வியாழன், 29 ஜூலை, 2010

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி!

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.


ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.


இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிகைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.


இந்த பத்திரிகைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கீல் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக