ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனிதி இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரதனஜோதி தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் சில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குழுக்கள் மீது தாமே தாக்குதல் நடத்தி அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது சுமத்துவதற்கும் சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் பல்வேறு பிரதேசங்களில் ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமே இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பேராதரவைப் பெற்றிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலில் ஈடுபடுத்தி அவரை அரசியல் அநாதையாக எதிர்க்கட்சிகள் மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் சரத் பொன்சேகாவை சில சக்திகள் பகடைக் காய்களாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக