சனி, 6 பிப்ரவரி, 2010

தமிழர்களின் பூர்வீகம், தாயகம் மீண்டும் தேர்தல் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும். இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார். ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன். ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர். இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம். தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது. எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக