வியாழன், 4 பிப்ரவரி, 2010

இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ

இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன். வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில், “இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம். இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம். இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும். தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை. அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்” என்றார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக