வியாழன், 4 பிப்ரவரி, 2010

டெங்கு காய்ச்சல்: பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அமைச்சு கடும் அறிவுறுத்தல்!

டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ஜிசியி வழங்கப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு பணிப்பாளர் டாக்டர் நிமல்கா பன்னிலஹெட்டி நேற்றுத் தெரிவித்தார்.இதேநேரம், டெங்கு காய்ச்சலிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதற்குத் தேவையான அறிவூட்டல் நடவடிக்கைகள் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்களில் எவருக்காவது இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதுடன் நீராகாரத்தையும் உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.வடமாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்திருப்பது தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடகீழ் பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சியை தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. என்றாலும், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருக்கும் பிரதேசங்களில் இரசாயனபுகை விசிறவும், மக்களுக்கு அறிவூட்டவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுளம்புகள் பெருகக் கூடியவகையில் சுற்றாடலைக் கொண்டிருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். என்றாலும் நுளம்புகளால் பரப்பப்படுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. சுற்றாடலை நீர்தேங்க முடியாதபடி சுத்தமாகவும், உலர்நிலையிலும் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக