வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளில் மண் அணை

யாழ் குடாநாட்டின் வலிகாமல் வடக்குப் பகுதியிலிருந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாகத் திரிகின்றனர். இப்பகுதியானது இலங்கை ராணுவத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளுக்குள் மக்கள் சென்றுவரக்கூட அனுமதி இல்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக குடாநாடு வந்த ஜனாதிபதி மஹிந்த, அவர் சகோதரரான ஜனாதிபதி ஆலோசகர் பசில் ஆகியோர் மேற்படி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீண்டும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதி கொடுத்தனர். இதனையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்குக் கூறினார். ஆனால் தேர்தல் வெற்றி கண்டபின்னர் அங்குள்ள நிலமை மாறியுள்ளது. மேலும் மேலும் அதிகபட்ச பாதுகாப்பு வலயத்தை ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளை உள்ளடக்கியதாக பெரியதொரு மண் அணையைக் கட்டத்தொடங்கியுள்ளனர் ராணுவத்தினர். இந்தப் பகுதிக்குள் 20 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்குப் பகுதியில் மொத்தமாக 27 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதில் 20 இந்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் செல்கிறது. மிகுதி 7 கிராமத்து மக்களும் தமது பகுதிகளுக்குச் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இரவில் தமது வீடுகளில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக