வியாழன், 29 ஜூலை, 2010

வீழ்ந்தது வெட்கமல்ல, எழமுடியாமல் , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கத்துக்குரியது

தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. யாரிடம் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்க முடியும்? ஏதோ போகிற போக்கில் போகிறோம்’ என்று தன்பாட்டில் புலம்புவதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார் யாரோ ஒருவர். இது நடந்தது முறிகண்டியில். இந்த மாதிரிக் குழப்பங்களோடுதான்
இன்று பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் வடக்கு கிழக்கில். அப்படியான நிலைமை நாட்டில் இருப்பதால்தான் இந்தக் குழப்பங்கள் எல்லாம்
சனங்களின் குழப்பங்களுக்குக் காரணங்கள் ஏராளண்டு.


1. வன்னிப் போரில் கைவிடப்பட்ட மக்களின் சொத்துகளை எப்படி மீட்பது? எப்போது மீட்பது? இதற்கு யார் பொறுப்பு? யாருடன் தொடர்பு கொள்வது?


2. மீள்குடியேற்றப் பிரச்சினைகள் பலவுண்டு. வீட்டு வசதி, இழப்புகளுக்கான போன்றவை. இதற்கெல்லாம் யாரை அணுகுவது? என்ன மாதிரியான உதவிகளும் தீர்வுகளும் கிடைக்கும்? எப்போது இவை கிடைக்கும்?


3. போரின்போதும் போருக்குப்பிறகும் படையினடம் சரணடைந்து காணாமற் போனவர்களை எல்லாம் எப்படிக் கண்டறிவது? இதற்கு யாரை அணுகலாம்? இந்த விவகாரத்தை ன்னெடுத்துச் செய்வது யார்?


4. உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை எப்போது குடியமர்த்துவது? இந்தக் குடியமர்வுக்கு யார் பொறுப்பு? அந்த உத்தரவாதத்தை யார், எப்போது வழங்குவர்? அளிக்கப்படும் வாக்குறுதிகளின்படி இந்த மீள்குடியமர்வு நிச்சயம் நடைபெறுமா?


5. இதுவரையில் (கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக இறுதிப் போன்போது வடக்கு கிழக்கில் கொல்லப்பட்டவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களைப் பற்றிய மதீப்பீடுகளைச் செய்வது எப்படி? இவற்றைச் செய்வது யார்? இதுவரையில் இத்தகைய மதிப்பீடுகள் செய்யப்படாமைக்கு என்ன காரணம்?


6. தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள், புனர்வாழ்வு நிலையங்கள் போன்றவற்றில் இருக்கும் அரசியற் கைதிகள், முன்னாள் போராளிகள் எல்லாம் எப்போது விடுவிக்கப்படுவர்? இந்த விடுதலைகளுக்கு யார் ஏற்பாடு செய்வது?


இது மாதிரிப் பல முக்கிய பிரச்சினைகள் மக்களுக்கிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணவேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டாலே அரைவாசிப்பிரச்சினைகள் தீர்ந்து விடும். அதேவேளை இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன காரணத்தினாலும் தீர்வு காணாமல் இருக்கவும் முடியாது.


ஆனால், இந்தப் பிரச்சினைகளை முதன்மைக் கவனத்தில் எடுத்து, உரிய வழிறைகளைக் கண்டு பிடித்து, தீர்வைக் காணுவதற்கு சீரியஸாக எந்தத்தரப்பினரும் முயற்சிக்கவில்லை. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்வதானால், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எந்தக் கட்சியினரிடம் தெளிவான எந்தத் தீர்மானம் வேலைத்திட்டங்களும் இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பேசியிருக்கிறது. ஆனால், இந்த விவகாரங்களை மையப்படுத்தி, அது மக்களை அணிதிரட்டிப் போராடவில்லை. அதற்கு முயற்சிக்கவும் இல்லை.


மட்டுமல்ல, இந்த விடயங்கள் தொடர்பான சரியான தகவல், புள்ளிவிவரங்கள் போன்றவைகூட அந்த அமைப்பிடம் இல்லை. அவற்றை அந்த அமைப்பு இதுவரையில் திரட்டவும் இல்லை. இப்போது கூட இது தொடர்பாக அது எந்தத் தீர்மானத்துக்கும் வரவுமில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப்பேசியே அது காலத்தைக் கடத்துகிறது. இது மோசமான குற்றச்சாட்டு என்று யாரும் கோவிக்கக்கூடும். ஆனால், இங்கே அந்த அமைப்பின் மீது குற்றஞ்சாட்டுவது நோக்கமில்லை. பதிலாக மக்களை நோக்கி, மக்களின் பிரச்சினைகளை நோக்கி அந்த அமைப்பையும் அமைப்பின் கவனத்தையும் திருப்புவதே இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது.


தங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்காகவே நெருக்கடியான சூழலிலும் மக்கள் வாக்களித்தனர். அதிலும் அகதி முகாம்களில் இருந்து கொண்டே அவர்கள் வாக்களித்திருந்தனர் என்பதை இங்கே நினைவூட்டலாம். ஆனால், மக்களுடைய இந்தத் தலைமைப் பிரச்சினைகள் பற்றி இதுவரையில் கூட்டமைப்பு மேற்கொண்ட, ஆக்கபூர்வமான, நம்பிக்கையளிக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன?


அடுத்ததாக நாம் கேள்வியெழுப்புவது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கிழக்கில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண சபையினரிடம். அரசாங்கத்துடன் இணைந்து இந்தத் தரப்பினர் நிற்கின்றனர். அப்படி இணைந்து நிற்பதன் மூலம் அரசாங்கத்துடன் பேசக்கூடிய, பிரச்சினைகளைப் புரிய வைக்கக்கூடிய, இணக்கப்பாடுகளைக் காணக்கூடிய தீர்வுகளை எட்டக்கூடியதாக இருக்கும் என்று கருதியே இந்தத் தரப்பினரை ஆதரித்தனர் இன்னொரு தொகுதி மக்கள்.


ஆனால், இவர்கள் அரசாங்கத்துடன் அங்கம் வகித்து வருகின்ற போதும் இதுவரையில் மேலே சுட்டப்பட்டிருக்கும் பிரச்சினைகள் எதற்கும் எந்தத் தீர்வையும் காணவில்லை. எந்தப் பிரச்சினைக்கான உத்தரவாதங்களையும் வழங்கவும் இல்லை. இப்போது கூட இவர்கள் வழங்கக் கூடிய நிலையில் இல்லை என்றே தெரிகிறது. அப்படியாயின் இந்தத்தரப்புகள் அரசாங்கத்துடன் அங்கம் வகிப்பதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. எந்தத் தலையாய பிரச்சினைக்கும் தீர்வு காணடியாத நிலையில், அரசாங்கம் இந்தக் கட்சிகளை வைத்திருப்பதாயின் அதன் அர்த்தம் என்ன?


அடுத்தது, தேர்தலில் வெற்றி பெறாமல், நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல், வெளியே தமிழ்க்கட்சிகள் என்ற அடையாளத்துடன் இருக்கும் தரப்பினரைப் பற்றியது. ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், ரெலோ (சிறி அணி) போன்ற இந்தத் தரப்பினர், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இணைவு, ஒற்றுமை பற்றியெல்லாம் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.


இது நல்லதே. ஆனால், இந்த இணைவுக்கான சந்திப்புகளின்போது மேலே சொல்லப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி இவர்களால், எந்தப் பேச்சும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த இணைவுச் சந்திப்புகளை நடத்தியபோது, மக்களின் இன்றைய பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரும் அல்லாதோரும் தமிழ்க்கட்சிகள் என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் இந்த அவசர, அவசியப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நல்லெண்ண அடிப்படையிலாவது மென்னிலையிலாவது பேசியிருக்கலாம். அல்லது பேச முனைந்திருக்கலாம்.


ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தச்சந்திப்புகளின் போதான கவனமெல்லாம் இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிய விவாதங்களாகவும் அதை எப்படி இணைந்து வைப்பது என்பது பற்றியுமே இருந்தன. மக்கள் சந்தித்து வருகின்ற நெருக்கடிகளும் அவலங்களும் அவர்களுடைய வேதனைகளும் என்னவென்று தெரிந்திருந்தால் மேலே சொன்ன சகல தரப்பினரும் இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வைக் காண்பது? அதை எப்படிக் காண்பது? எவ்வளவு காலத்துக்குள் காண்பது? என்ற சிந்தனைக்குட்பட்டிருப்பர். ஆனால், அப்படி எவரிடம் நடக்கவில்லை. இதையே நாம் திரும்பத்திரும்ப இங்கே வலியுறுத்தி வருகிறோம். மக்கள் உச்சமான சகிப்புத்தன்மையோடு, வேறு வழியில்லாத நிலையில் மிகவும் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.


இந்த மக்களின் நெருக்கடி நிலையை, அவலத்தை, அவர்களுடைய பிரச்சினைகளை, இன்றைய வாழ்க்கையை அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் புரிய வைக்கும் ஒரு ஆரம்ப நிலை நடவடிக்கையைக்கூட இந்தக் கட்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை. இவையெல்லாம் குற்றச்சாட்டுகளே அல்ல. மக்களின் ஏமாற்றங்களும் கவலைகளுமாகும்.


குறைந்த பட்சம் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் பேசுவது, எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவது, தென்னிலைங்கை ஊடகங்களையும் மத அமைப்புகளையம் சந்தித்து நிலைமைகைளை விளக்குவது, இதன்மூலம் எல்லோருமாகச் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கு எந்த வகையில் உதவுவது என்று சிந்திப்பது என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். இதற்கு, இப்போது கூடக் காலம் பிந்தவில்லை. இனிமேலாவது அப்படியானதொரு முயற்சிக்குச் செல்லலாம். மனம் இருந்தால் இடமிருக்கும் என்று சொல்வார்களே, அந்த மனம் முதலில் வரவேண்டும்.


இங்கே இன்னொரு தரப்பினரையும் குறிப்பிட வேண்டும். அது புலம் பெயர் சமூகத்தினர். இவர்கள் பல கூறுகள், பல அணிகளாகச் செயற்படுகின்றனர். ஜனநாயத்தில் இது ஒன்றும் புதிதில்லை. ஆனால், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு உதவுவது என்ற அடிப்படையில் நடைறைக்குச் சாத்தியமான அளவில் முதலில் இவர்கள் சிந்திக்க வேண்டும்.


தமிழ் மக்களின் விடுதலைக்காகச் சிந்திக்கிறோம் என்பது, முதலில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலனில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அப்பாலான எந்த அரசியல் சிந்தனையும் நியாயமானதாகவும் மெய்யானதாகவும் இருக்க முடியாது. அல்லது, மேலே சுட்டப்பட்டிருக்கும் பிரச்சினைகள் முக்கியமானவை அல்ல என இந்தத் தரப்பினர்கள் சிந்திக்கிறார்களா?


இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிச் சிந்திக்கிறோம். அதைப் பற்றி ஆலோசிக்கிறோம் என்று வழமையைப் போலவே காலத்தைக் கடத்தப் போகிறார்களா?


ஏனெனில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் கூட எந்தத்தரப்பிடம் நடைமுறைக்குகந்த பொருத்தமான சிந்தனையோ பொறிமுறையோ இல்லை என்பதே உண்மை. இது மக்களுக்கும் தெரிந்த விசயம். ஒவ்வொருவரும் தமது கையடக்கப் பெறுமானத்தைப் பற்றி அதிதமாகக் கதைக்கலாம். ஆனால், அதை அரசாங்கத்துடன் பொருத்திக் கொள்வதில், அதற்கான வெளிச்சக்திகளின் ஆதரவைத்தேடிக் கொள்வதில் எந்த அளவுக்கு சாத்தியங்கள் உண்டென்பது கேள்வியே!


ஆக மொத்தத்தில், தமிழ் மக்களின் சார்பில் ஏகப்பட்ட கட்சிகளும் தலைவர்களுமிருக்கின்றனர். இவர்களில் எவரும் இனப்பிரச்சினைக்கும் மக்களின் முன்னுள்ள முக்கிய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக்கூடிய வல்லமையுடன் இல்லை. அதற்கான சிந்தனையுடனும் இல்லை. அதற்கான மனப்பாங்குடனும் இல்லை. இதுதான் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களது அவலமாகும்.


இதற்கிடையில் சீனாவின் ஆதிக்கம், இந்திய விஸ்தரிப்புவாதம், மேற்குலகின் காய் நகர்த்தல்கள் போன்ற ஆய்வுகளும் கதைகளும் வேறு. இந்த விவகாரங்களின் விளைவுகள்தான் உள்நாட்டு நெருக்கடிக்கான காரணம் என்றாலும் உள்நாட்டில் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்காத எந்த ஆய்வுகளும் பலனற்றவையே. அவை மேலும தவறுகளையும் பின்னடைவுகளையும்தான் தரும்.


இப்போதாவது சொல்லுங்கள், மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அரசியற் தீர்வு வரையில் காத்திருக்க வேண்டியதுதானா? அப்படியென்றால், அந்த அரசியற் தீர்வு எப்போது? அது எந்த வடிவில் வரும்? அதை யார் ஏற்படுத்துவது?
கே ,எம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக