சனி, 6 பிப்ரவரி, 2010

பெப்ரவரி முதல்வாரத்தின் முதல் மூன்று நாட்களில்

பெப்ரவரி முதல்வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மத்தியகிழக்கில் இறந்துள்ளனர் என இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இவர்கள் வெவ்வேறு விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 330 இலங்கைப் பெண்கள் இலங்கைக்கு சடலங்களாக திரும்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானோர் சித்திரவதைகளாலும், தற்கொலைகளாலும், விபத்துக்களாலும் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு லட்சம் பணிப்பெண்கள் வருடாந்தம் மத்திய கிழக்குக்கு மாத்திரம் செல்கின்றனர். குவைத், சவுதி அரேபியா, கட்டார், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 800,000 (எட்டு லட்சம்) பணிப்பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.இதை விட இத்தாலி, சைப்பிரஸ் இன்னும் சில ஆசிய நாடுகள் உட்பட பார்த்தால் சுமாராக ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள், பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இது இலங்கையின் சனத்தொகையில் 5 வீதமாகும். மொத்த இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 10 வீதமாகும். மத்திய கிழக்கில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை சராசரியாக 50,000 மட்டுமே என்றும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய வருவாயில் வெளிநாட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களின் வருவாய் முக்கியமான பங்கு வகிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக 1977இற்குப் பின் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எனும் தொழிற்பிரிவினர் உருவானார்கள். வருடாந்தம் ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயை ஏற்படுத்துகின்றனர் மத்திய கிழக்குக்குச் செல்லும் பணிப்பெண்கள். இந்தப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, மற்றும் காப்புறுதி, ஒப்பந்த மீறல்கள் என்பன குறித்து இலங்கை அரசாங்கம் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இலங்கை பெண்கள் இயக்கங்களால் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இலங்கை தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு சந்தையை இலங்கை இழந்துவிடும் என்கிற அச்சமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பல பெண் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக