வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

தேர்தல் ஆணையாளரின் மனைவி, மகள் ஆகியோரை இராணுவத்தினர் கடத்திச் சென்று தடுத்துவைத்திருந்தனர்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, தேர்தல் ஆணையாளரும் தேர்தல் தினத்திற்கு அடுத்தநாள் இந்த விடுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட அவர் 27ம் திகதி பிற்பகல் 1.30 அளவில் தேர்தல் திணைக்களத்தில் கொண்டுசென்றவிடப்பட்டதாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இவற்றை கோதாபய ராஜபக்ஸ பசில் ராஜபக்ஸ ஆகியோரே திட்டமிட்டதாகவும் இவர்களின் திட்டத்தின்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை 3 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் வெற்றியடையச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் பசில் ராஜபக்ஸவின் கணக்கீட்டுச் சிக்கல் காரணமாக அது 18 லட்சத்தையும் தாண்டியதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் போதும் மாவட்ட முடிவுகள் வெளியிடும் சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணையாளர் தனது செயலகத்தில் வேலைப்பளுவில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும், இம்முறை தேர்தல் ஆணையாளரை எவரும் காணவில்லை. இம்முறை மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்ட போது அவை தொடர்பாக இறுதி முடிவுகளை பிரதித் தேர்தல் ஆணையாளர்களே மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக