வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா

கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள். ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள். விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் விலைபோகாதவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து எம்மைச் சொல்ல வைத்து விட்டு வித்தாகிப் போன வீர மறவர்களுக்கான நாள். தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை, விருப்பு வெறுப்புகளை, சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள். மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா? இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தாங்களே ஒறுத்து, கட்டுக் கோப்பாக வாழ்ந்து மண்ணுக்காய் உயிர் தந்த மாணிக்கங்கள் அல்லவா இவர்கள்? என்குடும்பம், என் பிள்ளை, என் சொத்து என்ற குறுகிய வட்டங்களைக் கடந்து எம் நாடு, எம் மொழி, எம் மக்கள் என்று சிந்தித்த வித்தகர்களல்லவா இவர்கள் வாழ்ந்து முடித்து வயோதிபத்தை அணைத்து வெந்து நோய்கண்டு பாயில் கிடப்பவர்கள் கூடக் கண்டு அஞ்சும்மரணத்தை, தள்ளிப் போட நினைக்கும் மரணத்தை, ஏற்க விரும்பாத மரணத்தை, சிரித்த முகத்துடனே ஏற்கத் துணிந்த சீரியர்கள் அல்லவா இவர்கள்? ஒவ்வொரு போராளிக்குள்ளும் எத்தனை கதைகள்? அகிம்சை போர்வையுடுத்த அரக்கர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காய் அன்னம் தண்ணீர் துறந்து என்னுயிர் போக நேரிட்டாலும் வானத்திலிருந்து மலரும் தமிழீழத்தைப் பார்ப்பேன் என்று சொன்ன திலீபன்கள் எத்தனை பேர்? தமிழன் விலை போகக் கூடாது என்பதற்காய் தம் மணமாலை காய்வதற்கு முன்பே பிணமாலையைச் சூடிக் கொண்ட குமரப்பாக்கள், புலேந்திரன்கள் எத்தனை பேர்? சிறிலங்கா அரசாங்கம் சிங்களத் தலைநகரில் வைத்துக் உங்களைக் கொல்ல முயற்சிக்காதா என்ற நிருபர்களின் கேள்விக்கு சிங்கள அரசை நம்ப முடியாது தான் ஆனால் அப்படி எனதுயிர் போனாலும் அது தமிழ் மக்களுக்காகத் தானே என்று சொன்ன தமிழ்ச் செல்வன்கள் எத்தனை பேர்? புலத்திலே வாழ்ந்த வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு தாயகப் போரிலே தம்மை இணைத்துக் கொண்ட தயாள சீலர்கள் எத்தனை பேர்? அநுராதபுரத்திலே தாம் மூன்று முறை, நான்கு முறை காயப்பட்ட போதும் சிங்களத்தின் வான் கலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தலைமைக்கு அறிவித்துக் கொண்டே வீரமரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேர்? வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர எதிரிக்கு விலைபோகமாட்டேன் என்று சொல்லி வீரமரணத்தைத் தழுவிய வரலாற்று நாயகர்கள் எத்தனை பேர் இத்துணை அரிய தியாகத்தையும் தீரத்தையும் சர்வதேசமுமே ஒன்றாய் நின்று அழித்து விட்டுக் எக்காளமிட்டுச் சிரிக்கின்ற ஒரு காலப்பகுதியிலே நாம் இன்று இருக்கின்றோம். சரியான வழிகாட்டியின்றி நட்ட நடுக்கடலிலே துடுப்பின்றித் தத்தளிக்கின்ற சின்னஞ்சிறு படகினைப் போலச் சிதறிப் போன எம்மினமும் தவிக்கின்றது, தத்தளிக்கின்றது. இந்தத் தடுமாற்றத்தை, குழப்பத்தை தமக்குச் சாதகமாக்கி தமிழனின் இலட்சியக் கனவை முழுமையாய் அழித்து விட எதிரி கங்கணம் கட்டி நிற்கின்றான். இந்த எதிரியின் சூழ்ச்சி நெருப்பை கோடாரிக் காம்புகளான எம்மவர்கள் சிலரும் நெய்யூற்றி வளர்த்துக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. ‘அவனே தலைவன்’, ‘அவனது வாக்கே வேதவாக்கு’ என்று அடிக்கொரு தடவை சொன்ன அடிவருடிகள் சிலர் அராஜகச் சிங்களனைக் கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் கொடூரமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எமக்காய் வாழ்ந்து, எமக்காய் உயிர் தந்த, எம்தமிழ்ப் புதல்வர்களின் கனவை, ஆசையை, எதிர்பார்ப்பை அழிய விடப் போகிறோமா என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழுணர்வுள்ள தமிழனும் தனக்குத் தானே கேட்க வேண்டிய நேரம் இது. இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அந்தத் தியாக சீலர்களின் இலட்சியைக் கனவை நனவாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? மக்களுக்காய் வாழ்ந்து மாவீரரர்கள் ஆனவர்கள் போக மண்காக்கப் புறப்பட்ட மறவர்களில் பலர் இன்று சிங்களத்தின் கொடூர சித்திரவதைக் கூடங்களிலே சொல்லொணாச் சித்திரவதைகளை அநுபவித்துக் கொண்டிருக்கிறார்களே? யுத்தக் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச நெறிமுறைகள் முரணாக கொடூரமான சித்திரவதைக் கூடங்களிலே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களே? இப்படிச் சர்வதேச நெறிமுறைகளை மீறி நடக்கின்ற சிங்கள அரசிற்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சர்வதேச சமூகத்தையும் ஐ.நா மன்றத்தையும் நோக்கிக் கேள்வி கேட்காது மௌனித்து விட்டோமே? இதுவா எம் தேச பக்தி? எங்கள் பிள்ளைகள் என்று சொல்லிப் போராளிகளை ஆதரித்து அவர்களைத் தம் பிள்ளைகளாகப் பார்த்த வன்னித் தமிழ் மக்கள் ஏதிலிகளாய் மழையிலும் வெயிலிலும் அநுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்தும் கேட்டும் அறியும் நாம் அவர்களை இந்த நிர்க்கதிக்குள்ளாக்கிய சர்வதேசத்திடம் நீதி கேட்டுக் குரல் கொடுக்கக் கூடத் திராணியற்வர்களாய்ப் போனோமே? இது எந்த வகையில் நியாயம்? எங்கள் மக்கள் படும் துயரை, எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை இந்நாட்டில் வாழும் எம் அயலவர்கள், சக வேலையாட்கள், பாடசாலை நண்பர்கள் ஆகியோருடன் கூடப் பகிர்ந்து கொள்ளாமல் மௌனம் சாதிப்பது எதற்காக? எம் மக்களுக்காய் எதுவும் செய்யாமல் வாழாவிருப்போர் ஒருபுறமிருக்க பதவி ஆசை பணத்தாசை கொண்டு குட்டையைக் குழப்பும் கூட்டமொன்றும் உருவெடுத்துள்ளது. அவர்களிடமும் ஒரேயொரு கேள்வி. விடுதலை விடுதலை என்று கூவி அழைத்த நீங்கள் பதவி ஆசையும் பணத்தாசையும் உந்தித் தள்ள திக்கிற்கொருவராயப் பிரிந்து ஏட்டிக்குப் போட்டியாய் அறிக்கை அரசியல் செய்கிறீர்களே! இலட்சிய வேட்கையுடன் வீழ்ந்த எம் செல்வங்களிற்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானா? நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாய் நடக்கட்டும் என்று எண்ணி இந்த 27ம் திகதி ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஒவ்வொரு தமிழனும் எங்கள் மாவீரர்களுக்காய் விளக்கேற்றி விட்டு அந்த உத்தம புருசர்களின் கனவை நனவாக்க எம்மால் இயன்றதைச் செய்ய உறுதியெடுப்போம். தமிழீழக் கனவுடன் கண் தூங்கும் எம் சொந்தங்களுக்காய் இதையாவது செய்வோமா? அதையும் காலம் தாழ்த்தாது செய்வோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக