வியாழன், 4 பிப்ரவரி, 2010

எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள்

தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த அரசியல் குத்தகையாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் தாமே இருக்கவேண்டும் என்பதில் ஆதிக்க அரசியல் நடத்திவந்த தலைமைகளின் எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள் இருந்து வருகின்றன தமிழ் மக்கள் உணர்த்தியிருக்கும் உண்மைகளை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ளுமா? இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்துவந்த மகிந்த ராஜபக்ஷவும் இராணுவத் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கி நின்றனர். இலங்கையின் இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தத்தமக்குரிய கூட்டாளிக் கட்சிகளை அணி சேர்த்து நின்று பிரசாரப் போரில் ஈடுபட்டுவந்தன. இதற்காக இரு தரப்பிலும் செலவு செய்யப்பட்ட பணம் சுமார் 500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இத்தகைய தேர்தல் செலவுகளுக்குப் பின்னால் இலங்கையின் முன்னணிக் கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள், வர்த்தக நிறுவனத்தினர் எனப் பற்பல பேர் இருந்து வந்துள்ளமை முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. அதியுயர் ஜனநாயகம் பேசும் அமெரிக்காவிலும் பாரத புண்ணிய பூமியிலும் ஜனநாயகத் தேர்தல்களில் பணநாயகம் வகிக்கும் பாத்திரம் பற்றி யாரும் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியிருக்க இலங்கையில் இதெல்லாம் சிறிய விடயங்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறார். இருப்பினும், அவர் எதிர்பார்த்தளவான 65 வீத வாக்குகளைப் பெற முடியாமல் போனமை உள்ளார்ந்த ஒரு மனக்குறை என்பது காணக்கூடியதே. போர் வெற்றி , புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்பனவற்றின் அடிப்படையில் 65 இற்கும் 70 இற்குமிடையிலான அமோக வாக்குகளைச் சிங்கள மக்களிடமிருந்து பெற்று இது வரையிலும் இல்லாததும் எதிர்காலத்தில் பெற முடியாததுமான ஒரு மகத்தான வெற்றியைப் பெறவே மகிந்த ராஜபக்ஷ முயன்றார். அதனாலேயே இரண்டு வருடங்கள் முன்பாகத் தேர்தலை நடத்தினார். அவர் ஏற்கனவே சந்திரிகா அம்மையார் 1994 இல் பெற்றிருந்த அதியுயர் வீதமான 62 வீதத்தைத் தாண்டிச் சென்று ஒரு சாதனையை நிலைநாட்டவும் பெரு முயற்சி செய்தார். ஆனால், சிங்கள மக்கள் அந்தளவிற்கு முன்வரவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் கூறியுள்ளன. 57.88 வீதமான வாக்குகளே கிடைத்தன. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி மூலமான சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் 40.15 வீத வாக்குகளாகவே உள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளில் இருந்து சுமார் ஏழு வீத வாக்குகளை மகிந்த ராஜபக்ஷ இம்முறை கூடுதலாகப் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. போர் வெற்றி, புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்பனவற்றைத் தமது சாதனையாகவும் அடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வது என்ற இலக்கை முன்வைத்ததிலும் அடுத்த பதவிக் காலத்தை அதே மகிந்த ராஜபக்ஷவிடம் கொடுக்க வேண்டுமென்பதில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன் அரசாங்கத்துடன் இருந்துவந்த கட்சிகள் மகிந்தாவைத் திரும்பவும் கொண்டு வருவதில் ஒருமுகமாக இருந்தும் வந்துள்ளன. அவற்றுக்குரிய இலக்கு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலேயாகும். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கிய கூட்டின் மீதான மக்களின் நம்பிக்கை அதிக அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. அது ஒருவகையான தோற்றப்பாடே தவிர, சரத் பொன்சேகா முன்வைத்த “நம்பிக்கையான மாற்றம்’ என்பதற்கான வலுவுள்ள அடிப்படைகளை மாற்றுக்கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி.,மனோகணேசன், மங்கள சமரவீர போன்றோர் கூறியவற்றை மக்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால், இதே கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டும் நிலைக்கும் வந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் அதிருப்தியே காணப்படுகிறது. எவ்வாறாயினும் ரணில் தொடர்ந்த தோல்வியின் சின்னம் என்பதிலிருந்து தப்பி சரத் பொன்சேகா மீது அதனைச் சுமத்தியுள்ளமையையும் காணமுடிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் வென்றாலும் ஒன்றுதான் என்பதே இலங்கை அரசியல் பரப்பில் காணப்படும் யதார்த்தமாகவுள்ளது. ஆனால், ஒவ்வொரு கட்சியும் எடுத்த அரசியல் நிலைப்பாடானது அவர்களது வங்குரோத்துத் தனமான சந்தர்ப்பவாத அரசியலையும் அதனூடாகத் தமது உழைக்கும் மக்களுக்கு விரோதமான உயர் வர்க்க நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளமை கவனத்திற்குரியதாகும். அந்த வகையில் ஜே.வி.பி.தனது தொழிலாளி வர்க்க துரோகத்தனத்தையும் சந்தர்ப்பவாத சரணடைவையும் வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டது. இவர்களது சந்தர்ப்பவாத பாராளுமன்ற சாக்கடை அரசியல் போக்கு ஏற்கனவே நிகழாத ஒன்றல்ல என்றபோதிலும், இரண்டு கிளர்ச்சிகளின் போதும் சுமார் 1 1/2 இலட்சம் சிங்கள மக்களைப் பலிகொடுத்துவிட்டு இன்று அதற்குக் காரணமான ஆளும் வர்க்கக் கட்சிகளோடு பச்சையிலும் நீலத்திலும் நிற்கின்ற கேவலத்தை மக்கள் உணராமல் இல்லை. அதனாலேயே இவர்களது சிவப்பு வெளிவேஷத்தால் கவரப்பட்டு எஞ்சியிருந்து வந்த சிங்கள முற்போக்கு இடதுசாரி இளைஞர்கள் மிக வேகமாக ஜே.வி.பி.யை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் என்பது இடம்பெற்றுவரும் ஒன்றாகும். சில வருடங்கள் முன்பு வரை தாமே மூன்றாவது சக்தி என்றும் மாற்று அரசியல் தலைமை என்றும் மார்தட்டி வந்த ஜே.வி.பி. தலைமை இன்று இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கட்டித் தழுவித் தம்மைத் தாமே கரைத்து வரும் காட்சி தற்செயலானதொன்றல்ல. * இதே அவல நிலையைத்தான் தமிழ்த் தேசியவாதத் தரப்பிலும் காணமுடிகிறது. தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த அரசியல் குத்தகையாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் தாமே இருக்கவேண்டும் என்பதில் ஆதிக்க அரசியல் நடத்திவந்த தலைமைகளின் எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள் இருந்து வருகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் பழம்பெருமை பற்றியும் வீரப் பிரதாபங்கள் பற்றியும் வெறும் உணர்ச்சி கிளப்பி அவற்றினூடாகப் பாராளுமன்ற சுகம் கண்டவர்கள் தமிழ்த் தலைமைகள். இத்தனைக்கும் பின்பாவது எந்தவொரு தமிழ்த் தேசியவாதக் கட்சிக்கும் நாட்டினதும் தமிழ்த் தேசிய இனத்தினதும் வடக்கு, கிழக்கினதும் யதார்த்த நிலைமைகளைப் படித்தறிந்து மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துணர்ந்து தூரநோக்குடைய அரசியல் முடிவுகளை எடுத்து நிற்க முடியவில்லை. * நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களாகிய நாம் அழிந்து கெட்டுநொந்து முட்கம்பி வேலிகளுக்குள் இன்னும் இருந்து வரும் சூழலில் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும் திரும்பியவர்கள் மாட்டுக்கொட்டிலிலும் கேவலமான இருப்பிடங்களில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை இந்நிலைக்கு உள்ளாக்கிய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு எவ்வாறு எந்தக் கையால் எந்த முகத்தோடு சென்று வாக்களிக்கமுடியும் என்ற நியாயமான கேள்வியைத் தமிழ் மக்கள் எழுப்பியிருந்தனர். அந்தக் கேள்விக்கான விடையைத் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தகுந்த விடையாகவும் அளித்துள்ளனர்.இது யுத்தத்திற்குப் பின்பாக நடைபெற்ற இரண்டாவது தடவையான தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். * தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களது புண்பட்ட மனங்களையும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்குப் புரிந்து கொள்ளும் திறமையோ மனநிலையோ இருக்கவில்லை.எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதைத் தமிழ் மக்கள் இத் தேர்தலில் மீண்டும் ஒருமுறை அடித்துக் கூறியுள்ளனர்.1820 வீத வாக்குகள் மட்டுமே இடப்பட்டிருக்கிறது.நாங்கள் சொன்னால் நீங்கள் வாக்களிக்க வேண்டியதுதான்.அடுத்த பேச்சுக்கு இடமிருக்கக் கூடாது என்றவாறான தமிழர் ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனின் அகங்காரத் தொனி மிக்க அரசியல் முடிவும் எடுத்துக்காட்டியது.அந்த முடிவுக்கு முகத்தில் கரி பூசியது போன்றே தமிழ் மக்கள் தமது நிராகரித்த முடிவை வெளிப்படுத்திக் கொண்டனர். மேற்படி தேர்தலில் தமிழ் மக்கள் தவறாது வாக்களித்து தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்டவேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் வற்புறுத்தல்கள் ஆணைகள் அழுத்தங்கள் விடப்பட்டு வந்தன.வாக்களிப்பதற்குரிய ஜனநாயக சுதந்திரம் போன்றதே வாக்களிக்காமல் இருப்பதற்கும் உரியதாகும் என்பதை இந்த வற்புறுத்தலாளர்கள் அறியாமல் விட்டது தற்செயலானதொன்றல்ல. தமிழ் மக்கள், மத்தியில் இருந்து மெத்தப்படித்தவர்கள் மேட்டுகுடிப் பெரியவர்கள்,பேராசிரியர்கள்,மதத்தலைவர்கள்,ஊடக நிறுவனச் சொந்தக்காரர்கள் எனப் பற்பலர் அறிக்கை மேல் அறிக்கை விட்டு பகிஷ்கரிப்பு வேண்டாம் என்றனர்.பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டும் அறிக்கை விடுத்தனர்.அரசியலில் வனாந்தரத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியே வரவேண்டும் என அமெரிக்க ஊடகத்தின் ஊடாகவும் உருகி வேண்டினர்.இந்த அரசியல் வனாந்திரத்திற்குத் தமிழ் மக்கள் இட்டுச் சென்றவர்கள் யார் என்பதை மெத்தப் படித்த இக் கனவான்கள் அறியாது விட்டாலும் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதியென்ன என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ் மக்கள் தகுந்த பதில் அளித்திருக்கிறார்கள். இதேவேளை,தமிழ் மக்கள் தூரநோக்குடைய அரசியல் மார்க்கம் ஒன்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.பகிஷ்கரிப்பு நிராகரிப்பு என்பது யதார்த்தத்தையும் சூழலையும அரசியல் தந்திரோபாயத்தையும் கொண்டு அவ்வப்போது தீர்மானிக்கவேண்டிய அரசியல் முடிவே அன்றி அதுவே நிரந்தரமான ஒரு வழிமுறையாகிவிடவும் முடியாது.எனவே, இதுவரையில் ஆதரவு கொடுத்து வந்த தமிழ்த் தேசிய வாதத் தலைமைகள் தமிழ் மக்களுக்குச் சரியான மார்க்கம் காட்டத் தவறியமையால் புதிய மார்க்கத்தில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றித் தமிழ் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க முன்வரல் வேண்டும். கடந்த காலத்தில் பாராளுமன்ற அரசியலிலும் ஆயுதப் போராட்டக்களத்திலும் பெற்ற கசப்பான அனுபவங்கள் உரிய பட்டறிவாகக் கொள்ளப்படவேண்டும் என்பது தமிழர் அரசியலில் ஒரு முன் நிபந்தனையாகிறது. * நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அடுத்த ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகிறார். அத்துடன், மேலும் இரண்டு ஆண்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அது உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டு வந்த தேசிய இனங்களும் கடுமையான சவால்களை எதிர்நோக்கவே செய்வர்.ஏனெனில் எப்பொழுதும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழான இரண்டாம் தவணையிலான ஆட்சி அதிகாரமானது மிகக் கடுமையானதாகவே இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும்.எனவே,ஆளும் வர்க்க சக்திகளும் அவர்களது கட்சிகளும் தமக்குரிய அரசியல் வியூகங்களையே வகுத்து பாராளுமன்றப் பதவிகளுக்காகச் செயற்படுவார்கள். ஆனால், நாட்டின் உழைக்கும் மக்களும் தமிழ்,முஸ்லிம்,மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் தமது கோரிக்கைகளை உறுதியான சரியான அரசியல் மார்க்கத்தில் முன்னெடுக்கவேண்டியது அவசியத் தேவையாகிள்ளது.இதில் பேரினவாத அரசியல் ஒரு புறமாகவும் தமிழ்க் குறுந்தேசியவாத அரசியல் மறுபுறமாகவும் நின்று மக்களைப் பிளவுபடுத்தி வெறும் பாராளுமன்றப் பதவிகள் பெறும் குறுகிய பழைய நிலை புதுப்பிக்கப்படுவதை மக்கள் நிராகரிக்கவேண்டும். அதற்கு உள்ள ஒரே வழி மாற்று அரசியல் மார்க்கத்தை உருவாக்கி நம்பிக்கை தரும் பாதையில் பயணிப்பதேயாகும்.செக்கு மாட்டுப் பாதையிலான அரசியலை கழற்றிவிட்டு தூரநோக்கிலான ஐக்கியப்பட்ட புதிய அரசியல் பாதையில் காலடி எடுத்து வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக