சனி, 6 பிப்ரவரி, 2010

தேர்தல் தினத்தன்று நள்ளிரவு இடம்பெறவிருந்த இரத்தக்களரியில் இருந்து மயிரிழையில் தப்பியது தலைநகரம் - கொழும்பு ஊடகம்

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் அவருக்கு ஆதரவான சிங்க படையணியையும், கொமோண்டோ படையணியையும் அழித்து ஆட்சியை கைப்பற்ற சிறப்பு படையணியும், கஜபா படையணியும் தயார் நிலையில் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா இராணுவப்புரட்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரச ஊடகங்கள் தேர்தலின் பின்னர் பல நாட்கள் தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் இராணுவத்திற்குள் இருந்து அறியப்பட்டுள்ளது. சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா ராஜபக்சாவுக்கு தோல்வி ஏற்படலாம் என்ற கணிப்புக்கள் உருவாகியதை தொடர்ந்து சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக பாதுகாப்புச்சபை கூட்டங்களை மேற்கொண்டு வந்தது. தமது பதவியை எவ்வாறு தக்கவைக்கலாம் என அதில் ஆராயப்பட்டது. இறுதியாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் கடந்த மாதம் 24 ஆம் நாள் பாதுகாப்புச்சபை கூட்டம் கூட்டப்பட்டது. தேர்தலில் தோல்விடைந்தாலும் எவ்வாறு மகிந்த தனது பதவியை தக்கவைப்பது என்ற திட்டங்கள் அங்கு தீட்டப்பட்டன. வடபகுதியில் நிலைகொண்டிருந்த ஐந்து பற்றாலியன் சிறப்பு படையணிகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஐந்து பற்றாலியன்களையும் தலைமை தாங்குவதற்கு லெப். கேணல் ஹரேந்திரா வணசிங்கா நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் இராணுவத்தளபதி ஹமில்டன் வணசிங்காவின் மகனாவார். ஆனால் நித்தம்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வணசிங்கா தனது ஆதரவுகளை பொன்சேகாவுக்கு தெரிவித்திருந்தார். அதுவும் பின்னர் அரசின் திட்டத்தை வெளியில் கொண்டுவந்திருந்தது. இராணுவத்தின் அதிக போரிடும் வலுவுள்ள படையணியாக சிறப்பு படையணிகள் திகழ்வதால் அவை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்த படையணிகளுடன் பாதுகாப்பு செயலாளரின் படையணியான கஜபா றெஜிமென்ட், மற்றும் கவசப்படையணி ஆகியனவும் கொழும்புக் கொண்டுவரப்பட்டன. கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு படையணிகள் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு சீதுவை, குருவித்த, எம்பிலிப்பிட்டியா, பாணந்துறை, கொழும்பு குதிரைச்சவாரி திடல் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டிருந்தன. இந்த முழு நடவடிக்கைக்கும் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா நியமிக்கப்பட்டார். கடற்படையும், வான்படையும் உசார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த முழுநடவடிக்கையும் இராணுவத் தளபதியினால் திட்டமிடப்பட்டது. மகிந்தா தேர்தலில் வெற்றிபெறாது விட்டால், பொன்சேகா ஆட்சி அமைக்கும் போது அவருக்கு உதவியாக சிங்க றெஜிமென்ட் மற்றும் கொமோண்டோ படையணிகள் செயற்படலாம் என அரசு கருதியது. தென்னிலங்கை மக்களுடன் இணையும் இந்த படையணிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றுவதே சிறப்பு படையணி மற்றும் கஜபா படையணிகளின் திட்டம். அதாவது சிங்கப்படையணியை முற்றாக அழித்து ஆட்சியை கைப்பற்றுவதே அரசின் திட்டம். அவ்வாறு நடைபெற்றிருந்தால் கொழும்பில் கடந்த 27 ஆம் நாள் ஒரு இரத்தக்களரி ஏற்பட்டிருக்கலாம். எனினும் அரசின் இந்த திட்டங்களை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் எதிர்த்திருந்தனர். இந்த நடவடிக்கையில் பங்குகொள்ள வேண்டாம் என அவர்கள் லெப். கேணல் ஹரேந்திரா வணசிங்காவையும் எச்சரித்திருந்தனர். ஆனால் தன்னால் இராணுவத் தளபதியினதும், பாதுகாப்பு செயலாளரினதும் உத்தரவுகளை மீறமுடியாது என வணசிங்கா தெரிவித்திருந்தார். இவ்வாறு இந்த நடவடிக்கையை எதிர்த்த அதிகாரிகளையே தற்போது அரசு கைது செய்துள்ளதுடன், இராணுவத்தில் இருந்தும் நீக்கியுள்ளது இதனிடையே சிறீலங்கா இராணுவத்தில் உள்ள சிங்க றெஜிமென்ட் படையணியை விரைவில் கலைத்துவிடுவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக