வியாழன், 29 ஜூலை, 2010

மாணவர்களின் போராட்டத்தினால் கோட்டைப் பகுதி ஸ்தம்பிதம்!வீதிகளும் மூடப்பட்டன!


ருகுணு  பல்கலைக்கழக மாணவனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தினால் கொழும்பு கோட்டைப் பகுதி ஸ்தம்பிதம் அடைந்தது.
ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிவப்புக்கறை படிந்த வெள்ளைத் துணியொன்றை தலையில் கட்டியபடியும் சுலோக அட்டைகள், பதாதைகள் என்பவற்றை ஏந்தியவாறும் பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தினால் கோட்டை பகுதிக்கான அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான பொலிஸாரும் கலகமடக்கும் பிரிவினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத் தப்பட்டிருந்தது. கோட்டைப் பகுதிக்கான வீதிகள் மூடப்பட்டதனால் அதனை சூழவுள்ள பகுதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தினால் கோட் டைப் பகுதி ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.


ஒல்கொட் மாவத்தை, லேக் ஹவுஸ் சுற்று வட்டம் ஆகிய பகுதிகளுக்கான வீதிகள் முற்றாக மூடப்பட்டமையினால் பொதுப் போக்குவரத்துக்கு பெதும் இடைஞ்சல்கள் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திலும் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதியை முற்றாக முற்றுகையிட்டு அங்கு அமர்ந்துகொண்டனர். இவர்களுடன் நூற்றுக்கணக்கான பிக்கு மாணவர்களும் இணைந்துகொண்டனர்.


கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி ருகுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றையடுத்து சுசந்த அருண பண்டார என்ற மாணவன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவர் கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை உயிரிழந்திருந்தார். இவரது மரணத்துக்கு பொலிஸாரே காரணமென அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியிருந்தது.


இந்த நிலையிலேயே நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் நிலையத்துக்கு முன்னால் கூடிய மாணவர்கள் பொலிஸ் தலைமையகத்துக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும் பொலிஸாரின் நடவடிக்கையினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதனயடுத்தே மாணவர்கள் வீதியின் நடுவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக