ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி

இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... ....எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகி ராஜரட்ண நேற்று முன்நாள் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன எனவும், ஏவுகணைக் கூடு ஒன்று விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது இரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவறந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு எம். இராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததார் எனக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப்புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிவான் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக