சனி, 6 பிப்ரவரி, 2010

உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உதயன் சுடரொளி ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகசெய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழப்பாணத்தில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை ஊக்குவிப்பதில் யாழ் மாநகரசபை நிர்வாகம் முழு அளவில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் குடாநாட்டில் இருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதனையடுத்து ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் யாழ் மாநகர முதல்வராக உள்ள யோகேஸ்வரி பற்குணம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் சிங்கள வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்றது. அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிகக் கழகங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பலவும் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை முதல்வர் மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை ஆற்றத் தடுத்து வருகின்றார். இது தொடர்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து அதன் செய்தியாளர் ஒருவரிடம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாகவும் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனருடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. வலம்புரி நாளிதளின் ஆசிரியர் தலையங்கம் யாழ்ப்பாண நகரில் ஏற்பட்டுள்ள சனநெருக் கடியை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற பெருந்தொகை சிங்கள மக்கள்- அவர்களை ஏற்றிவருகின்ற வாகனங்கள் யாழ்ப் பாண நகரை ஆக்கிரமித்துக் கொள்ள, யாழ்ப்பாண நகர் மூச்சு விடமுடியாமல் திணகின்றது. இதற்கு மேலாக பொருட்களை ஏற்றி வரும் கொள்கலன்கள் நினைத்த பாட்டில் நினைத்த நேரத்தில் தாம் விரும்பும் வீதியால் பயணிக்கும் துன்பம் சொல்லுந்தரமன்று. இவை எல்லாம் எதற்காக என்ற கேள்விக்கு விடைகாண முடியாத பரிதாபம் தொடர்கிறது. பெருந்தொகையான சிங்கள மக்களின் வருகையால் யாழ். நகரம் பல்வேறு வகைகளில் பிர சினைகளை எதிர்கொள்கின்றது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எவரும் எங்கும் செல்ல முடியும் என்பது மனித உரிமையின் பாற்பட்டது.இதனை யாரும் எதிர்க்க முடியாது. அதே நேரம் அதிகரித்த மக்கள் தொகையினால் ஏற் படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை எவரும் மறுக்க வும் மாட்டார்கள். யாழ். நகரம் தாங்க முடியாத அளவில்-பெருந்தொகையாக வரும் சிங்கள மக்கள் துரையப்பா விளையாட்டரங்கு, ஆரியகுளப் பகுதி உள்ளிட்ட வெறுவெளிகளில் தங்குகின் றனர். இவ்வாறு தங்குபவர்களுக்கான மலசல கூட வசதிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீரின் கிடைப்பனவு என்பன குறித்துக் கவனம் செலுத்த முடியாத அளவில் நிலைமை உள்ளது. யாழ்ப்பாண மக்களை டெங்கு நோய் வஞ்சம் தீர்க்கும் இவ்வேளையில்,யாழ். நகரின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் ஆயின் நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, செங் கண்மாரி போன்ற தொற்றுநோய்களும் மக் களை சங்காரம் புரியத் தொடங்கிவிடும். எனவே யுத்தத்தால் அழிந்து போன யாழ்ப் பாணத்தையும், மனமுடைந்து போன தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக காணத்துடிக்கும் எமது அருமைச் சிங்களச் சகோதரர்களே! ஆறுதலாக-அவசரமின்றி யாழ்ப்பாணத்திற்கு வந்து போங்கள். நெருக்கடி நிலையால் ஏற்படக் கூடிய நோய் உங்களையும் தாக்கும் அல்லவா?பாவம் யாழ்ப்பாணம் மூச்சு விடமுடியாமல் திணறும் நிலைமையைப் புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக