் காணப்பட்டன.


அப்பாதையில் சென்று கொண்டிருந்த போது மெனிக் பாம் இடைத்தங்கல் முகாமை நினைவுபடுத்தும் வண்ணம் பல தரப்பால் கூடாரங்கள் எம் கண்களுக்கு தெரிந்தது.


சில மீற்றர் தூரத்தைக் கடந்த நிலையில் எமது வாகனத் தொடரணி நின்றது. பாடசாலைக் கட்டிடத்தைச்சுற்றி அமைக்கபட்டிருந்த தற்காலிக கூடாரங்களை கொண்ட ஒரு முகாம் பரந்து காணப்பட்டது. அந்த முகாமின் வாசலில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் எங்களை எதிர் கொண்டு வரவேற்றனர்.


வந்த பிரதிநிதிகளுக்காக வழங்கபட்ட கதிரைகள் ஆயிரம் கதைகளைக் கூறின.


அனைத்துக் கதிரைகளும் மாற்றுவலுவுள்ளோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் துவாரமிடப்பட்டிருந்தன.


இந்த முகமாமில் போரின் வடுக்களை சுமந்த பல ஊனமுற்றவர்களைக் காணக் கூடியாதாயிருந்தது.


"புற்தரை எமக்கு பழகிப் போனது" என்று கூறிய வண்ணம் அமர்ந்த ஓர் அம்மா "யாரிடம் எம் மனச்சுமையை கூறலாம் என்றிருதோம் நீங்ள் வந்தது எமக்கு மிகுந்த ஆறுதலை அளிகின்றது. யாரிடம் தெரியப்படுத்துவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருந்தோம். நீங்கள் இன்று வராவிட்டால் நிச்சயம் நாம் வீதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் தான் செய்திருப்போம்" எனக் கூறினார்.


சாந்தபுரத்தில் இடம்பெயர்வுக்கு முன்னர் 765 குடும்பங்கள் குடியிருந்தனர். இவர்கள் பல்வேறு இடம்பெயர்வுகளைச் சந்தித்து இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் சென்ற பின்னர் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கபட்டிருந்தனர்.


பின்னர் இவர்களை மீள தமது சொந்த இடங்களுக்கு அனுப்புவதாக தெரிவித்து கடந்த 01-05-2010 திகதி 281 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கொண்டு வந்து இறக்கினர். ஏறத்தாழ 2 மாதங்கள் வரை தங்க வைக்கபட்ட அந்த மக்கள் மீண்டும் சாந்தபுரம் மகாவித்தியாலயத்துக்கு மாற்றபட்டனர்.


தமது சொந்த கிராமத்திற்கு வந்தும் தமது காணிகளுக்கு செல்ல முடியாது இராணுவத் தரப்பினால் தமது காணிகளுக்கு ஏற்றப்படுவதும் பின்னர் திடீரென அவர்களே மீண்டும் உழவூர்திகளில் அவர்களின் பொருட்களை எடுத்து வந்து பாடசாலையில் விடுவதுமாக மூன்று தடவைகளுக்கு மேல் மக்கள் அலைகழிக்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு மீள கிராமத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ள 281 குடும்பங்களில் 25 இற்கும் குறைவான குடும்பங்களே தமது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர்.


ஏனையவர்கள் தமது காணிகளுக்கு சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். இறுதியாக தமது காணிகளை பார்க்க சென்ற மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி உங்களை கொன்று விடுவோம் என அச்சுருத்தியுள்ளனர். இவ்வாறு பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளை பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பினரிடம் எடுத்துக் கூறினர்.


"என்னையும் பிள்ளைகளையும் தினங்களுக்கு முன்னர் எனது காணியில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள், கணவன் இல்லாத நிலையில் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் எனக்கு வழங்கபட்டிருந்த நிவாரணப் பொருட்களையும், சமையல் பாத்திரங்களையும் கொண்டு சென்றேன். அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் எனது தற்காலிக இருப்பிடத்தை அமைத்துக் கொண்டேன்.


இன்று காலை வந்து இராணுவத்தினர் உழவூர்தியை என் காணிக்கு முன்னே நிறுத்திவிட்டு அவர்களாகவே வீட்டில் இருந்த பொருட்களை ஏற்றிவிட்டு வாருங்கள் பாடசாலைக்கு போவோம் என்று சொன்னர்கள் நானும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டேன் மறுத்து விட்டார்கள் ஏன் காலில் விழுந்துக் கூட கெஞ்சிக் கேட்டேன். நீங்கள் போகாவிட்டால் சுட்டுவிடுவோம்" என்று மிரட்டினர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். "உங்கள் வாகனங்கள் வருவதைக் கண்டு எங்கள் பொருட்களை ஏற்றி வந்த உழவூர்தியை பாதையில் மறைத்து வைத்துள்ளார்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.


"இவ்வளவு இழந்தப்பின்னும் நாம் கேட்பது எமது அரை ஏக்கர் நிலத்தை மட்டுமே. இந்த யுத்தத்தினால் எமது சொத்துக்கள் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து விட்டோம் எம்மிடம் எஞ்சியிருப்பது அந்த அரை ஏக்கர் நிலம் மட்டும் தான். எங்கள் உயிர் போகும் வரை போராடத்தயார். அதைப் பறிகொடுத்து விட்டு நாம் என்ன செய்வோம். அந்த நிலம் கிடைத்தால் ஏதோ சிறு உற்பத்தியாவது செய்து எமது பிள்ளைகளுக்கு சிறிதளவாவது உணவளிப்போம்.


பாடுபட்டு நட்ட மரங்கள் அந்த நிலத்திலுள்ளது. அதன் பயனைப் பெறாமல் தாம் வாழ்ந்த நிலங்களை விட்டு வேறு இடங்களுக்கு எம்மால் செல்ல முடியாது. அது எங்கள் உயிர் உள்ளவரை அனுமதிக்க முடியாது" என கலங்கிய விழிகளுடனும், கண்ணீருடனும் பல குடும்ப தலைவர், தலைவிகள் தெரிவித்தனர்.


35 வயது மதிக்கத்தக்க ஒரு குடும்பத் தலைவி கருத்து தெரிவிக்கையில் "எனது கணவர் பூசாவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனக்கு 4 குழந்தைகள், நான் இரணைமடுவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்தே எனது பிள்ளைகளை பார்த்து வருகின்றேன். அந்த வருமானத்தில் தான் எனது கணவனை மாதம் ஒருமுறை பூசா சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வருகின்றேன். நான் கடந்த வாரம் காலை 4.50 மணிக்கு வேலைக்கு செல்லும் போது வழியில் இராணுவத்தினர் மறித்து விட்டனர். நான் வேலை செய்வதற்கான ஆதாரங்களை காடடியும் அவர்கள் என்னை விட வில்லை.


நீ புலி தானே என்று கூறி எனது மிதிவண்டியை பிடித்து வைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் எவ்வளவு அழுதும் விடவில்லை. என 4 மணி நேரம் வரை தடுத்து வைத்திருந்தார்கள். காலை 5 மணிக்கு வேலைக்கு செல்லாவிட்டால் மாதச் சம்பளத்தில் கழித்து விடுவார்கள் எனக்கு வழங்கப்படுவதே மாதாந்தம் 5000 ரூபா மட்டும் தான். இப்படியான நிலை ஏற்பட்டால் எப்படி என் பிள்ளைகளை காப்பாற்றுவேன்?. எப்படி என் கணவரைச் சென்று பார்ப்போன?;" என கண்ணீருடன் தெரிவித்தார்.


கூட்டமைப்பினருடன் பெரும்பாலும் கருத்து தெரிவித்த குடும்ப தலைவிகள் "எம்மில் பலர் எமது வாழ்க்கைத்துணையை இழந்துள்ளோம். எமது பிள்ளைகளையும் இழந்தவிட்டோம் பெரும்பாலானோரின் பிள்ளைகளும் தடுப்பில் உள்ளனர். இவ்வாறு உதவியில்லாமல் இருக்கும் எம்மை இப்படி சொந்தக் காணிக்கும், பாடசாலையிலுள்ள முகாம் என்னும் அலைகழிப்பது சரியா? ஏன் இவ்வாறு பல தடவைகள் அலைகழிக்க வேண்டும்.


இவ்வாறு அலைக்கழிப்பதை விட பேசாமல் எங்களை கொன்று போடடுவிடலாம்" என்று கூறினார்கள்.


"இவ்வாறு வேதனைபடுவதை விட நானும் என் பிள்ளைகளும் மண்ணெண்ணை ஊற்றி எரிந்து சாகப் போகின்றோம்" என இன்னுமொரு தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.


"நாங்கள் இங்கு தரும் உணவை குறை கூறவில்லை. ஆனாலும் புழுக்கள் நிறைந்த பயிற்றங்காய், கத்தரிக்காயே தொடர்ந்தும் எமக்கு உணவாக கிடைக்கின்றது. எமது சொந்தக்காணிக்குச் சென்றால் நாம் எமது பிள்ளைகளுக்கு கீரையாவது நட்டு உணவளிப்போம்".


"நான் வேலைக்கு சென்று திரும்பிய போது எனது இரு பிள்ளைகளின் மண்டை உடைந்து விட்டது. அதற்காக நான் பக்கத்து கூடாரத்தில் உள்ளவர்களை குறை சொல்ல வில்லை. பக்கத்தில் உள்ள பிள்ளைகள் கல்லெறிந்த விளையாடும் போது அது எமது கூடாரத்திலேயே விழும் அவ்வளவு நெருங்கிய தூரத்தில் எமது கூடாரங்கள் உள்ளன. எமது சொந்தக் காணியில் விட்டால் எமக்கு இந்த பிரச்சனை வராதுதானே.


"நாம் எல்லோரது காலில் விழுந்து கெஞ்சிப் பழகிவிட்டது. எவ்வளவு கெஞ்சியும் எமக்கு பலன் எதுவும் கிடைக்க வில்லை. என கண்ணீருடன் ஒரு தாய் தெரிவித்தார்.


65 வயது மதிக்கத்தக்க குடும்பத் தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் "நாம் பலவருடங்களுக்கு முன்னர் மலையத்திலிருந்து கிளிநொச்சி வந்து பல முதலாளிமாரிடம் வேலை செய்தோம். 35 வருடங்களுக்கு முன்பாக காடாக இருந்த இந்த நிலத்தை பயன்தரு நிலங்களாக மாற்றி எமது வாழ்வாரதாரத்தை கொண்டு சென்றோம். போரின் உச்சகட்டமாக எங்கள் மீது எறிகணைகள் வரவே நாங்கள் இடம்பெயர்ந்தோம்.


இப்போது எம்மிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் நிலத்திலாவது எம்மை வாழவிடுங்கள் அதனை ஏன் தடுக்கின்றீர்கள். அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கிளிநொச்சி வந்த போது மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவரைச் சந்தித்தோம்.


அவர் கண்ணிவெடி அகற்றிய பின்னர் உங்கள் காணிகளில் குடியமர்த்தப்படுவீர்கள் எனத் தெரிவித்தார். ஆனால் இராணுவத்தினரோ எங்கள் இடங்களுக்கு செல்ல மறுக்கின்றனர். அத்துடன் ஒரு தரப்பினர் எங்கள் காணியில் கொண்டு போய்விட்டாலும் இராணுவத்தினர் பலாத்காரமாக மீண்டும் பாடசாலையில் உள்ள முகாமில் கொண்டு வந்துவிடுகின்றனர். எங்களிடம் இக்காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் உண்டு.


இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. பெண்கள் குளிக்கப்படும்பாடு குறித்து நாங்கள் உங்களிடம் சொல்லத் தேவையில்லை. அது உங்களுக்கே தெரியும் என்றார்.


"இங்குள்ள மக்களின் எஞ்சியிருந்த வீடுகளையும் இராணுவத்தினர் உடைத்து எடுத்து செல்கின்றனர். நாங்கள் இங்கு வந்த போது ஏராளமான வீடுகள் நல்ல நிலையில் இருந்தன. ஏன் இவ்வாறு உடைத்து எடுத்துக் கொண்டு செல்கின்றீர்கள் எனக்கேட்டால் வேறு இடங்களில் உங்களைப் போன்றவர்களுக்கு விடுகளைக் கட்டிக்கொடுக் எடுத்துச் செல்கின்றோம்"; எனத்தெரிவிக்கின்றனர். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை.


அவர்களும் எங்களைப் போல் எல்லாம் இழந்தவர்கள் தான். எல்லோரும் ஒரு நிலையிலிருக்க எங்கள் வீடுகளை ஏன் உடைத்து எடுத்துச் செல்கின்றீர்கள்;? நாங்கள் எங்கள் காணிகளில் வீடு இல்லாமல் எப்படி வாழ்வது? என கலங்கிய கண்ணுடன் அவர் தொடர்ந்தும் கூறினார்.


மழைக் காலத்திற்கு முன் தமது சொந்த நிலங்களில் குடியேற்றும் படியும் மழை வந்தால் தாம் தற்போது தங்கியிருக்கும் பாடசாலை வளவுக்குள் தங்கியிருக்க முடியாதெனவும் தெரிவித்தனர். இம்மாதத்தின் தொடக்கத்தில் மழை பெய்த போது தங்கள் கூடாரங்களிலுள் மழை நீர் வந்து பெரும் அவதிக்குள்ளானதாக தெரிவித்தனர்.


தங்கள் பிரதேசத்தில் பஸ் சேவை இல்லை. இதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் தினந்தோரும் 10 கிலோ மீற்றர் வரையான தூரத்தை நடந்தே சென்று வருகின்றனர். மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்யவும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஏ-9 வரை செல்ல வேண்டியுள்ளது. முகாமிற்குள்ளும் சிறு பெட்டிக்கடைகளே காணப்படுகின்றன.


தேவையற்ற நபர்களின் உட்பிரவேசத்தினால் தங்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதனால் தங்களின் பாதுகாப்புக்கு 2 பொஸீசாராவது பாதுகாப்புக்கு தேவை எனக் கூறினர்.


மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் கேட்டறிந்தப்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'எங்களிடம் என்ன எதிர்ப்பார்க்கின்றீர்கள"; எனக் கேள்வியெழுப்பினர்? தங்களின் நிலங்களை எப்படியும் மீட்டுத்தரும் படி கேட்டுக் கொண்டனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதியிடம் மற்றும் அமைச்சர்கள் உட்பட்ட சம்பந்தபட்ட அரச தரப்பினரிடனரிடம் கதைப்பதாகவும் இன்னும் 15 நாட்கள் வரை பொறுமை காக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 15 நாட்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றனர். மக்கள் எடுக்கும் எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் துணைவரத் தயாரெனவும் தெரிவித்தனர்.


சாந்தபுரம் மக்கள் பலத்த எதிர்ப்பார்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வழியனுப்பி வைத்தனர். வழியில் ஒரு சிலர் வாகனத் தொடரணியை வழிமறித்து தங்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். நாம் சற்று தூரம் கடந்து வந்தப் போது ஒரு முச்சந்தியில் இரணைமடுக்குளம் நோக்கி திசையில் மக்களின் பொருட்களை பலவந்தமாக ஏற்றி வந்த உழவூர்தியை காணக்கூடியதாய் இருந்தது.


பல தசாப்த காலமாக கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 2008 ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத்தின் எறிகணைகள் தங்கள் கிராமத்தையெட்டி உயிர்களை பறித்த போது தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள காலங்காலமாக வாழ்ந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்


போரின் இறுக்காலக்கட்டத்தில் பல உயிரிழப்புக்களைச் சந்தித்து இறுதியில் உடுத்த உடையுடன் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் சென்றப்பின்னர், மெனிக்பாம் முகாமில் ஒரு வருடம் தடுத்து வைக்கபட்டு மீண்டும் தமது சொந்த இடங்களிற்கு அழைத்து செல்வதாகக் கூறி பாடசாலைகளில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


"ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கூட்டமைப்பினர் சந்தித்த போது சாந்தபுரம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வினவிய போது கூரைத்தகடுகள் வந்தவுடன் குடியமர்த்துவோம் என அவர் தெரிவித்திருந்தார். "ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சி வந்த போது சாந்தபுரம் மக்கள் அவரிடம் கேட்டப்போது கண்ணிவெடிகள் அகற்றியப் பின்னர் குடியமர்த்துவதாக தெரித்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.


மாங்குளம் கட்டளைத்தளபதி மக்களை மீள் குடியேற்ற அனுமதித்த போதும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி ஆயுதமுனையில் மக்களை வெளியேற்றுகின்றார். திருமுறிகண்டி இந்துபுரம் மக்களின் நிலங்கள் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் மக்களும் இராணுவத்தால் அஞ்சறுத்தபட்டு வருகின்றனர். அரசாங்கம் தமிழ் மக்களின் வாழ் இடங்களை அபகரித்து இராணுவத்தளங்களையும், இராணுவக்குடியிருப்புகளையும் அமைத்து வடக்கை இராணுவ மயப் படுத்த முனைவதானது அவர்கள் சொல்வது போன்றதான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புகின்றோம் என்பதற்கு மாற்றீடான நிலையினையே தோற்றுவிக்கும் என்பதுவே உண்மை
ஜெனி ஜீவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக