வியாழன், 29 ஜூலை, 2010

முருகனா தமிழனா .....?

(இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.)கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார்.






சில தினங்களுக்கு முன்னர் நடிகை அசினின் யாழ்ப்பாண விஜயத்திற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழருக்கு துரோகம் செய்த அசின் மீதான கண்டன அறிக்கைகள் நாலா பக்கமும் இருந்து பறந்து வந்தன. ஆனால் முருகப் பெருமான் மீது மட்டும் எந்தவொரு கண்டன அறிக்கையும் காணோம்.


"தமிழர்கள் முருகனின் திருவிழாக்களை பகிஷ்கரிக்க வேண்டும். பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு செல்லக்கூடாது." என்று தடையுத்தரவு எதுவும் வரவில்லை. இது கடவுளோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்று பயந்து ஒதுங்கி விட்டார்களா?


முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து இப்போது தான் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் முருகனுக்கு இந்த கோலாகலமான ஆடி வேல் திருவிழா தேவையா? அதுவும் யுத்தம் காரணமாக கடந்த 15 வருடங்களுக்காக தடைப் பட்டிருந்த திருவிழா அது.


கந்தன் ரத பவனி வரும் பாதை கொழும்பின் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி திருவிழா தடுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தலைமையகம், மத்திய வங்கி, அமைச்சகங்கள், தூதுவராலயங்கள் ஆகியனவற்றைக் கொண்ட கொழும்பின் இதயப் பகுதி என்பதால் அத்தனை கெடுபிடி.


15 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றின் பின்னர் தான் ஆடி வேல் ஊர்வலம் தடுக்கப்பட்டது. இருப்பினும் வன்னிப் பேரவலம் இடம்பெற்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த வருடம் ஆடி வேல் திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. தனது திருவிழா மீண்டும் நடப்பதற்கு நன்றிக்கடனாக, முருகப்பெருமான் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்ததை, தமிழ்த் தேசியக் காவலர்கள் என்று தம்மை காட்டிக்கொள்வோர் எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள்?


"ஆடி வேல் இரதத்தில் பவனி வந்தது ஒரு வெண்கலச் சிலை." என்று ஒரு நாத்திகன் கூறலாம், ஆனால் இந்து மதத்தை நம்பும் தமிழர்களுக்கு முருகன் எல்லாம் வல்ல இறைவன். முருகனின் பெயரில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்த கோயில் தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் இதே இந்துக்களின் மதிப்புக்குரியவர்கள்.


தமிழ் உணர்வாளர்கள் என்போர் முருகன் என்ற கடவுளை பகைத்துக் கொள்ள விரும்பாதிருக்கலாம். (மயில் மீதேறி வந்து வேலாயுதத்தை வீசி விட்டால்? நமக்கேன் வம்பு.) ஆனால் தர்மகர்த்தாக்கள் என்ற மனிதர்களை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கலாம்.


ஆடி வேல் திருவிழாவுக்கு நிதி வழங்குவது பிரபல தமிழ் வர்த்தகப் புள்ளிகள். கொழும்பு நகரில் நகைக் கடைகளின் வீதியான செட்டித் தெரு முதலாளிகள். கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருந்து வந்து நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் செட்டியார்கள். பலருக்கு கொழும்பில் மட்டுமல்ல சென்னையிலும் கடைகள் இருக்கின்றன.


செட்டித்தெருவில் நகைக் கடையில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் கூறினார். ஆடி வேல் திருவிழா செலவுகளுக்காக அனைத்துக் கடைகளிலும் நிதி சேர்க்கிறார்கள். நகை ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுக்கும் சிறு தொழில் முனைவர் கூட குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்கிறார். பெரிய முதலாளிகள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அந்த தெருவில் மொத்தம் ஆயிரம் கடைகளுக்கு குறையாமல் இருக்கும். ஒரு திருவிழாவுக்கு மட்டும் எவ்வளவு பணம் வசூலாகி இருக்கும் என்று நீங்களே கணக்குப் பாருங்கள். இதற்கிடையே ஆடி வேல் திருவிழாவை "உத்தியோகபூர்வமாக" பொறுப்பெடுத்து நடத்தும் சம்மாங்கோடு சிறி கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் வருமானம் தனியானது.


ஆடி வேல் திருவிழா இலங்கைத் தீவின் பழமை வாய்ந்த பாரம்பரிய விழாக்களில் ஒன்று. 1874 தொடக்கம் அது நகைக்கடை முதலாளிகளின் செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை விட புடவை வியாபாரம், இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தமிழ் முதலாளிகளும் ஆடி வேல் திருவிழாவுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். அதற்கு சாட்சியமாக வீரகேசரி பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமும் கொடுத்து விடுகின்றனர்.


இந்திய முதலாளிகள், இலங்கையில் நகை வியாபாரத்தில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய புடவை வகைகள், இரும்பு, உலோகம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்து விற்பதிலும் அவர்களின் ஆதிக்கம் தான். கடந்த 30 வருட காலமாக ஓயாத போர், அவர்களின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருந்தது. தற்போது தமது வணிக சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க தடையேதும் இல்லை என்ற சந்தோஷத்தில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தியிருப்பார்கள்.


இதிலே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெனில் தாமே தமிழ் உணர்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரின் வெற்று அறிக்கைப் போர்களில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கருதும் எல்லோரையும் எதிர்ப்பார்கள், தமிழ் முதலாளிகளைத் தவிர.


கூலிக்கு மாரடிக்கும் நடிகர்கள் இலங்கை செல்லக் கூடாது என்று தடை விதிப்பார்கள். ஆனால் பகிரங்கமாக இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் இந்திய/தமிழ் முதலாளிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இவர்கள் உண்மையிலேயே இலங்கை அரசை கவிழ்க்க விரும்பினால் வேறொன்றும் செய்ய வேண்டாம். இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.
வன்னிமைந்தன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக