வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

புலம்பெயர் நாடுகளில் எமது தோல்வியை தடுப்போம்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லாரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! இன்றைய இறுக்கமான கால கட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் அதிகாரப்போட்டி, அதை வெளிப்படுத்தும் விதம், என்பன எம் தமிழ் ஊடகங்கள் ஊடகாவே திரிக்கப்பட்டு வியாபார ரீதியில் அவை விற்பனைத்திரியாக்கப்பட்டுள்ளது என்பதை சகல தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் பொறுப்பும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும். சின்ன குடில் எனினும் நெறி தவறாது வாழ வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பு. அது புலம்பெயர்ந்து வந்து விட்டாலும் இன்னும் அவர்களின் குருதியில் இணைந்திருக்கும் என்று நம்புகின்றேன். வாழ்வாதாரத்தை மட்டும் தேடும் நிலையில் இன்று தாயக மக்கள் அடக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அது பற்றி அக்கறை இன்றி தமிழ் ஊடகங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை! கே.பியை காட்டிக்கொடுத்தது யார்? அவர் தானாகவே இணைந்தாரா? என்று எத்தனையோ கேள்விகளை கேட்டு தமிழ் பத்திரிகைகள் தமிழ் மக்களை குழப்பி தமது வியாபாரத்தை பெருக்க முயற்ச்சிக்கின்றன. ஒரு குறிப்பட்ட ஒரு காலப்பகுதியில் வந்த செய்திகள் குறிப்பிட்டு சொல்ல கூடிய தமிழ்த் தேசிய வாதிகள் மீதான சேறுபூசல்களாகவும், அதே நேரம் சிலரின் தகவல்கள் ஒரு சிலரால் திரிக்கப்பட்டு தமது காழ்ப்புணர்வு நிகழ்ச்சி நிரல் அரங்ககேற்றப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை! குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் ஜேர்மன், பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளில் வேகமான பரப்பட்ட செய்திகளும், சில மிரட்டல்களும் இவற்றை சொல்லி நின்றன என்றால். கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளில் எதைப்பற்றியும் அக்கறையில்லாத தன்மையில் மக்களும் அவர்களை வழிநடத்தும் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. வன்னியில் மே மாதம் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சதாரண மக்களாகிய எம்மை பாதித்துள்ளதே தவிர வேறு எந்த அமைப்பு சார் நபர்களையும் பாதிப்படைய வைக்கவில்லை என்பதை உணரக்கூடியதாக உள்ளது. ஏன் எனில் அவர்களது செய்ற்ப்பாடுகளில் முகாமில் இருக்கும் மக்கள் பற்றியதோ, தமிழீழ விடுதலை பற்றியதாகவோ இல்லை என்பதே! காலத்தின் பெயரிலும், அந்த காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களுமாகவே இவர்கள் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் ஆக்க பூர்வமற்ற செயற்ப்பாடுகளை செய்த படி காலத்தையும் அடுத்தவன் கருணையையும் எதிர்பார்ப்பது எவ்வளவு அறிவிலித்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. வெகுசன ஊடகங்கள் என்ற ரீதியில் பல பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும், தம்மை அரசியல் ரீதியில் நிலைநிறுத்த காலம் பார்த்துக்கொண்டிருந்தவை போல செயற்ப்படுவது தமிழினத்தின் வரலாற்றுக்கே இழுக்காகும். நடந்து முடிந்த கொடிய போரில் தம்மால் முடிந்தவற்றை செய்த போராளிகளுக்கும் அந்த மண்ணுக்காய் உயிர்கொடுத்த மாவீரர்களுக்கும் இந்த ஊடகங்கள் செய்யும் இரண்டகமாகும். இந்த இரண்டகத்தை செய்யும் தமிழர்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா,? சிங்களவர்களுடன் சகவாசம் வைக்கலாம் வியாபாரம் செய்யலாம் என்று இன்றும் மேலதிக ஒப்பந்தங்களில் கையேழுத்திடும் தமிழர்கள் எப்படி அழைக்கப்படவேண்டியவர்கள்? தேசியத்தின் பால் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தார்களோ அதை நோக்கி மக்களை நகர்த்த முடியாமல் தாமும் நகர முடியாமல் திண்டாடும் இவர்கள் எந்த அடிப்படையில் தேசிய வாதிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? சண்டையில் தோல்விக்கு பின் ஆய்வுகளுக்கோ, பகிரங்க மேடைகளுக்கோ வரப்பயந்து ஒழித்து வாழும் நபர்கள் எல்லாம் எந்த அடிப்படையில் இதுநாள் வரையில் செயற்ப்பட்டனர்? வாய்கிழியப் பேசிய தமிழீழம் என்னவாயிற்று? வீதி வீதியாய் மக்களை இறக்கி போராட்டம் நடாத்திய மக்கள் சமூகம் எங்கே? மாணவர் அமைப்புக்கள் எங்கே? குழம்பிக்கிடக்கும் எங்கள் மக்கள் முன் நாம் செய்ய வேண்டிய பாரிய பணி ஒன்று காத்திருக்கின்றது. அது மக்களிடம் போய் போராட்டம் நடாத்த பணம் கேட்பதல்ல. பணம் கேட்க சென்றவர்கள் இன்று பரப்புரைக்கு செல்ல வேண்டிய காலம் இது. வீடு வீடாக சென்று விடுதலைக்கு உரம் சேர்ப்பதற்க்காய் எம்மால் பணம் சேர்க்க முடியும் எனில், ஏன் ஒவ்வோர் தமிழர் வீடுகளுக்கும் சென்று, எமது இன்றைய நிலையை பற்றிய விளக்கத்தை கொடுக்க கூடாது? இப்போது வெளிநாட்டவர்களைவிட அதிக குழப்பத்தில் இருப்பது நமது தமிழ் மக்களே! அவர்களது குழப்பங்களும் நாங்களே காரணமாகிவிட்டோம். ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்க மக்களுக்குள் இன்னோர் கதை புனையப்பட்டுக்கொண்டிருக்க சிங்கள அரசு இன்னோர் கதையை செல்ல எந்த பக்கம் செல்வதை மக்கள் நம்புவது? தமிழ் மக்களுக்குள் எது நம்பகமான ஊடகம்! இவற்றை தெளிவு படுத்த வேண்டிய கடமை யாரினது? வெறுமனே போராட்டத்துக்கு பணம் சேர்க்க மட்டும் வீடு வீடாக சென்ற நாம் இன்று எம் செயற்ப்பாடுகளை மாற்றுவோம். எம் மக்களுக்கு நிலமையை உண்மையை தெளிவு படுத்துவோம். அதற்க்கான காலமே இது. மாற்றங்களை நோக்கிய நகர்வில் நாமும் பங்கேற்போம் எமது மக்களையும் பங்கேற்க வைப்போம். தமிழீழ புற நிலை அரசு பற்றி அறிவு 10 சத வீத மக்களுக்கு கூட இல்லை. அப்படியிருக்கையில் அப்படியான செயற்ப்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கப்ப போவது.. விளக்கப் போவது யார்? முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் அந்தந்த நாட்டுப்பிரதிநிதிகளே! நாம் வானொலிக்குள்ளும் பத்திரிகைக்குள்ளும் சண்டையிடுதல் இனியும் கேவலம்! இனியும் மக்களுக்குள் பிரிவினையை விதைத்து செயற்ப்படுதல் முட்டாள்த்தனம். இன்னும் இன்னும் வேகமாக நாம் செயற்;ப்படவேண்டும். தன்னை நாட்டைக்காக்க எதையும் அர்பணிக்க தயார் என்று சரத் பொன்சேகா செல்கின்றான. நம் நாட்டை பிடித்த படியே அவன் அறை கூவல் விடுகின்றான். ஆனால் கேவலம் எம்மால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு பரப்புரை நடவடிக்கையை கூட எமது மக்களுக்குள் செய்ய முடியாத படி முடங்கி கிடக்கின்றோம். புலம்பெயர் நாடுகளில் துரித கதியில் சிங்கள ஆட்சியாளர்களின் பரப்புரையாளர்கள் பலரை தம்வசப்படுத்தி விட்டனர். ஆதற்க்கு காரணம் முகாம்களில் உள்ள எம் மக்களுக்கு நாம் எம்மால் முடிந்த உதவியை கூட செய்யாமல் அசட்டையாக உள்ளமையே! துன் உறவு பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்க்கு நிவாரணம் பெறுவதையே எந்த ஒரு உறவும் விரும்புவான். அதற்க்கான எந்த நடவடிக்கையையும் செய்யாமல் நாம் இருப்பதே எமக்கு புலம்பெயர் நாடுகளில் கிடைக்க போகும் தோல்விக்கு முதற்காரணியாக அமையும். நாட்டில் ஆயுதப்போரின் தோல்வியை தடுக்க முடியாத கையாலாகத்தனத்துடன் சேர்ந்து கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள், நிச்சயம் இந்த சேர்வு நிலை தொடரும் பட்சத்தில் புலம்பெயர் கட்டமைப்புக்களிலும் தோல்வியை தழுவுவது தவிர்க முடியாததாகும். எனவே உறவுகளே விழித்தெழுங்கள்.. நீங்கள் தெளிந்திருங்கள்..!

2 கருத்துகள்: