வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பிரிவுகளை சந்தித்துள்ள சிறீலங்கா ஒற்றுமையை தேடுகின்றது

சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலைத் தொடர்ந்து அங்கு பிரிவினைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது தான் சிறீலங்கா தனது ஒற்றுமையை தேடுகின்றது என 'த அல்ஜசீரா' செய்தி நிறுவனம் தன் செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவின் நெருக்கடிகளை குறைப்பதற்குச் சிறுபான்மை தமிழ் மக்கள் உதவ வேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் தனது சுதந்திரதின உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரதினம் இதுவாகும். கண்டியில் உரையாற்றிய மகிந்தா தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்கள் அரசுடன் இணைந்து இயங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தமிழ் மொழியில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்தாவின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள பிரித்தானியா தமிழ் பேரவையின் மூத்த உறுப்பினர் சுரேன் சுரேந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மகிந்தா இதனை எப்போதும் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான, இனவேற்றுமை கொண்ட அரச தலைவராக மகிந்தா தன்னை உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் மக்கள் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கொண்டாடவில்லை. வடக்கு – கிழக்கில் அவர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவை அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மகிந்த பங்குபற்றிய முதலாவது வெளிப்படையான நிகழ்வு இதுவாகும். ஆனால் அவருக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவை அவர் தாக்கி வருகின்றார். சுதந்திரதினத்திற்கு முன்னர் 5,000 இற்கு மேற்பட்ட பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள வீதிகளில் இறங்கி தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். அரச தலைவரை தேர்ந்தெடுக்கும் மக்களின் உரிமைகளை மகிந்தா கொள்ளையடித்துள்ளதாக பொன்சேகா அங்கு பேசும் போது தெரிவித்திருந்தார். அவர் உரையாற்றும் போது அவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டு பின்னர் எரிந்த நிலையில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகளையும் காண்பித்தார். என்ன விலை கொடுத்தாவது உங்களின் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம். திருடிய வெற்றியை கொண்டாட நாம் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா மறுத்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரங்களின் போது நடைபெற்றவை தொடர்பில் நான் நிறைவடையவில்லை, ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததுடன் முடிவுகளும் உண்மையானவை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட காலம் வன்முறை மிக்கதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்போது 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததாகவும், சிறு சம்பவங்களே நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் மேற்கொண்டு அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த மகிந்த முயன்று வருகின்றார். மகிந்தாவின் அடுத்த 6 வருடங்களுக்கான பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. மகிந்தா இரு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தியிருந்தார். ஊடகத்துறையினர் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்தா அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேர்தலின் பின்னர் பல இணையத்தள ஊடகங்கள் மீது தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரச தலைவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார், ஆனால் மிக அதிகளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு அரசு உட்பட்டு வருகின்றது என நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு மறுநாள் சில அதிகாரிகள் தமது அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முனைந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தா அரசு 14 மூத்த இராணுவ அதிகாரிகளை பதவி விலக்கியுள்ளது. அவர்கள் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் என அரசு கூறுகின்றது. அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் 15 பேர் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொன்சேகாவின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். டசின் கணக்கான படை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சார்பானவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு மறுநாளில் இருந்து பொன்சேகா மீதும் அவரின் ஆதரவாளர்கள் மீதும் அரசு பல குற்றங்களை சுமத்தி வருகின்றது. அவர்கள் அரச தலைவரை கொலை செய்ய முயன்றதாகவும், இராணுவப்புரட்சியை மேற்கொள்ள முயன்றதாகவும் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை நீதிமன்றத்தின் மூலம் பெறப்போவதாக பொன்சேகா தெரிவித்து வருகின்றார். ஆனால் அதற்கான செயல்திட்டங்களை அவர் இன்றுவரை ஆரம்பிக்கவில்லை. மகிந்த நேர்மையாக வெற்றிபெற்றிருந்தால் ஏன் என்னை கண்டு அஞ்சுகிறார்? ஏன் எங்களின் சுதந்திரமாக நடமாட்டங்களை தடுக்கிறார். ஏன் எனது ஆதரவாளர்களை கைது செய்கிறார்? இந்த கேள்விகளை அவர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் கேட்டிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக