சனி, 6 பிப்ரவரி, 2010

கருணாவின் ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் இணைப்பாளரை பிள்ளையான் அச்சுறுத்தினார்

மட்டக்களப்பு ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேர்தல் செயற்பாடுகளின் பின்னரும் தங்கியிருந்த கருணாவின் ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் இணைப்பாளர் ஆகியோரை கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது ஆயுதக் குழுவுடன் சென்று அச்சுறுத்தியுள்ளதுடன் அலுவலகத்திலிருந்த சொத்துக்களும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தமது நாளிதழுக்குத் தெரிவித்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது ஊடகச் செயலாளர் ஜூலியன் ஜயபிரகாஷ் மற்றும் இணைப்பாளர் அதிகாரி ரி.ஆனந்தராஜா ஆகியோர் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நானும் எனது அலுவலகப் பணியாளர்களும் தேர்தல் பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியின் ஆலோசனையின்படி ஆளுநர் அலுவலகத்தில் தங்கியிருந்தோம். ஜனவரி 26ம் திகதி வாக்கெடுப்பு முடிந்த பின்னர் நானும் எனது பணியாளர்களில் ஒருசிலரும் கொழும்பிற்கு வந்துவிட்டோம். இதன்பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் எனது ஊடகச் செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் தமது பணிகளை முன்னெடுத்து வந்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலை மையமாக வைத்தே அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். இவர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 3ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையார் அவரது ஆயுதக் குழுவுடன் சென்று எனது அதிகாரிகளை அச்சுறுத்தி அந்த அலுவலகம் தமக்கு (பிள்ளையானுக்கு) சொந்தமானதெனக் கூறி அந்த அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதுகுறித்து எனது அதிகாரிகள் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் என கருணா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக