ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஈழத் தமிழ் அகதிகளை பத்திரிக்கையாளர்கள் முன் நிறுத்துவாரா டி.ஜி.பி.?

செங்கல்பட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் நேற்று முன் தினம் இரவு 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வெளியான செய்தி ‘உண்மைக்கு புறம்பானது’ என்று கூறி தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக முதன் முதலாக பொறுப்பேற்ற ஒரு பெண் காவல் அதிகாரி என்ற பெருமை பெற்ற லத்திகா சரண் விடுத்துள்ள அறிக்கையின் கடைசி பத்தி இதுதான்: “காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடுமையான காயம் அடைவில்லை” இலங்கைத் தமிழர்கள் மீது காவல் துறையினர்தான் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்று கூறும் லத்திகா சரணின் அறிக்கை, அடுத்த வாக்கியத்திலேயே “எவரும் கடுமையான காயம் அடைவில்லை” என்று கூறி முடிக்கிறார். இதுதான் பொய் செல்வதில் உள்ள நெருக்கடியே! அங்கு நடந்ததாக ஒரு கதையை கூறி, காவல் துறையினர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கதையைக் கொண்டுவந்து, அவர்களைத் தாக்கியவர்கள் முகாமில் அடைப்பட்டுக்கிடக்கும் அகதிகளே என்று கூறிவிட்டு, அதற்காக அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் தனது அறிக்கையில் கூறும் காவல் துறை தலைமை இயக்குனர், ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு, நடவடிக்கை எடுக்க வந்த 150 காவலர்களைத் தாக்குவதற்கு எங்கிருந்து பலம் வந்தது என்பதையும் கூறியிருக்க வேண்டும். தமிழக காவல் துறையின் கியூ பிரிவின் கண்காணிப்பில் இருக்கும் அந்த ‘சிறப்பு முகாமில்’ எங்கிருந்து ஆயுதங்கள் வந்தன என்பதையும், அப்படி ஆயுதங்கள் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் காவல் தலைவர் கூற வேண்டும். 02.02.2010 அன்று காலை முதல் ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் பலர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை வெளியில் நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் பலர் மரத்தின் மீது ஏறி நின்று ஊடகவியலாளர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் தங்கள் கோரிக்கைகளை முழங்கியுள்ளனர். அது வீடியோவில் பதிவாகி உள்ளது. காவல் தலைமை இயக்குனர் லத்திகா சரண் தனது அறிக்கையில் கூறியிருப்பதுபோல, உள்ளே சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றால் அது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியாமல் எவ்வாறு நடந்திருக்க முடியும்? மாலை வரை ஊடகவியலாளர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால் தாக்குதல் - திட்டமிட்டத் தாக்குதல் - இரவு 9 மணிக்குத்தான் தொடங்கியுள்ளது. உள்ளே பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த நிலையில், 150க்கும் அதிகமான காவலர்கள் முகாம் சுவரேறி உள்ளே குதித்துச் சென்றுத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் பல மணி நேரங்கள் நடந்துள்ளது. அப்பட்டமான, ஈவுரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்! அவர்கள் அறையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ளது காவல் துறை. துணிமணிகளை கிழத்தெறிந்துள்ளது. இதெல்லாம் வெளியே தெரியாமல் இருக்கத்தானே 9 மணிக்கு மேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு, அந்த உண்மை வெளியே வந்துவிட்டப் பிறகு, தாக்கப்பட்டவர்களே தாக்கினார்கள் என்று அறிக்கை விட்டு மறைக்கிறார் காவல் துறைத் தலைவர். கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவர்களை வேலூர் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக