வியாழன், 29 ஜூலை, 2010

அம்மனுக்கு வந்த சோதனை ....ஜனநாயகம் இதுவல்லவோ .

வாகரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட அம்மன் முகக் கலசம் நீதிமன்ற உத்தரவின் பேரில் கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம்10 இலட்சம் ரூபா சரீர பிணையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை வெருகல் மலைச்சாரலடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல அம்மன் கலசத்தை வாகரை பொலிஸார் எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் நேற்று புதன்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைத்தனர்.


வாழைச்சேனை மாவட்ட நீதிவான் ரி.சரவணராசா முன்னிலையில் சிலையை ஒப்படைத்த போது இச்சிலையினை தங்களது ஆலயத்தில் வைத்து வழிபடுவதற்கு கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்தது.


1815 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பொருட்களே தொல்பொருள் ஆய்வுக்குரியவை என கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாக சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.


அதேவேளை, அச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் அதை வைப்பதற்கு பாதுகாப்பான இடமல்ல எனவும் இவ்விடயத்தில் தொல்பொருள் திணைக்களமே தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸார் கூறினார்.


இது தொடர்பாக ஆராய்ந்த நீதிவான், குறித்த அம்மன் கலசத்தினை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் வழங்க உத்தரவிட்டார்.


கதிரவெளி கிராம சேவை அலுவலகர் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி ஆகியோர் குறித்த அம்மன் சிலையை மேற்படி ஆலய நிர்வாகத்திடம் வழங்கலாம் என எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே அவர்களிடம் அம்மன் சிலை வழங்கப்பட்டது.


இவ்வழக்கு விசாரணையை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


கதிரவெளி காளி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அம்மன் சிலை, தற்போது விஷேட பூசை செய்து ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான பக்தர்கள் அங்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக