வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இந்தியாவுடன் அணு தொழில்நுட்ப வர்த்தகம்: யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா பச்சைக் கொடி

இந்தியா தனது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்திக் கழகமான ஐ.ஏ.இ.ஏ. (International atomic energy agency-IAEA) சோதனையிட அனுமதித்துள்ளது.​ இதன் மூலம் ஐ.ஏ.இ.ஏவுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று அறிவித்தார். இதுதொடர்பான அறிக்கையை தனது வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா அனுப்பியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட ஒபாமா அனுமதியளித்துள்ளார். இந்தியா-​அமெரிக்கா இடையே கடந்த 2008ம் ஆண்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.​ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் இடையே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.​ ஆனால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பதால்,​​ தனது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றம் வற்புறுத்தியது. இதனால் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் அமலாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.​ இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் ராணுவம் தவிர்த்த பிற அணுசக்தி நிலையங்களில் ஐ.ஏ.இ.ஏ. எந்த நேரமும் சோதனை நடத்தலாம். இந்த விதியை இந்தியா ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணு உலைகளில் ஐஏஇஏ ஆய்வுகளை ஆரம்பித்தது. நேற்று கூடங்குளம் அணு ஆராய்ச்சி மையத்துக்கு சர்வதேச விஞ்ஞானிகள் குழு வந்துள்ளதை 'தட்ஸ்தமிழ்' தெரிவித்தது. இதுவும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான். இந் நிலையில் தான் ஐ.ஏ.இ.ஏவுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட ஒபாமா பச்சைக் கொடி காட்டிவிட்டார். எனினும் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஓரிரு அம்சங்களில் மட்டும் இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.​ இவையும் தீர்க்கப்பட்டால் தான் அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக