வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இறுதியில் நானும் விமானம் ஏறினேன் ..

உவிந்து குருகுலசூரிய கொழும்பிலிருந்து பணியாற்றிய ஒரு சிங்கள ஊடகவியலாளர். சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான அவர் ஊடகத்துறையை தனித்து ஒரு ஊதியம் பெறும் தொழில் துறையாகக் கருதாமல், ஊடக அறம், கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களில் அதிக அக்கறை கொண்டு செயற்படுபவர். கடந்த வருடம் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துச் செல்லவே, கொழும்பிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சிறிலங்காவில் ஊடகத்துறையினதும், ஊடகவியலாளர்களது தற்போதைய நிலைபற்றி அவர் மனந்திறந்து எழுதியவற்றை சுவீடனைச் சேர்ந்த FOJO என்ற ஊடக அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம். நான் கொழும்பில் விமானம் ஏறியதன் பின்னர், என்னைப்போன்று சிறிலங்காவிலிருந்து தப்பிவர முனைந்த எனது ஊடகத்துறை நண்பன் ஒருவரை அரசாங்கம் கைது செய்தது என்பதனை நான் லண்டனுக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் அறிந்தேன். 2000ம் ஆண்டில் எனது ஊடகத்துறை நண்பன் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நான் லண்டனுக்கு வந்தேன். அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் நான் அவருடன் இணைந்து ஒரு விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு பிரித்தானிய அரசு நிரந்தர வதிவிடவுரிமையை தந்திருந்தது. இருந்தாலும் ஒன்றரை வருடங்கள் கழித்து நிலமை சீரானதால் நான் நாடு திருப்பினேன். இப்போது ஒன்பது வருடங்கள் கழித்து மீள வர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஒன்பது வருடம் கழித்து, மீள லண்டனுக்கு வந்துள்ளேன். எனக்கு என்ன நடந்தது என்று சிந்திக்கிறேன், கடந்த வருடம் ஜனவரியில் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 12 நாட்களுக்கு முன்னர் எனது நல்ல நண்பரான லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். நான் அவர் இறந்தபோது அவருடன் மருத்துவமனையில் இருந்தேன். இக்கொலையால் நான் உறைந்து போன நிலையில் இருந்தேன். என்னால் சிந்திக்க முடியவில்லை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. உணர்வுகள் மரத்துப்போன நிலையில் இருந்தேன். எப்போது நான் சாப்பிடவேண்டும் எப்போது உறங்க வேண்டும் என்பதனை மற்றவர்களே எனக்குச் சொல்லிதர வேண்டியிருந்து. நான் கவலைப்படவில்லை ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. பத்து மாதங்கள் இப்படியே கழிந்தன. லசந்த விக்கிரமதுங்க போன்ற துணிச்சல்கார ஊடகவியலாளர்கள் வேறெவரையும் நான் காணவில்லை. நான் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் செயலாளராக இருந்தபோது, நாங்கள் இருவரும் சிறிலங்காவில் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினோம். கடந்த நான்கு வருடங்களில், பத்தொன்பது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். டசின் கணக்கில் ஊடகவியலாளர்கள், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்., துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். உளவியல் ரீதியாக ஊடகவியலாளர்களை பயமுறுத்தி வைப்பது தொடர்ந்த வண்ணமுள்ளது. எதை பற்றி எழுதியது என்பதல்ல அங்குள்ள பிரச்சனை, எதைப்பற்றி எழுதக்கூடாது என்பதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எதைப் பற்றியெல்லாம் எழுதக்கூடாது என எங்களுக்கு சொல்லப்பட்டது. உதாரணத்துக்கு, ஐனாதிபதியைப்பற்றி, அல்லது பாதுகாப்புச் செயலாளர் குறித்து என்ன விடயங்களை நாங்கள் எழுதக்கூடாது என எங்களுக்குச் சொல்லப்பட்டது. நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது, எனது இன்னொரு நண்பன் கடத்தப்பட்டுள்ளான், ஒரு பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார், பிறிதொரு பத்திரிகை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். நான் இப்போது திரும்பவும் இரவுகளை நித்திரையின்றிக் கழிக்கிறேன். நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என சிந்தித்துப் பாரக்கிறேன். நாங்கள் ஊடகங்களின் உரிமையாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக போராடுகிறோமா? ஏனெனில் நாங்கள் ஒரு புதினப்பத்திரிகையை வாசிக்கும் போது எவற்றை வாசிக்கிறோம்? எல்லாமே பக்கச்சார்பான செய்திகள்! பத்திரிகை உரிமையாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்காமையால், தாங்கள் எழுதிச் சம்பாதிப்பதை விடவும், எழுதாமல் விடுவதனால் அதிகம் சம்பாதிப்பதாக. அங்குள்ள ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடகவியலாளர்கள் மௌனமாக இருப்பதற்காக அரச அதிகாரிகள் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். சிறிலங்காவில், ஊடகத்துறையிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கான தொழிற்சங்கங்களும் ஊழல் நிறைந்த அமைப்புகளாகவே இருக்கின்றன. செய்தியாளர்களுக்கு சுதந்திரமோ, செய்திவெளியிடுவதில் ஜனநாயகம் கடைப்பிடிப்தோ அங்கு கிடையாது. ஊடக சுதந்திரத்திற்காக போராடும்போது அது சமூக பொறுப்புணர்வுடனானதாக அமையவேண்டும். இல்லாவிடில் சீரான ஊடகத்துறையை எவ்வாறு ஏற்படுத்த முடியும்? ஒரு முழுமையான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பல விடயங்களில் நாம் மாறவேண்டும். அந்த மாற்றம் ஊடகவியலாளர்களான எங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக