ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

நினைத்து பார்க்க முடியாதளவு போர்ப்பேரழிவுகளுக்கு மத்தியில் வன்னி பிரதேசம்

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது. போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது. இவ்வாறு கவலை தெரிவித்திருக்கிறார் ஜனவரி மாத இறுதியில் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம். யாழ்.ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் கடந்த மாதம் 29 ஆம் திகதி படையினரின் அனுமதியுடன் வன்னி சென்றிருந்தார். கிளிநொச்சி, மாங்குளம், ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்த அவர் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களின் நிலைமை களைக் கேட்டறிந்தார். தாம் சென்ற பகுதிகளில், மிகக் குறிப்பாக மாத்தளன் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகள், கொடூரங்கள், காணப்படும் எச்சங்கள் தமது மனதை உலுக்கியதாக அவர் பெரும் கவலையுடன் தெரிவித்தார். எங்கும் பேரழிவு. அவற்றைக் கண்டு மனம் திணுக்குற்றது. புனர்வாழ்வும், புனர் நிர்மாணமும் மிகப் பாரிய அளவில் தேவைப்படும். மக்கள் தமது ஆயுள்கால சேமிப்புக் களை இழந்துவிட்டார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள அமைப்பது பெரும் சுமையாக இருக்கப்போகிறது. கிராமங்கள் புதர் மண்டிக்காணப்படுகின்றன. வயல்கள் வனங்களாக மாறிவிட்டன. தேவாலயங்கள் அழிந்துவிட்டன. கடவுளர் திருவுருவங்கள் சேதமாகிக்காணப்படுகின்றன. நெல்வயல்களில் முள் பற்றைகள் மேலோங்கி வளர்ந்துள்ளன. கால்நடைகளை காண்பது அரிதாக உள்ளது. வீடுகள் சின்னாபின்னமாகி விட்டன. எரிந்துள்ள பஸ்கள், வான்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வீதிகளை மூடி குவிந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் மீள்வாழ்வை தொடங்குவது சாத்தியமாகுமா என்று மனம் பேதளித்தது. யாழ். ஆதீனத்துக்கு உட்பட்ட 17 பங்குகளைச் சேர்ந்த 110 தேவாலயங்கள் பயன்படுத்த முடியாதவாறு சேதமாகிவிட்டன. அவற்றில் பலவற்றில் புதர் மண்டிக்கிடப்பதையே காணமுடிந்தது. மொத்தத்தில் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களை திரும்பக் கட்டுவதும், மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் அவர்களால் தாங்கவொண்ணாத சுமையாகவே இருக்கப்போகின்றது என்று விவரித்தார் யாழ். ஆயர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக