வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

மீள முடியுமா?

உலகப் பொருளாதாரத்துக்குத் தலைமை தாங்குகிறதோ இல்லையோ,​​ அதை வழிநடத்துவது என்னவோ அமெரிக்காதான்.​ சர்வதேச வர்த்தகமும்,​​ பங்குச் சந்தைகளும் அமெரிக்க டாலரின் மதிப்புக்கேற்ப அவ்வப்போது மாறுவதுதான் அதற்குக் காரணம்.​ அப்படியிருக்க பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்க நிலையில் இருந்த அமெரிக்கத் தொழில்துறைக்குப் புத்துயிர் ஊட்டவும்,​​ பொருளாதார நடவடிக்கைகளுக்குப் புதிய திசைவேகம் அளிக்கவும் அந்த நாட்டு பட்ஜெட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் அதிபர் ஒபாமா. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது,​​ அமெரிக்கத் தொழில்,​​ வர்த்தகத் துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது,​​ ஏழை,​​ நடுத்தர மக்களின் துயரங்களைக் குறைக்கும் விதமாக,​​ ​ வரிச்சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு இதுவரை இருந்திராத அளவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.​ பற்றாக்குறை அளவு 1.56 டிரில்லியன் டாலர்களாகும்.​ மொத்த பட்ஜெட் மதிப்பு 3.83 டிரில்லியன் டாலர்களாகும்.​ ​(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி.​ ஒரு டாலருக்கு இப்போதைய சராசரி மதிப்பு சுமார் 46 ரூபாய்.) மொத்த பட்ஜெட் மதிப்பில் கிட்டத்தட்ட சரிபாதி பற்றாக்குறையாக இருக்கும் அளவுக்குப் பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.​ லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,​​ அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் தேவைப்படும் அடித்தள கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும்,​​ மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களைப் பெருக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி சோதனை நடத்தும் "நாசா'வின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​ இதற்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான டாலர்களை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.​ அதேசமயம்,​​ இனி விண்வெளி ஆய்வுகளுக்காக நாசா நேரடியாகச் செலவழிப்பதற்குப் பதில் விண்வெளி வாகனங்கள்,​​ ஆய்வுக்கருவிகள் ஆகியவற்றை அமெரிக்காவின் தனியார் நிறுவனங்கள் மூலமே தயாரித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ராணுவத்துக்கான செலவுகளைக் குறைக்கவோ,​​ மாற்றவோ முடிவு செய்யப்படவில்லை.​ அமெரிக்காவின் பெரிய தொழில் நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.​ அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே இந்த நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டுதான் வகுக்கப்படுகிறது என்றுகூட அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு.​ எனவே அந்த நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.​ ​ ​ ​ ​ அரசுக்கு வேண்டிய வருவாயைப் பெருக்க,​​ பெரிய தொழில்துறைகளின் வருவாய் மீதும்,​​ ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர்களுக்கு மேல் ஈட்டும் தனிநபர்கள் மீதும் கூடுதலாக வரி விதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.​ ​ முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்க அரசால்,​​ அந்த முறையைக் கைவிடவே முடியாது.​ உலகின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக சர்வதேச அரங்கில்,​​ தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப கூடுதல் செலவுகளையும் தவிர்க்க முடியாது.​ இவ்விரு நிரந்தர அம்சங்கள் தொடரும்போது இப்படிப்பட்ட பட்ஜெட்தான் சாத்தியம்.​ ​ அதேவேளையில் வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவு,​​ நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பது எப்படி என்ற வழிமுறைகளில் இனி அதிக கவனம் செலுத்தப்படக்கூடும். வெளிப்பணி ஒப்படைப்பு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சலுகைகள் குறைப்பு,​​ வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு என்ற அறிவிப்பும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.​ அரசின் செலவுகளில் அதிகம் பலன் தராதவை என்று அனுபவப்பூர்வமாக உணரப்பட்டவற்றைக் குறைக்கவும்,​​ வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடியவற்றை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளால் பலன் ஏற்படாது என்பவர்களும் இவை போதாது என்பவர்களும் உண்டு.​ ஆனால் இப்போதைக்கு முடிந்தது இவைதான் என்று அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகர்கள் தீர்மானித்திருப்பதையே பட்ஜெட் எதிரொலிக்கிறது. பராக் ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் மட்டும் அல்ல,​​ உலக அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.​ அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்,​​ ஆப்பிரிக்க,​​ ஆசியக் கண்டங்களில் உள்ள வறிய நாடுகளுக்கு உதவுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.​ இராக்,​​ ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறைப்பார் என்றும் கூறப்பட்டது.​ இவை எதுவுமே நடைபெறவில்லை. அவர் பதவிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்ததை ஒட்டி மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் அவருடைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்திருப்பது தெரியவந்தது.​ இந்த பட்ஜெட் தாற்காலிகமாக அதிபர் ஒபாமாவின் செல்வாக்குச் சரிவைச் சற்றுத் தடுத்து நிறுத்துமே தவிர,​​ நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதுதான்.​ மக்களின் ஆடம்பர மோகத்தையும் திட்டமே இல்லாமல் செலவழிக்கும் மனோபாவத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் ​ கொள்ளை லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள்தான் அமெரிக்க அரசின் நிதிக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன.​ குடியரசுத் தலைவரும் ஆட்சியும் மாறினாலும்,​​ தனியார் முதலாளிகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கையை அமெரிக்காவில் மாற்றிவிட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.​ ​ சேமிப்பது என்கிற எண்ணமே இல்லாமல் மக்களைச் செலவழிக்கத் தூண்டும் நுகர்வுக் கலாசாரம் தொடரும்வரை அமெரிக்கா தனது நிதி நெருக்கடியிலிருந்து முற்றிலுமாக மீள முடியுமா என்பது சந்தேகம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக