வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010

வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த உண்மையை அனைவரும் புரிய பிளேயரின் வாக்குமூலம் உதவியாக உள்ளது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேர்த்த செல்வங்களை சூறையாடுவதே சிறீலங்காவின் சுதந்திரதின பெருமையாக உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழீழம் போன்ற வாதங்களுக்கு அப்பால் தமிழர் செல்வத்தை கொள்ளையிடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை எழுதுவதே வன்னிப்போர் தரும் முக்கிய பாடமாக உள்ளது. இதை விளங்க ரொனி பிளேயரின் வாதங்களை சகல விடயங்களுடனும் ஒப்பிட்டு நோக்குகிறோம்.. ரொனி பிளேயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். சுமார் ஆறு மணி நேரமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார். இது ஒரு திட்டமிட்ட, நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேறிய நாடகம் என்றாலும் இதைக் கவனமாகப் பார்க்க வேண்டியது பிரிட்டனால் சுதந்திரமிழந்த தமிழினத்திற்கு அவசியம். சதாம் உசேனிடம் அணு ஆயுதம் இல்லை என்று தெரிந்திருந்தாலும் போருக்கு போவதை நிறுத்தியிருக்க மாட்டேன் என்று முன்னர் கூறிய பிளேயர் இப்போது அதை மாற்றியிருக்கிறார். இந்த மாற்றத்திற்குள்தான் எல்லாமே புதைந்திருக்கிறது. உலகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளில் எல்லாம் பிளேயரின் கருத்துக்கள் நேரடியாக ஒளிபரப்பாகியிருந்தன.. அந்த ஆறு மணி நேர வாக்குமூலத்தை முதலில் இரண்டே வரிகளில் சுருக்கிப் பார்க்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவிற்குப் பின்னர் வளமான நாடுகளை சூறையாடாவிட்டால் அமெரிக்காவும் பிரிட்டனும் தமது முதன்மையை 21ம் நூற்றாண்டில் தக்கவைக்க இயலாது ! இதுதான் அவருடைய கருத்துக்களில் இருந்து நமக்குக் கிடைக்கும் இரண்டேயிரண்டு வரிகளிலான கதைச் சுருக்கம். இந்தக் கதைச் சுருக்கத்தில் இருந்து பல உண்மைகளை பார்த்துவிட்டுத்தான் நாம் வன்னிக்குள் போக வேண்டும். ஏனெனில் இரண்டு கதைகளும் அடிப்படையில் ஒன்றுதான். ஈராக் நாட்டின் பழைய பெயர் பாபிலோனியா. கடந்த 10.000 வருட வரலாற்றில் பாபிலோனியாவை சூறையாடாத வல்லரசுகளே கிடையாது. மகா அலெக்சாண்டர் முதல் நெப்போலியன் தொடங்கி உலகப் புகழ் பெற்ற பேரரசர்கள் எல்லோருமே பாபிலோனியா மீது படையெடுத்தவர்களே. அதன் கடைசி அத்தியாயமே 2003ம் ஆண்டுப் போர். ஈராக்கைப் போல செல்வம் கொழிக்கும் பூமியாக இருந்து இதே மன்னர்களின் தாக்குதல்களை சந்தித்தது எகிப்திய பேரரசு. பேரழகி கிளியோபாற்றாவையும் அவளுடைய செல்வங்களையும் சூறையாட அங்கு போகாத பேரரசுகளே கிடையாது. செல்வம் திரட்சியடைந்தால் பிரிட்டன் போர் தொடுக்கும், ஆகவே குடியேற்ற நாடுகளை அமைத்து செல்வத்தை பெருக்க வேண்டாம் என்று அக்கால ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியத்திடம் பிரபல இராஜதந்திரி வொன் பிஸ்மார்க் பல்லாயிரம் தடவைகள் கேட்டான். அவனைப் பதவி விலத்திவிட்டு வில்லியம் செல்வத்தை குவித்த காரணத்தால் உலகப்போரில் ஜேர்மனி மாட்டிக் கொண்டது. முப்பதிற்கும் மேற்பட்ட சிறிய இராட்சியங்களாக இருந்த ஜேர்மனியை ஒரு நாடாக்கிய பிஸ்மார்க் மிகவும் கவனமாக இருந்தது ஒரேயொரு விடயத்தில்தான், தேசம் உருவாக முன் செல்வத்தை குவித்தால் அந்தத் தேசம் சுடுகாடாகும் என்பதை தெளிவாக அறிந்த உலகின் ஒரேயொரு இராஜதந்திரி அவன்தான். இவைகளை மனதில் வைத்து மேலே செல்வோம்.. 2001 செப் 11 தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 1. சதாமிடம் இருந்த எண்ணெய் வளம், தங்க வளம், டாலர்களின் குவியல் யாவும் அந்தப் பட்டியலுக்கு உயிர் கொடுத்தன. 2. உலகக் கஞ்சா ஏற்றுமதியில் 99 வீதமான வருமானம் உழைப்பவர்கள் ஆப்கானின் தலபான்கள் அது மேலும் அசைவைக் கொடுத்தது. இப்படி பட்டியலில் இடம் பெற்ற அனைத்து பயங்கரவாத அமைப்புக்களுமே செல்வங்களை குவித்து வைத்திருந்த அமைப்புக்களே. இவைகளுக்குள் புலிகளை எதற்காக சேர்த்தார்கள், அவர்கள் உண்மையாகவே ஒரு விடுதலை அமைப்பு என்று நாம் வாதிட்டோம், ஆனால் உலக நாடுகள் அதை ஏற்க மறுத்து அவர்களையும் பட்டியலில் சேர்த்தார்கள். அதற்கு என்ன காரணம் ? தென்னாசியாவின் போராட்டக் குழுக்களிலேயே அதிக பணமுள்ள, வளமுள்ள அமைப்பு விடுதலைப் புலிகள்தான். அவர்கள் உருவாக்கிய பண சாம்ராஜ்ஜியமே அவர்களை இந்தப் பட்டியலுக்குள் அநியாயமாகக் கொண்டு வந்துள்ளது என்பதை விளங்க ரொனி பிளேயரின் வாக்கு மூலமே போதுமானதாகும். ஈராக் மீதான போர் மேலை நாடுகளுக்கு மிகவும் இலாபகரமான போர்.. அதுபோல புலிகளுக்கு எதிரான போருக்கு செலவிட்ட பணத்தோடு புலிகளிடம் இருந்த பணத்தையும், ஆயுதங்களையும் கணக்கிட்டால் சிறீலங்கா அரசிற்கும் அதற்கு ஆதரவளித்த நாடுகளுக்கும் வன்னிப் போர் மிகப்பெரிய ஆதாயமாகும். வன்னியில் ஒரு தேங்காய் உரிக்கும் அலவாங்கு விடாமல் அள்ளிச் சென்றுவிட்டார்கள். புலிகளின் வாகனங்களில் ஒரு வாகனத்தைக் கூட வன்னியில் காண முடியவில்லை. லாரி லாரியாக வன்னியின் பொருட்கள் சூறையாடப்பட்டுவிட்டன. இதைப்போல இலாபகரமான போர் எதுவுமே கிடையாது. அந்த உருசியில் இப்போது புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களும் தமக்கே உரியது என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. புலிகளிடம் எடுத்த நிதி இருக்கும்வரை சிறீலங்கா ஆட்சியாளருக்கு மேலும் பல ஆண்டுகள் நிதித் தட்டுப்பாடே கிடையாது..சிறீலங்காவின் மிக அதிர்ஷ்டமான ஜனாதிபதி தானே என்று மகிந்த இன்று கூறியிருப்பது தவறல்ல. கடந்த வாரம்; புலிகள் சேர்த்த 4000 கிலோ தங்கம் எங்கே என்று கேள்வி எழுந்தது.. அவர்கள் சேர்த்த பணம் எங்கே… வருடாவருடம் அவர்கள் சேகரித்த அவசர பாதுகாப்பு நிதிகள், வரிகள் எல்லாம் வன்னியில் திரண்டுவிட்டதாலேயே இந்தப் போர் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கும் பிளேயரின் ஈராக் போர் வியூகத்திற்கும் யாதொரு வேறுபாடும் கிடையாது. இது மாபெரும் அபாயம், இந்த அபாயத்தில் புலிகளை மாட்டாதீர்கள் என்று எவ்வளவோ கூறியும் யாரும் கேட்கவில்லை. அதனால்தான் இதற்கான பொறுப்பு புலம் பெயர் தமிழரையும் கணிசமான அளவு சார்கிறது.. வன்னிக்குள் சொத்துக்களை குவிக்காதீர்கள் என்று புலிகளுக்கு பிஸ்மார்க் போல அறிவுரை கூற சரியான மதியுரைஞர் இருக்கவில்லை, அப்படி மதியுரைஞர் சொன்னாலும் அதை அவர்கள் கேட்கமுடியாதவிற்கு நிதி குவிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நிதியைவிட வேறு எதுவுமே இல்லை என்ற இடத்திற்கு புலம் பெயர் நாடுகள் கூர்ப்படைந்தது பெரும் தவறு. 1983 யூலைக் கலவரத்தை இனவாதம் என்பதை விட தமிழரின் சொத்தை சுரண்டும் ஒரு கலவரம்தான் என்பதை உணர்ந்தால் பலும் பெயர் தமிழர் வன்னிக்குள் சொத்தை முடக்குவதன் ஆபத்தைப் புரிந்திருப்பர்.. பிளேயரின் வாதங்களைக் கேட்டால் இவைகள் உங்கள் எண்ணங்களில் எழுந்து வரும்.. அப்படியானால் சொத்தை வைத்திருப்பவர் என்ன செய்வது.. கேணல் கடாபியிடம் இதற்கு பதில் இருக்கிறது. அவர் இந்த ஆபத்தை உணர்ந்து தனது செல்வத்தில் பெரும்பகுதியை கொடுத்துவிட்டார். விமானம் தகர்ப்பிற்காக அவர் வழங்கிய நட்டஈடு மிகப்பெரிய தொகை.. ரொனிபிளேயர் அவரைச் சந்தித்து வந்த பின் ஆபத்துக்களில் இருந்து தப்பினார். இப்போது ஈரான் விளிம்பு நிலையில் நிற்கிறது.. சோமாலியக் கடற் கொள்ளையர் விஷயம் தெரியாமல் கொள்ளையிடுகிறார்கள், அவர்களுடைய குதம் நிரம்பி வழியும்போது எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் இழக்க நேரிடும், இதுதான் அவர்களுடைய தலையெழுத்து.. சுதந்திரம் பெற்றாலும், பெறாவிட்டாலும் செல்வம் அளவிற்கு அதிகமாகக் குவியும் இடங்கள் ஏதோ ஒரு பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டு சுடுகாடாக்கப்படும்.. சூறையாடப்படும்.. ஆறுமணி நேரம் பிளேயரின் பேச்சைக் கேட்க எம்மிடம் ஏது நேரம்.. ஏதோ ஆறு போன போக்கில் போகிறோம் என்று வாழ்வோர் இதை ஓர் எடுகோளாக வைத்து சிந்தித்தால் மேலும் பல உண்மைகளை புரிய முடியும். பிளேயரின் பேச்சு பிழையல்ல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக