வியாழன், 4 பிப்ரவரி, 2010

மீளமுடியாத இரத்தக்களரிக்குள் பிரவேசிக்கும் சிங்கள ஆட்சி

இலங்கையில் என்ன நடக்கிறது என்றொரு கேள்வி இப்போது உலகரங்கில் உன்னிப்பாக எழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. ஆனால் கேள்விதான் புதிதாக உள்ளது. கொழும்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நோக்கி இராணுவம் துரத்தத் தொடங்கியுள்ள நிலையில் இக்கேள்வி எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக இளைஞர்களையும், யுவதிகளையும் துரத்திப் பிடித்து செம்மணியில் நரவேட்டையாடிய அந்தத் தளபதியை, அவர் வளர்த்த அதே இராணுவம் இப்போது துரத்தத் தொடங்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டு ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்’ என்றொரு சட்டத்தை ஜே.ஆர். அரசாங்கம் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்தில் தனது இராணுவ ஆட்சியை முதன்முறையாக ஆரம்பித்தது. அப்போது அந்த இராணுவ ஆட்சியை பயங்கரவாத நடவடிக்கை எனப் பெயரிட்டு, பிரித் ஓதி ஆசிர்வாதம் வழங்கி சிங்கள மக்கள் ஆதரித்தனர். இவ்வாறு இராணுவ ஆட்சி பிரித்தோதலுடன் 1979 ஆம் ஆண்டு சம்பிரதாய பூர்வமாய் உதயமானது. கொழும்பில் ஜே.ஆர். ஆட்சிக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் வளரத் தொடங்கிய பின்னணியில், அவர்களை அடக்குவதற்கென ‘இலங்கை விசேட அதிரடிப்படை’ எனப்படும் அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழருக்கு எதிராக எக்கொடும் செயல்களைச் செய்தாலும் அது சிங்கள மக்களின் பேராதரவைப் பெறும் என்பதால், தமிழருக்கு எதிரான உயர்குழாத்துப் படையாக அதனை ஜே.ஆர்.ஆல் உருவாக்க முடிந்தது. அது அப்பாவித் தமிழ் மக்கள் மீது தனது இரத்தம் தோய்ந்த பயிற்சிகளையும், அனுபவங்களையும் பெற்று ஓர் இரத்தப் பூச்சியாய் வளர்ந்தது. அந்த இரத்தப் பூச்சிகள் தான் இப்போது கொழும்பில் பொன்சேகாக்களைத் துரத்துகின்றன. 1988 – 1990 காலங்களில் தெற்கில் ஜே.வி.பி. இளைஞர்களையும், யுவதிகளையும் வேட்டையாடுவதில் இந்த விசேட அதிரடிப்படை தலையாய பாத்திரம் வகித்தது. ஈரானின் ஷா மன்னனது ‘ஷவாக்’ படையின் பாணியில் இந்த விசேட அதிரடிப்படை இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனால் கட்டி வளர்க்கப்பட்டது. ஷா மன்னன் ஒரு ‘ஷவாக்’ படையை மட்டும் தன் படுகொலைகளுக்காக வைத்திருந்தார். ஆனால் இலங்கையில் அது பல்வேறு பொலிஸ், இராணுவ, புலனாய்வு, உப அமைப்புகளுக்கு ஊடாக பங்கு போடப்பட்டு மிகவும் மெருகாக வளர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இலங்கையில் உள்ள அனைத்து இரகசியப் படைப்பிரிவுகளும் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளும் இதன் குட்டிகளே ஆகும். இப்போது ‘ஷவாக்’ படைப் பாணியானது விசேட படைப்பிரிவும் அதன் குட்டிகளும் என விரிவடைந்துள்ளன. தற்போது மேற்படி வகை சார்ந்த பல பிரிவுகளும் ஒன்று சேர்ந்து நுட்பமாக இயங்கக் கூடிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. கொழும்பில் பொன்சேகாக்களையும், சோமவம்சக்களையும், சமரவீரக்களையும் துரத்துவதில் மேற்படி பல பிரிவுகளும் மிக நுட்பமாக ஒருங்கிணைந்து செயற்படுகின்றன. பொலிஸ் ஆகிய சிவில் ஆயுதப் பிரிவு விசாரணை நடத்த களத்தில் குதிக்கும் போது, ஏனைய உயர் தொழிநுட்ப வசதி கொண்ட விசேட அதிரடிப் படைப்பிரிவுகள் அதன் இரண்டாம் அல்லது மூன்றாம் வளையங்களை தேடுதலின் போது அமைத்துக் கொள்கின்றன. அதாவது நடுவில் முதலாவது பிரிவாக சிவில் சார் பொலிஸ் படை அரங்கத்தில் குதிக்க, மேற்படி ஏனைய படைப் பிரிவுகள் அதன் புறவட்ட வளையங்களாக அணியமைத்துச் செயற்படுகின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக பெறப்பட்ட பயிற்சி இங்கு நுட்பமான அனுபவங்களுடன் அரங்கேறி வருகின்றது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவே இராணுவம் தனது முதலாவது வட்டத்தில் பிரவேசித்துவிடும். ஆனால் சிங்கள மண்ணில் அது மிக மெருகாக இரண்டாம் அல்லது மூன்றாம் வட்டங்களில் பிரவேசிக்கின்றது. அதாவது முதலாவது வட்டத்தின் செயல் அதன் இரண்டாம் அல்லது மூன்றாம் வட்டங்களின் பின்னணியிலேயே நிகழ்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஓர் இராணுவ ஆட்சி செயல் வடிவங்களே ஆகும். இராணுவ ஆட்சி முறை சார்ந்து உலகிற்கு பல புதிய அனுபவங்களையும், நடைமுறை வடிவங்களையும் இலங்கைத்தீவு தனது பங்களிப்பாய் வழங்கப் போகிறது. இதற்கான முழுப்பயிற்சியும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதே நிகழ்ந்து முடிந்துள்ளன. வன்னி மீதான யுத்தமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் இந்த வகையில் உலகளாவிய இராணுவ வியூகத்தில் ஒரு சங்கிலிக் கொளுக்கியாய் அமைந்துவிட்டது என்பதை எதிர்கால அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் தெளிவாய் குறிப்பிடுவர் என்பதில் சந்தேகமில்லை. அந்தளவிற்கு தமிழ் மக்கள் உலகளாவிய அரசியல், இராணுவ வியூகத்திற்கான ஒரு பயிற்சிக் களமாய் பயன்படுத்தப்பட்டனர் என்பது ஒரு வேதனைக்குரிய வரலாற்று உண்மையாகும். அத்தகைய பயிற்சி நடவடிக்கையில் பரிசோதகராய் களத்தில் செயற்பட்டு வந்த சரத் பொன்சேகா இப்போது அந்த பரிசோதனை வெற்றியினால் பதம் பார்க்கப்படுபவராகின்றார். சரத் பொன்சேகாவின் மீது இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டபோது அவர் கூறியுள்ள வார்த்தைகள் இங்கு மிகவும் கவனத்திற்குரியவை. அதாவது அவர் தங்கியிருந்த விடுதி 26 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸ், இராணுவ, விசேட அதிரடிப் பிரிவுகளினால் சுற்றி வளைக்கப்பட்ட போது ‘உண்மைக்குப் புறம்பான சக்திகள்’ தன்னையும், தனது ஆதரவாளர்களையும் சுற்றி வளைத்திருப்பதாக ஊடகங்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அறிக்கையிட்டார். சில தினங்களுக்கு பின் அவரது வீடு சுற்றி வளைக்கப்பட்டு நான்கு மணித்தியால தேடுதலுக்கு உள்ளான போது, இலங்கையில் ‘இடி அமீன் ஆட்சி’ நிகழ்கிறது என பகிரங்கமாக குற்றஞ் சாட்டினார். தன்னுடன் துணைக்கு நின்ற 13 பேர் விசாரணைக்காக விசேட பொலிஸ் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டதையும், தனது கணனிகளும், ஆவணக் கோப்புகளும் படையினரால் எடுத்துச் செல்லப்பட்டமை பற்றி அவர் குறிப்பிடுகையில் அவற்றை ‘முட்டாள்த்தனமான, அபத்தமான’ செயல்கள் என சினந்து கூறியவற்றையும் சிங்கள ஊடகங்கள் முதன்மைப்படுத்தி இருந்தன. இவை தமிழ் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நிகழ்ந்தவைதான். ஆனால் அப்போது இதனை கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ள மறுத்தவை மட்டுமன்றி, இத்தகைய செயல்களை பெரிதும் நியாயப்படுத்தியும், வரவேற்றும் எழுதின. எனவே அவர்களின் கண்களுக்கு இவை புதிது போல இருந்தாலும், வரலாற்றின் கண்களுக்கு தற்போது கொழும்பில் நடப்பவை ஒன்றும் புதிதல்ல. தமிழ் மக்களுக்கு நடந்தவைதான் இப்போது அங்கு தொடர்கிறது. இதுதான் வரலாற்றின் இரண்டக நிலை. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மனம் இராணுவச் சட்டங்களுக்கும், படுகொலைக் கலாச்சாரங்களுக்கும் பழக்கப்பட்டாயிற்று. இராணுவ அட்டூழியம் என்பது தமிழருக்கு எதிரானது என்ற வகையில் சிங்கள கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளபட்ட நீதிநெறியாயும், விழுமியமாயும் மாறிவிட்டது. இலங்கையின் சட்டப் புத்தகங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும், அரசியல் மேடைகளிலும் ஊடகப் பரப்புக்களிலும் இத்தகைய இராணுவக் கலாச்சாரம் தமிழருக்கு எதிரானது என்ற வகையில் போசித்து வளர்க்கப்பட்டிருக்கிறது. எனவே இலங்கையின் அரசியல் அகராதியில் இராணுவம் என்பது ஒரு புனிதச் சொல். இரத்தம் என்பது புனித தீர்த்தம் எனும் அர்த்தத்தையே கொண்டதாய்க் காணப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில் கொழும்பில் இப்போது நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஒரு சிறிய வித்தியாசம் இதில் உண்டு. அதாவது இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்தவையும், நடந்ததில் பயிற்சியும் அனுபவமும் பெற்றவையும் இப்போது சிங்களவர் தலையில் நிகழத் தொடங்கியுள்ளன என்பதுதான். அதிலும் விசித்திரம் என்னவெனில் செய்தவர்கள் மீதே, அது செய்விக்கப்படுகிறது என்பதுதான். இதில் இன்று ஏவுவோர் நாளை ஏவப்படுவோர் ஆகலாம். இதில் கால வேறுபாட்டைத் தவிர பொருள் வேறுபாடு இல்லை. செயற்படு பொருள் வேறுபாட்டைத் தவிர செயல் வேறுபாடு இல்லை. செயல் வேறுபாட்டில் ஒரு சிறு வித்தியாசம் இருக்கலாம். அதாவது தமிழர் மீது அது செயற்படுத்தப்பட்ட போது இருந்த மெருகை விடவும், அதன் மீதான அனுபவத்தின் பிரகாரம் மெருகு அதிகமானதாக இருக்கும். அதாவது செயல் வேறுபாடில்;லை – மெருகு வேறுபாடு மட்டுமே உண்டு. ‘அரசு என்றால் அது ஓர் ஒடுக்குமுறை நிறுவனம். இராணுவமே அந்த ஒருக்குமுறையின் முதலாவது கருவி’ என்ற புரட்சிகர மார்க்சிய தத்துவத்தைப் பயின்றோராகத் தம்மைக் கூறுவோர் ஜே.வி.பி.யினர். அந்த ஜே.வி.பி.யினர் தமிழருக்கு எதிராக, இராணுவத்தை சூரையாக்கள், வீரயாக்கள் என்று போற்றி வளர்ப்பதிலும், இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதிலும் பெரும் முனைப்பாய் ஈடுபட்டவர்கள். அவர்கள் முதலாளித்துவ இராணுவம் என்று வர்ணிக்கும் அதே இராணுவத்தை மிக உற்சாகமாக வளர்க்க உதவியதுடன், எல்லா வகையிலும் இராணுவ அட்டூழியங்களையும், படுகொலைகளையும் முன்னின்று நியாப்படுத்தி பெரும் பிரச்சாரம் செய்தவர்கள் ஆவர். பேரினவாதம் இராணுவ வாதத்திற்கான சித்தாந்தம் என்பதை ‘புரட்சி’ பேசிய ஜே.வி.பி.யினர் கண்டுகொள்ளத் தவறினர். அவர்களால் தர்மவான்கள் எனவும் நாடு காக்கும் தியாகிகள் எனவும் போற்றிப் பெருப்பிக்கப்பட்ட அந்த இராணுவம் இப்போது அவர்களது தலைமாட்டிலும், கால்மாட்டிலும், படுக்கை அறைகளிலும், கழிப்பறைகளிலும், சாலைகளிலும், ஓரங்களிலும் அவர்களைச் சுற்றி வலைவிரித்து வருகிறது. அவர்களை இப்போது அச்சுறுத்துவது வேறு யாருமல்ல. அவர்கள் தமிழருக்கு எதிராகப் போசித்த, பாராட்டி வளர்த்த, புகழ்ந்துரைக்கப்பட்ட அவர்களின் இராணுவம்தான். அதாவது கொழும்பு 30 ஆண்டுகளுக்கு முன்னமே, 1979 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குள் வெளிப்படையாக பிரவேசித்த போது, அதை தமிழருக்கு எதிரான யுத்தம் என்ற வகையில் ஒரு புனிதப்படையாக கண்டுகொண்ட அந்த சிங்கள மக்கள் மீது, இப்போது அந்த புனிதப்படை தன் துப்பாக்கியை நீட்டியுள்ளது. இங்கு வித்தியாசம் என்னவெனில் நேற்று தமிழருக்கு எதிராக நீண்டிருந்த துப்பாக்கி இப்போது சிங்களவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது என்பது மட்டும்தான். எனவே கொழும்பில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. சிங்களக் கண்கள் கண்டு கொள்ளத் தயாரில்லாத, மாறாக போற்றப்பட்ட இராணுவ ஆட்சி இப்போது அவர்களின் முற்றத்தில் அரங்காடுகிறது என்பதுதான். ஆனால் தமிழரைப் பொறுத்து இங்குள்ள அபாயகரமான விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டாலும், அதனை தமிழர் பக்கம் திசை திருப்பி தங்கள் ஆட்சி அரங்கக் கூத்துக்களை நிறைவேற்றிவிடுவார்கள். அப்படியாயின், இனிவரப் போகும் சிங்களவர்கள் மத்தியிலான ஆட்சி அதிகாரப் போட்டி நெருக்கடிகளை தமிழரின் தலைகளில் உழுந்தாய் அரைக்க முற்படுவார்கள் என்பதே. எனவே தமிழர் எத்தகைய கானல் நீர் கனவுகளையும் காணாது முன்னெச்சரிக்கையுடன் முகம் கொடுத்தாக வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை வந்தால் அதனை தமிழர் பக்கம் திருப்பி 1958 இனப்படுகொலை, 1983 கறுப்பு யூலைப் படுகொலை போன்ற இனப்படுகொலைகளாக திசைதிருப்பி தம் கதிரையைப் பலப்படுத்துவார்கள். கல்விப் பிரச்சினை, வேலை வாய்ப்புப் பிரச்சினை என்றால் அதனை இனப்பிரச்சினையாக்கி தரப்படுத்தல்களைக் கொண்டு வருவார்கள். மற்றும் தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதத்தை நேரடியாகக் கக்குவார்கள். எனவே, இப்போது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சிங்கள ஆளும் உயர்குழாத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சமரசம் செய்ய முடியாத ஆதிக்க முரண்பாடானது, இனவாத வடிவத்தைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாய் வடிவம் பெறவேண்டிய கட்டம் உருவாகி இருப்பதனால், தமிழ் பேசும் மக்கள் சார்ந்த எத்தகைய உரிமைகளையும், அதற்கான தீர்வுகளையும் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. * அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலை இனவாதத்தை இன்னொரு பக்கம் உயர்த்தியுள்ளதே தவிர, அது பண்பளவில் குறையப் போவதில்லை. இப்பின்னணியில் நின்றே கொழும்பில் அரங்கேறத் தொடங்கியிருக்கும் இராணுவ ஆட்சியை தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்க வேண்டும். அதாவது மீளமுடியாத இரத்தக் களரிக்குள் சிங்கள ஆட்சி பிரவேசிக்கிறது. அதில் தமிழ் பேசும் மக்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும், முன்னனுபவத்துடனும் தங்கள் அடிகளை எடுத்து வைக்கவேண்டும். இங்கு கவனத்தில் கொள்ளத்தக்க விடயம் என்னவெனில் இராணுவ ஆட்சி அளவு ரீதியான மாற்றத்தை அடைந்துவிட்டது என்பது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக