ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இலங்கையில் உள்நாட்டுப் போர் 83ம் ஆண்டு துவங்கியது. யாழ்ப்பாண நகரில் துவங்கி

இலங்கை உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் திணறிய நிலை மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் 83ம் ஆண்டு துவங்கியது. யாழ்ப்பாண நகரில் துவங்கி, தொடர்ந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. போர் தீவிரத்தால் யாழ்ப்பாணம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை ராணுவம் நடத்திய கடும் தாக்குதலுக்குப்பின், 1995ம் ஆண்டு யாழ்ப்பாண நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் வந்தது. உள்நாட்டுப் போர் தமிழர் வசிக்கும் பிற பகுதிகளிலும் தீவிரமடைந்திருந்ததால், யாழ்ப்பாண வாசிகள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. துப்பாக்கிகளுக்கு பயந்து துன்பத்துடன் வாழ்ந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணம், 1995ம் ஆண்டிலேயே ராணுவக் கட்டுப்பாட்டில் வந்த போதும், அவ்வப்போது ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டு தான் இருந்தது. புலிகளின் கொரில்லா தாக்குதலும், புலிகளை ஒழிப்பதாகக் கூறி ராணுவம் நடத்திய தாக்குதலாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அடிக்கடி நகரை விட்டு வெளியேறி அகதியாக தங்கி, மீண்டும் யாழ்ப்பாணத்துக்குள் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான நாட்கள் ஊரடங்கில் கழிந்தன. யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், இலங்கையின் மற்ற பகுதிகளுடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலை மூடப்பட்டது. இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி புலிகள் வசமும், மற்றொரு பகுதி ராணுவ வசமும் இருந்தது. இதனால், யாழ்ப்பாணத்துடனான தரை வழி போக்குவரத்து, முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியது. இலங்கையின் மற்ற பகுதிகளுக்கு, யாழ்ப்பாணம் வாசிகள் செல்வது மிகக் கடினமானதாக இருந்தது. இது பற்றி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வியாசர் கூறியதாவது: வெளியூர் செல்ல வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிட வேண்டும். அனுமதி கோரி, ராணுவ அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நாம் தெரிவிக்கும் காரணம் ராணுவ அதிகாரிகளுக்கு திருப்தியளித்தால் தான் விண்ணப்பத்தை பரிசீலித்து, அனுமதியை வழங்குவர். அதன் பின், விமானத்திலோ, கப்பலிலோ டிக்கெட் வாங்க வேண்டும். கப்பலில் என்றால் திரிகோணமலைக்கும், விமானத்தில் என்றால் கொழும்புக்கும் பயணம் செய்யலாம். பயணத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பே ராணுவத்திடம் பெற்ற அனுமதியை உள்ளூர் போலீசாரிடம் பதிவு செய்து, எப்போது திரும்புவோம் என்பதையும் சொல்ல வேண்டும். விமானத்துக்கு என்றால் பலாலி விமான தளத்துக்கும், கப்பல் என்றால் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் செல்ல வேண்டும். அதுவும் ராணுவ கண்காணிப்புடன்தான் செல்ல முடியும். தனி வாகனத்தில் சென்றால், ராணுவத்தினர் தான் ஓட்டிச் செல்வர். விமானத்தில் உடனே கொழும்பு சென்றுவிடலாம். கப்பலில் மூன்று நாட்கள் பயணம் செய்து திரிகோணமலையை அடையலாம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் கள் புலிகளிடம் இருந்ததால், கப்பல் பயணம் சர்வதேச கடல் எல்லை வழியாகத்தான் நடந்தது. எனவே, பயண நேரம் அதிகம். திரிகோணமலை துறைமுகத்தில் இறங்கி, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். செல்ல வேண்டிய இடத்தையும், மீண்டும் திரும்பி வரும் நாளையும் பதிவு செய்துவிட்டு நாம் செல்லலாம். நாம் சந்திக்கும் நபர் இருக்கும் இடம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் நமது விவரத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதத்தில் கூட இதே நிலைதான் இருந்தது. அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்தான், இது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு வியாசர் கூறினார். இந்த நடைமுறைகளால், உற்பத்தி பொருட்களை விற்பது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. வளர்ச்சி இன்றி யாழ்ப்பாணம் முடங்கியது. “கறுத்த கொழம்பன்’ என்ற அதிசுவையான மாம்பழ ரகம் யாழ்ப்பாணம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே விளைகிறது. அவற்றை விற்க முடியாததால், விளைந்த இடத்திலே அவை உதிர்த்து நாசமான சோகமும் ஏற்பட்டது என்கிறார் தென்மராச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி. கொழும்பில் இந்த மாம்பழத்துக்கு இப்போதும் கடும் கிராக்கி. விவசாய உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் இந்த நிலை. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் திண்டாட்டம் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து பொருட் கள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், கடைகள் வெறிச்சோடின. தரைவழி புலிகள் வசம் இருந்ததால், யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம், எரிபொருள், உணவுப்பொருட்கள் போன்றவை கிடைப்பதில் கடும் சிக்கல் இருந்தது. மின்சாரம் அதாவது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் வினியோகிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி நகரம் இருண்டு கிடந்தது. போரில் பாதிக்கப்பட்ட பலர் நகரத்தை விட்டு வெளியேறி, அகதியாக வாழ்ந்தனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர், யாழ்ப்பாணம் நகரில் இருந்து வெளியேறியுள்ளதாக யாழ்ப்பாணம் நகர சபையின் புள்ளிவிவரம் கூறுகிறது. யாழ்ப்பாணம் நகரில், குண்டுகளால் சிதைந்த பல கட்டடங்களைக் காண முடிந்தது. யாழ் கோட்டைக்குள் இருந்து ராணுவம் குண்டு வீசியதால், அதைச்சுற்றிய பகுதிகள் முற்றாக சிதைந்து போயுள்ளன. நல்லூரில் புலிகளின் ஆயுதக் கிடங்கு தகர்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. புலிகள் முகாமிட்டிருந்த இடங்களில் எல்லாம், ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பெரிய பனை மரங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, பதுங்கு அறைகள் அமைத்துள்ளனர். ” இவை புலிகள் அமைத்த பதுங்கு அறைகள். அவற்றை ராணுவம் கைப்பற்றியபின், தங்கள் பதுங்கு அறையாக பயன்படுத்துகின்றனர்’ என்றார் முளாயைச் சேர்ந்த சிவயோகலிங்கம். யாழ்ப்பாணம் நகரில் தகர்ந்து கிடக்கும் வீடுகளில் பல, ராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளன. “இலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த பனை மரங்கள், குண்டு தாக்குதல்களுக்கு இலக்காகி வேதனையை சுமந்து நிற்கின்றன. போரில் ஏராளமான பனைமரங்கள் அழிந்து விட்டன,’ என்று வாலிகாமத்தைச் சேர்ந்த ஒருவர் வருத்தத்துடன் கூறினார். அன்றாட வாழ்வில் நெருக்கடி, உற்பத்தியில் பாதிப்பு, பொது வளங்களை கையாள்வதில் பின்னடைவு, அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்வதில் சுணக்கம் என அனைத்து நிலையிலும் யாழ்ப்பாணம் செயலிழந்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் வரை இதே நிலைதான். இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிப்புக்குப்பின், யாழ்ப்பாணத்தின் மீதான கட்டுப்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளனர். ராணுவத்தின் பிடியில் இருந்து யாழ்ப்பாணம் முற்றாக விடுபடாவிட்டாலும், மாற்றங்கள் தெரிகின்றன. யாழ்ப்பாணத்துடனான பிரதான நெடுஞ்சாலை ஏ 9 திறக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நகரில் விரைவான மாற்றங்கள் தெரிகின்றன. ஊரடங்கு உத்தரவில் வருந்திய யாழ் நகரம்: ராணுவ ஊரடங்கில் தான் யாழ்ப்பாணம் பெரும்பாலும் இயங்கியது. ஊரடங்கின் போது மக்கள் வெளியில் நடமாடமுடியாது. தவறி வெளியில் வருபவரை, விசாரணைக்காக ராணுவம் அழைத்துச் சென்று விடும் அல்லது தேசிய அடையாள அட்டையை பறித்து சென்று விடுவர். அதை திரும்ப வாங்குவதற்குள் படாத பாடு பட வேண்டும் என்றார் திருநெல்வேலி கந்தையா. அவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவின் போது நான் பட்ட அவதியைச் சொல்லி மாளாது. என் மகளுக்கு உடல்நலம் குன்றியதால், பக்கத்துத் தெருவில் உறவினரை அழைக்க, இரவில் சென்றேன். ராணுவம் என்னை பிடித்துக் கொண்டது. எவ்வளவோ சொல்லியும் விட மறுத்துவிட்டனர். பின்னர் எனது அடையாள அட்டையை பறித்து சென்றுவிட்டனர். மறுநாள் உரிய விளக்கம் சொல்லி அடையாள அட்டையை பெற சென்றேன். அங்கு நீண்ட நேரம் காக்க வைத்தனர். முட்டிப்போட்டு நிற்க வைத்து, பின்னர் எழுதி வாங்கிக் கொண்டு அடையாள அட்டையை தந்தனர். இது போன்ற நிலைமைகளை சமாளித்துத்தான் இங்கு வாழ்கிறோம். இவ்வாறு கந்தையா கூறினார். அவசரத்துக்கு இரவில் வெளியில் செல்ல வேண்டும் என்றால், லாந்தர் விளக்கை ஒரு கையிலும், வெள்ளைக் கொடியை மறு கையிலும் பிடித்துக் கொண்டு, அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு செல்ல வேண்டும். பின்னர், அவர்கள் துணையுடன், வேண்டிய இடத்துக்கு செல்லலாம். இதுதான் நடைமுறையாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக