சனி, 6 பிப்ரவரி, 2010

மீண்டும் படுகொலைகள் ஆரம்பம் – 2ம் கட்ட இன அழிப்பு தொடங்கியுள்ளதா?

சிறீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முள்ளிவாய்க்கால் பெரும் இன அழிப்பிற்குப் பின்னர் சற்று ஓய்வடைந்திருந்த இந்தப் படுகொலை மற்றும் காணாமல் போதல்கள் தற்போது மீண்டும் வெளிப்படையாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவற்றில் சில படுகொலைகள் வெளிவருகின்றபோதும், பல வெளியுகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது. வன்னியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா தடுப்பு முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டு தற்போது வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ வலயங்களுக்கு நடுவில் சிறு சிறு குழுக்களாக குடியமர்த்தப்பட்டுள்ள மக்களில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களை இனங்கண்டு, அவர்களை மர்மமான முறையில் படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இவ்வாறான படுகொலைகள் வெளியில் தெரியவராதவாறு மறைக்கும் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. . விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போல் மக்களோடு கலக்கவிட்டுள்ள சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் சிறீலங்காவிற்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தமிழர்களை இந்த மக்களோடு பழகவிட்டு அவர்களிடம் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் இருக்கின்றார்களா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. . அத்துடன், யாழ்குடாவில் சென்று தங்கியுள்ள வன்னி மக்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்த தகவல்கள் வெளிவராதவாறு அச்சுறுத்தல்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இன்னொரு பக்கம் வெளிப்படையாகவும் படுகொலைகளும், கடத்தல்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. . இதுவரை ஏழு பேர் படுகொலையானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது. இச்சம்பவம் கடந்த 2ம் திகதி செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டுள்ளார். ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த பாலச்சந்திரன் தங்கதேவி என்ற 30 வயதான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். . இதேவேளை, யாழ்ப்பாணம், கொழும்புத் துறை நெடுங்குளம் வீதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெடுங்குளம் வீதியைச் சேர்ந்த எஸ்.சிவராசா (30 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கடந்த 3ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் உடலிலும் தலையிலும் பலத்த அடி காயங்கள் காணப்படுகின்றன. கொலை செய்யப்பட்டுப் பின்னர் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். . இதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற 16 வயது இளைஞன் கடந்த 26ம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்துபோயிருந்த கடத்தல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. . இதற்கிடையே, கிளிநொச்சியில் தனது உறவினரை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவரும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்ற இளைஞர் இது வரையிலும் காணவில்லையென உறவினர் தேடியுள்ளனர். இந்நிலையில் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள இளைஞன் வேலுப்பிள்ளை சசிரூபன் (30 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். . கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் அருகேயுள்ள உறவினர் வீட்டுப் பகுதியில் கிணற்றுக் கட்டில் இரத்த கறை படிந்து இருந்ததையடுத்து கிணற்றினுள் பார்த்த போது அவ் இளைஞன் கல்லில் கட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்ததாக அந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். . அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்தே பெண் ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்தபோது இவ்வாறான படுகொலைகளுக்கும் காணாமல்போதல்களுக்கும் அவர்கள் மீது குற்றம்சாட்டிய சிறீலங்கா, தற்போது முழுமையாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெறும் படுகொலைகள் காணாமல்போதல்கள் குறித்து மௌனம் காப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிறீலங்கா இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. தேர்தலுக்காக கெடுபிடிகளைக் குறைத்திருந்த படையினர் தற்போது மீண்டும் கெடுபிடிகளையும் சோதனைகளையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் பல படுகொலைகளும், காணாமல்போதல்களும் இடம்பெற வழிவகுத்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக