வியாழன், 4 பிப்ரவரி, 2010

சிறிலங்காவில் அடுத்து என்ன நடக்கும்?

இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச – தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்மையான அமைதியை ஏற்படுத்தக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பம் வீணடிக்கப்பட்டு விடும் என்று அவதானிகள் பலரும் அஞ்சுகின்றனர். இவ்வாறாக அமெரிக்காவில் வெளியாகும் வோஷிங்டன் போஸ்ட் [Washington Post] ஏடு தெரிவித்துள்ளது. Fisnik Abrashi மற்றும் Krishan Francis ஆகியோர் அதில் மேலும் எழுதியுள்ளதாவது: இந்த வருடத்திலேயே பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் – தாங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சுயாட்சி மற்றும் சம உரிமைகளைக் கோரும் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதற்குத் அடுத்த நாடாளுமன்றம் அமையும் வரை காத்திருக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச கோடிகாட்டி உள்ளார். சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் குறித்த தமிழ் பேசும் மக்களின் பயத்திற்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், இன முரண்பாடுகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு அதிலிருந்து வன்முறை இன்னும் வீரியத்துடன் மீண்டும் வெடித்துக் கிளம்பக் கூடும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இனிமேல் கிடையாது. அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் தடையாகப் ‘பயங்கரவாதம்’ இருக்கின்றது என இனி நியாயப்படுத்த முடியாது” எனக் கூறினார் சக்திவேல் பாலகிருஷ்ணன். மாற்றுக் கொள்கைகளுக்கான அபிவிருத்தி நிலையத்தின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் அவர் [an analyst with the research group Center for Development Alternatives ]. தனி நாட்டுக்காகப் போராடிய தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் சிங்கள மேலாண்மை அரசுக்கும் இடையிலான போரால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்து சமுத்திரத்தின் அழகிய இந்தத் தீவு நுகரப்பட்டுள்ளது. அரச நடத்திய தாக்குதல்களில் போராளிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்த வெற்றி நாட்டுக்கு அமைதியையும் ராஜபக்சவுக்குப் பெருமையையும் தேடித் தந்தது. அதன் பின்னர் ராஜபக்ச மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், போராளிகளின் முன்னாள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்த மக்களுக்கு சாவுகளையும் அழிவுகளையும் கடும் துன்பங்களையும் தான் இந்தப் போர் கொடுத்தது. போரின் கடைசி நாட்களில் மட்டும் 7,000 தமிழ் மக்கள் உயிரிழந்தனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசினால் ஏற்படுத்தப்பட்ட போர்க் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு நிகரான தடை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 100,000 பேர் இன்னும் அங்கேயே உள்ளனர். போராளிகளுடன் தொடர்புடையவர்கள், அவர்களைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் 11,000 பேர் தனியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள – தமிழ் இனங்கள் இடையிலான பிளவு இன்னமும் அப்படியே இருக்கின்றது என்பதைக் கடந்த வாரம் நடந்து முடிந்த குடியரசு அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அவர் மீண்டும் வெற்றி பெற நாடு முழுவதும் ஆதரவு இருந்த போதும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர் தோல்வி அடைந்தார். “தான் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; எனவே தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புறந்தள்ளி விடலாம் என்கிற எண்ணங்கள் எழுவதை அவர் (மகிந்த) தடுத்து நிறுத்த வேண்டும்” என சண்டே லீடர் பத்திரிகை கடந்த ஞாயிறன்று எழுதி இருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் கொள்கைகளை நிராகரித்து அவருக்க எதிராகத் தமிழர்கள் வாக்களித்தார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். “தாங்கள் வேறான ஒரு மக்கள் இனம் எனச் சொல்கிறார்கள் தமிழர்கள். எனவே அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை” என்றார் சுரேஷ். “தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் (சிங்களவர்கள்) நிச்சயம் தயாராக வேண்டும்” என்பது அவரது கருத்து. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு, அங்குள்ள 9 மாகாணங்களும் தன்னாட்சி உரிமையை ஓரளவு அனுபவிப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அப்படி இருந்த போதும் வடக்கு-கிழக்கு மாகாணத்தின் உரிமைகள் அதிகாரம் மிக்க பெரும் கையான மத்திய அரசால் அபகரிக்கப்படுகிறது எனச் சொல்கிறார்கள் விமர்சகர்கள். இரண்டாவது தடவையாகத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த ராஜபக்ச, தான் சிறிலங்கா மக்கள் அனைவரினதும் அதிபராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தமிழர் பிரச்சினைக்கு சிறிலங்காவிற்குள்ளேயே தயாரிக்கப்படும் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்காக இந்த வருடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். எப்படி இருந்தாலும், தமிழர்களால் ஆழப்படுகின்ற, தன்னாட்சி உரிமை கொண்ட பிராந்தியம் ஒன்று சாத்தியம் இல்லை என்று ராஜபக்சவின் தேர்தல் கொள்கை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. “பிரிக்கப்பட முடியாத ஒரே நாடு” என்பதே அவரது முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. நாடு முழுவதும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதன் ஊடாக இன நல்லிணக்கத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகின்றது. வடக்கு – கிழக்கில் காணப்படுவது இனப் பிரச்சினை அல்ல என்றும், அதனை அங்கு காணப்படும் ஒரு இயல்பான பொருளாதாரப் பிரச்சனையாகவே தாம் பார்ப்பதாகவும் அரசு மேலும் கூறுகிறது. முன்னர் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் போர் காரணமாக மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள உட்கட்டுமானங்கள் மிகப் பழமையானவை. புற்றீசல் போல் – எங்கும் – சிறிதும் பெரிதுமான படை முகாம்கள் தமது பகுதிகளில் காணப்படுவதாகத் தமிழர்கள் குறைப்படுகிறார்கள். சில இடங்களில் தனியார் காணிகளும் முகாம்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்களின் உடனடித் தேவை மனிதார்ந்த உதவிகள் தான். அவர்களது சொந்த மாவட்டங்களில் மீளக் குடியமர்த்துதல், உணவு, இருப்பிடம் என்பவை அவர்களுக்கு உடன் வழங்கப்பட வேண்டிவை. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் செல்வது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களுக்குச் செல்வதாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் நீண்ட காலம் எடுக்கும் என்கிறார்கள் அரச அதிகாரிகள். அதே சமயத்தில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து ராஜபக்ச பொதுக் கூட்டங்களில் கூறும் கருத்துக்களின் படி, “தீர்க்கப்பட வேண்டியதான இனப்பிரச்சினை அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை அவர் கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறார்” என்பது தெரிகிறது எனச் சொல்கிறது அனைத்துலக பிரச்சினைகள் ஆய்வுக் குழுவின் [International Crisis Group - ICG] அறிக்கை. இருந்தாலும், “30 வருட கால உள்நாட்டுப் போர் மூழ்வதற்குக் காரணமாக இருந்த இனப் பதற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பு மாற்றம் அல்லது வேறு மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு இதுவரை ராஜபக்ச அரசு ஆர்வம் காட்டவில்லை” என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. எதிர் காலத்தில் என்னதான் தீர்வு காணப்பட்டாலும் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனச் சொல்கிறார் ராஜபக்ச. தமிழர்களுக்கு எந்த மேலதிக உரிமையை வழங்கினாலும் அது, குடியரசு அதிபரின் ஆதரவுத் தளமாக இருக்கும் சிங்களத் தேசியவாதிகளுக்கு வெறுப்பூட்டும். “தமிழர்களுக்கு மேலதிக உரிமைகள் எதுவும் கொடுக்கப்படக் கூடாது” என உறுதியாகச் சொல்கிறார் 50 வயதான தர்மசிறி ராஜபக்ச. அதிபரின் ஆதரவாளர் அவர். “எல்லாப் பகுதிகளுக்கும் சமமான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதனால் வடக்கு – கிழக்கு என சிறப்பான அதிகாரங்கள் எவையும் வழங்கப்பட வேண்டியதில்லை” என அவர் தனது கருத்தை மேலும் அடுக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக