வியாழன், 29 ஜூலை, 2010

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.....!

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப்
பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களே இப்படியான சிக்கலில் மாட்டியுள்ளார்கள்.


இராணுவத்தால் கையகப்படுத்தப்படும் இடங்களைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களில் குடியேறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இந்த முடிவு தமது விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேற்றத் திற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமிலிருந்து அழைத்துவரப்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.


எனினும் தங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பதிலாக மீள்குடியேற அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் இப்போது அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள். முறிகண்டிப் பிரதேசத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவான நிலப்பகுதி அரசாங்கத்தின் தேவைக்காக எடுக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையடுத்து இந்தப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வேறு இடத்தில் காணிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஒட்டி சுட்டான் பிரதேச செயலாளருக்கு பணித்திருப் பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இராணுவம் கையகப்படுத்தவுள்ள இடங்களிலுள்ள மக்களை உடனடி யாக அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவம் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தாங்கள் வேறு இடங்களில் வசிப்பதை விட உயிர்துறப்பது மேலானது என மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். இதேவேளை இவ்விடயம் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்த போதிலும் அதனால் பலனேதும் ஏற்படவில்லை என மக்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக