ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு

அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? சுதந்திரதின உரையில் சிறீலங்கா ஜனாதிபதி கூறியவை தொடர்பில் உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? இலங்கையின் 62 ஆவது சுதந்திரதினம் கண்டி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி அன்று பிரித்தானிய கொலனித்துவவாதிகள் தமக்கு விசுவாசமான இலங்கையின் நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடியினரின் கைகளில் இச் “சுதந்திரத்தைக் கையளித்துச் சென்றனர். இந்த சுதந்திரம் யாருக்கு யாரால் ஏன் வழங்கப்பட்டது என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடி எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுத முடியும். விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவர்களும் பிற பின் தங்கிய மக்களும் மட்டுமன்றி அரசாங்க, தனியார் துறைகளைச் சேர்ந்த நடுத்தரவர்க்க மக்களும் இச் சுதந்திரத்தின் கீழ் எவற்றை அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்று சிந்திக்கும் போதே இச்சுதந்திரத்தின் போலித் தன்மையைக் கண்டுகொள்ள முடியும். சொத்து சுகம் வாய்ப்பு வசதிகளைப் பெற்றவர்களும் அவர்களின் பிரதிநிதிகளாக நின்று அவர்களுக்கும் அவர்களது சொத்து சுக வாழ்வுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்து வந்த ஆளும் வர்க்க சக்திகளுக்கு சுதந்திரம் என்பது நூறுவீத அர்த்தமுடையதாகும். ஆனால், சாதாரண மக்கள் எனப்படும் தொண்ணூறு வீதத்தை உள்ளாக்கிய இனம், மதம், மொழி, பால், பிரதேசம் கடந்து உழைக்கும் மக்களாக வாழ்ந்து வரும் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பெற்றுக்கொடுத்தவை அற்பமானவைகளேயாகும். இதனாலேயே சுதந்திரம் என்பதன் பயன்கள் ஒருசிலரது கைகளிலும் வீடுகளிலும் களிநடனம் புரிய ஏகப் பெரும்பான்மையோரின் வீடுகளிலும் அன்றாட வாழ்விலும் முகாரி இராகத்தின் கீழ் தரித்திர வாழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய சுதந்திரத்தின் 62 ஆவது நினைவாக நடத்தப்பட்ட கண்டிச் சுதந்திரதின விழா முற்றிலும் புதிய சூழலில் நடத்தப்படுவதாக மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது யுத்தம் முடிவுற்ற பயங்கரவாதத்தை அழித்த பின் நடைபெறும் முதலாவது சுதந்திர தினம் என்பதே அவர் குறிப்பிட்ட புதிய சூழலாகும். அதுமட்டுமன்றி, ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஐம்பத்தியெட்டு வீத வாக்குகளைப் பெற்று அடுத்த ஆறு வருடங்களுக்கான ஆணையையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி மேலும் ஒரு வருடத்தை உயர் நீதிமன்றம் மூலமும் பெற்று ஏழு வருட தனிநபர் சர்வாதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி உள்ளமையும் புதிய சூழலே ஆகும். இவற்றுடன் கூடவே விரைவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வர இருக்கிறது. அத்தேர்தல் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட உணர்ச்சியும் கொந்தளிப்பு நிறைந்த தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் ஒருவரைத் தேர்ர்வு செய்வதாகவும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் இருந்தது. ஆனால், 228 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போட்டியிடும் தேர்தலாகும். முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தல் மரபின் படியும் இலட்சணத்தின் வாயிலாகவும் பணம், பதவி, ஊர், சாதி, இன, மத, மொழி வெறிச் கூச்சல்கள் தாராளமாகத் தலைவிரித்தாடும். அதனால் வன்முறைகள் தலைவிரித்தாடும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆயிரத்தைத் தாண்டிய வன்முறைச் சம்பவங்களும் ஆறுபேர் வரை உயிர் பறிக்கப்பட்ட நிகழ்வுகளும் சோகமாக இடம்பெற்றன. இவை பாராளுமன்றத் தேர்தலில் பல மடங்காக உயர வாய்ப்பு உண்டு. நமது அதிகாரம் நமது ஆதிக்கம் என்ற ரீதியில் ஆளும் தரப்பு சகலவற்றையும் செய்யவே செய்யும். ஜனநாயகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம் ஏன் மனித உரிமைகள் கூட ஆளும் தரப்பினருக்குரியவையாகவே இருந்து வந்துள்ளன. 1977/1994 காலத்தின் பதினேழு வருடகால ஐக்கிய தேசியக் கூட்சியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி எவ்வாறு இடம்பெற்றன என்பது மறதியாலோ அல்லது அறணைத்தன அரசியல் நாகரிகத்தாலோ மறக்கப்பட்டு விட்டது. வரலாற்றுப் பார்வையுடனும் யதார்த்தத்தின் வாயிலாக உண்மைகளைக் கண்டறிந்து கடந்த காலத்திலிருந்து படித்தறிந்து அரசியல் சிந்தனை செய்வது நமது நாட்டில் அருகிவிட்டது. அதற்கான சூழல் வராது தடுப்பதில் ஆளும் வர்க்க சக்கார் என்போர் எல்லாத் தரப்பிலும் இருந்து வருகிறார்கள். அதற்கேற்ற சமூகச் சூழலைத் தக்க வைப்பதில் உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகள் முனைப்புடனும் நுணுக்கமான வழிமுறைகளிலும் செயல்பட்டு வருகிறார்கள். * இதில் மஞ்சள் உடைதரித்தோர், வெண்ணுடை உடுத்தியோர்,முக்குறி வைத்துப் பொட்டுப்புனை பூசி நிற்போர், கோட்டுச் சூட்டுக் கழுத்துப் பட்டி அணிந்தோர், கறுப்பு வெள்ளைத் தோல் படைத்தோர் எல்லோருமே ஒன்றாகிக் கருத்துருவில் சங்கமமாகி நின்று வருகிறார்கள். இத்தகையோர் தான் சுதந்திரத்தின் பங்காளிகளும் பயனாளிகளுமாக இருந்து வருகிறார். ஆனால், மக்கள் தான் பாவத்தையும் சிலுவையையும் சுமப்பவர்களாக்கப்பட்டுள்ளனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் வேறுபாடு கிடையவேகிடையாது. * இவை ஒரு புறமிருக்க ஏழுவருடத்திற்க்கு அசைக்க முடியாத அதிகாரத்தைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ தேர்தல் வெற்றிக்குப் பின் கண்டியில் சுதந்திரதின உரையை நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை தன்னடக்கமான அம்சங்களாகக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை வழங்கியிருப்பதாகச் சில அரசியல் அவதானிகள் கருத்துக் கூறினர். சிங்களத்தில் மட்டுமன்றி தமிழிலும் பின் இயல்பாகப் பேசுவது போன்று பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அப்பேச்சில் வன்மத்தையோ அன்றி வக்கிரத்தையோ அவதானிக்க முடியவில்லை என்பது கவனத்திற்குரியதாயினும் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கண் மூடிக்கொண்டு தனது வழியில் இணங்கி வருமாறு கேட்டுக் கொண்டதையும் மகிந்த ராஜபக்ஷ வின் பேச்சில் காணமுடிந்தது. இனிமேல் பிரிவினைவாதம், இனவாதம், பயங்கரவாதம் வேண்டாம். நாம் ஒரு தாய் பிள்ளைகள். சிறுபான்மை இனம் என எவரும் இல்லை. சமாதானம், சமத்துவம், புரிந்துணர்வு, அபிவிருத்தி ஆகியவற்றுக்கு ஒன்றுபட வேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எல்லா இன மக்களும் சமம், எல்லோருக்கும் சமவுரிமை கிடைக்கவேண்டும். இவையே தமது எதிர்பார்ப்பு என்றும் கூறி இருந்தார். மேற்போக்காகப் பார்க்கும் எவரும் மகிந்த ராஜபக்ஷ கூற்றில் குறைகாண மாட்டார்கள். ஆனால், அவற்றுள் பொதிந்துள்ளவற்றுக்கு வெவ்வேறு வியாக்கியானங்கள் இருக்கவே செய்யும். இது எதிர்ப்பு அரசியலுக்கானவை மட்டுமன்றி, யதார்த்த நிலைகளுக்கும் அர்த்தம் தருபவையாகும். நாட்டின் முப்பது வருட யுத்தத்திற்கும் அதற்குக் காரணமான பிரிவினை வாதத்திற்கும் அல்லது பயங்கரவாதம்,இனவாதம் என்பனவற்றுக்கும் அடிப்படையாக அமைந்த காரணத்தை அல்லது காரணங்களை மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் சுட்டிக் காட்டவில்லை. அவ்வாறு சுட்டியிருந்தால் பேரினவாத மாயைக்குள் சிக்குண்ட சிங்கள மக்களுக்கு ஒரு சிறுபொறி அறிவூட்டலாக இருந்திருக்கும். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி, எதிர்த்தரப்பின் ஆளும் வர்க்கக் கட்சிகளோ கூட கூற முன்வரமாட்டார்கள். ஏனெனில் அவர்களது அரசியல் உயிர் மூச்சு அதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரதின உரையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார் என்பது அதிமுக்கிய சவாலாகும். இச்சவாலானது தனியொரு முனையில் மட்டுமன்றி, பல்வேறு முனைகளிலும் காணப்படுகின்றன. அதில் முக்கியமான இரண்டு விடயங்கள் அடிப்படையானதாகவும் பிரதானமானதாகவும் உள்ளன. 1. ஒன்று வர்க்க அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வும் பாரிய இடைவெளியுமாகும். 2. இரண்டாவது யுத்தம் முடிந்து விட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்பது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்பனவற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளதும் இன்றும் பிரதானமாகவும் இருந்து வருவது தேசிய இனப்பிரச்சினையாகும். இவ்விரு பிரச்சினைகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுக்கும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்குப் பாரிய இரண்டு சவால்கள் என்பதுடன் மூன்றாவது பெரும் சவாலாக இருப்பது வெளிநாட்டுக் கொள்கையாகும். ஏனெனில் கடந்த நான்கு வருட மகிந்த சிந்தனை ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்ஷ பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கையானது அமெரிக்க ஐரோப்பிய மேற்குலகிற்கு கசப்பானவையாகவே அமைந்து கொண்டன. அதேவேளை, கிழக்கு உலகு மற்றும் ரஷ்யா சார்ந்தும் இருந்தமை தற்செயலானவையல்ல. குறிப்பாக இந்தியா,சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு,மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை அரவணைத்து வந்தமையும் காணக்கூடியதாக இருந்து வந்தது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ தென்னமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களின் வரிசையில் வைக்கக்கூடியவர் என யாரும் எடைபோட முடியாது. ஏனெனில் தத்தமது நாடுகளின் இன்றைய இழிவுகளுக்கும் வளங்கள் கொள்ளை போவதற்கும் காரணமானவர்கள் முன்னைய கொலனிய ஏகாதிபத்தியவாதிகளும் இன்றைய நவகொலனிய பல்தேசிய நிறுவன உரிமையாளர்களும் தான் என்பதை தென்னமெரிக்க நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி,தமது நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து மீட்டெடுக்க சபதமேற்று குறிப்பாக தொழிலாளர்கள்,விவசாயிகளை உழைக்கும் மக்களது வாழ்க்கைத் தரத்தின் உயர்வுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டும் வருகிறார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்வரும் ஏழாண்டுகளில் முன்னெடுக்க முன்வரப்போவதில்லை. மேற்குலகத்திற்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் வளைந்து கொடுக்கும் அதேவேளை, இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திற்கு முற்றிலும் அடிபணிந்த போக்கையே அவர் பின்பற்றுவார் என்பது முன்னைய அனுபவங்கள் மட்டுமன்றி, தற்போதைய போக்கும் வெளிப்படுத்துகிறது. “நக்குண்டார் நாவிழந்தார் என்பது அனுபவ முதுமொழி. மகிந்த ராஜபக்ஷவின் வீரம்,துணிவு,விவேகம்,செயற்திறன் என்று கூறப்படுவதற்குப் பின்னால் புதுடில்லி ஆளும் வர்க்கத்தின் அரசியல் இராணுவ மூளைகள் இருந்து வந்தன. அத்தகையவர்களின் பங்களிப்புடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மை. ஆனால், அடுத்து அதற்கான பிரதியுபகாரம் அதே மூளைகளுடன் சேர்த்து பொருளாதார மூளைகளால் கோரப்படப் போகின்றன. * இது இனிமேல் மட்டும் இடம்பெறும் ஒன்றல்ல. ஏற்கனவே, பிராந்திய மேலாதிக்கத்திற்கான பிராந்திய பொருளாதாரப் பிடி இலங்கை மீது இந்தியாவால் இறுக்கப்பட்டு வந்த ஒன்றேயாகும். இருப்பினும் அதனை முழுமைப்படுத்துவதற்கு யுத்தமும் புலிகள் இயக்கமும் இந்தியாவிற்கான தடைகளாக இருந்து வந்தன. இப்போது அவை தகர்க்கப்பட்டு விட்டது. இனிமேல் ஏ9 வீதியாலும் வங்கக் கடலாலும் அரபிக் கடலாலும் வடக்கு,கிழக்கின் வளங்கள் இந்தியப் பெரு முதலாளிகளாலும் ராட்சத நிறுவனங்களாலும் வாரிச் சுருட்டிச் செல்லப்படும். அவற்றுக்கு அபிவிருத்தி, மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு என்றெல்லாம் பெயர்சூட்டி விடயங்கள் முன்னெடுக்கப்படும். கிழக்கே அனல் மின் நிலையம் முதல் வடக்கே சீமெந்து தொழிற்சாலை வரை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் முதல் மன்னார் எண்ணெய் அகழ்ந்தெடுத்தல் வரை விடயங்கள் பொருளாதாரச் சுரண்டல்களின் பரப்பளவு நீண்டு அகன்று செல்ல ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே, கூறப்பட்ட ஒரு கூற்றான “இலங்கை,இந்தியாவின் கொங்கொங் ஆக மாற்றப்படுகிறது என்பதில் சந்தேகம் வர முடியாது. அப்படி ஒருவருக்கு வருமானால் அத்தகையவர் ஒன்றில் அறிவிலியாக அல்லது முட்டாளாக மட்டுமே இருக்க முடியும். * இத்தகைய பரிதாபத்திற்குரியவர்கள் பரப்புரை செய்த மற்றொரு அடிமுட்டாள் கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் போர்க் கப்பலில் இருந்தும் விமானங்களில் இருந்தும் ஏனைய தரைச் சுடுகலன்களிலிருந்தும் வெளிவந்த குண்டுகள் தமிழ் மக்கள் மீது பூமாலைகளாகவும் உருத்திராட்ச மாலைகளாகவும் சந்தன,குங்குமங்களாகவுமே வீழ்ந்தன என்றும் சீன,பாகிஸ்தானிய குண்டுகளாலேயே தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் வரை மடிந்தனர் என்றும் கூறும் பிரகிருதிகளை இப்போதும் இலங்கையில் அதிலும் தமிழ்த் தரப்பில் காணுகின்றோம். * இங்கே கூறக் கூடியது நாடுகளோ,ஆட்சிகளோ பற்றி அக விருப்பு,வெறுப்புக்கு அப்பால் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நெஞ்சுக்குப் பொய் இன்றி நேர்மையாக எடுத்துரைக்கும் கருத்தும் கண்ணோட்டமுமே அதிமுக்கியமானதாகும். இவை நாடு,மக்கள், தேசிய இனங்கள், அவற்றின் எதிர்காலம் என்பன பற்றிய பரந்த அக்கறையிலும் ஆர்வத்திலும் இருந்து பிறக்க வேண்டும். அன்றி பழைமைவாத மேட்டுக்குடி உயர்வர்க்க கருத்தியலிலும் நடைமுறையிலும் இருந்து பிறக்க முடியாததொன்றாகும். எனவேதான் மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது என்பது முக்கியமானதாகிறது. அவர் 62 ஆவது சுதந்திரதின விழாவில் பேசியவை வெறும் சப்பிரதாய பூர்வமான பேச்சுகளின் ஒன்றோ அல்லது அவற்றுக்குரிய சரியான அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? பொறுத்திருந்து நோக்குவதைவிட வேறு எதைத்தான் உடன் எதிர்வுகூறலாகக் கூற முடியும். யாவற்றுக்கும் நாட்டு மக்களே இறுதியில் தீர்ப்புக் கூறும் சக்தி படைத்தவர்கள் என்பது மட்டும் சத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக